வீட்டுக்கு வீடு தாவி 6 மணி நேரம் அட்டகாசம்: சிறுத்தை கடித்து குதறியதில் 4 பேர் படுகாயம்

0
329

நெல்லை திருமால்நகரில் இன்று அதிகாலை குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. சிறுத்தை கடித்ததில் 4 பேர்  படுகாயமடைந்தனர். 6 மணி நேர போராட்டத்துக்கு பின் வனத்துறையினர் சிறுத்தையை மடக்கி பிடித்தனர். நெல்லை  திருமால் நகர் பகுதியையொட்டி முத்தூர்  மலை உள்ளது. இன்று அதிகாலை 5 மணியளவில் இப்பகுதியை சேர்ந்த 25 பேர் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென உறுமல் சத்தம்  கேட்டது. சத்தம் வந்த பகுதியை பார்த்த போது, சிறுத்தை நின்றிருந்தது தெரிந்தது.

நெல்லை: நெல்லை திருமால்நகரில் இன்று அதிகாலை குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. சிறுத்தை கடித்ததில் 4 பேர்  படுகாயமடைந்தனர். 6 மணி நேர போராட்டத்துக்கு பின் வனத்துறையினர் சிறுத்தையை மடக்கி பிடித்தனர்.

நெல்லை  திருமால் நகர் பகுதியையொட்டி முத்தூர்  மலை உள்ளது. இன்று அதிகாலை 5 மணியளவில் இப்பகுதியை சேர்ந்த 25 பேர் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென உறுமல் சத்தம்  கேட்டது. சத்தம் வந்த பகுதியை பார்த்த போது, சிறுத்தை நின்றிருந்தது தெரிந்தது.

உடனே அலறியடித்துக் கொண்டு திருமால் நகரை நோக்கி ஓடினர். சிறுத்தை  அவர்களை விரட்டத் தொடங்கியது. திருமால் நகர் 1வது தெருவுக்குள் புகுந்தது. அங்கு வீட்டு வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்த பெண்கள் சிறுத்தையை  பார்த்து அலறியடித்து ஓடினர்.

தெருவுக்குள் சிறுத்தை புகுந்த தகவல் அறிந்ததும், அப்பகுதியில் ஏராளமான மக்கள் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் திரண்டு நிற்பதை  பார்த்த சிறுத்தை 1வது தெருவில் இருந்து 2வது தெருவுக்குள் புகுந்தது.

ஒவ்வொரு வீட்டின் காம்பவுண்ட் சுவர் வழியாக அடுத்தடுத்த வீடுகளுக்கு தாவியது.  உறுமிக் கொண்டே சிறுத்தை ஓடிச் செல்வதை பார்த்த மக்கள் பீதியுடன் சத்தம் போட்டனர். இதுகுறித்து வனத்துறை, தீயணைப்பு துறை, காவல்  துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

50க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் திருமால் நகருக்கு வந்தனர். தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் சம்பவ  இடத்துக்கு வந்து சிறுத்தையை உயிரோடு பிடிப்பதா அல்லது சுடுவதா என்று ஆலோசனை நடத்தினர்.

இதற்கிடையில், 3வது தெரு வழியாக ஓடிய சிறுத்தை அங்கு சில வீடுகளின் கதவுகளை உடைத்தது. இதனால் குழந்தைகள், பெண்கள் யாரும் வீட்டை விட்டு  வெளியே வர வேண்டாம் என்றும் வீட்டின் கதவுகளை பூட்டிக் கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறும் வனத்துறையினர் ஒலி பெருக்கியில் அறிவித்தனர்.

சிறுத்தையை பிடிக்க நெல்லை அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி இணைப் பேராசிரியர் டாக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையில் கால்நடை அலுவலர்கள்  திருமால் நகருக்கு வந்தனர். சிறுத்தையை பிடிக்க வியூகம் அமைக்கப்பட்டது. முதற்கட்டமாக ஊதுகுழல் மூலம் சிறுத்தை மீது மயக்க மருந்தை டாக்டர்  முத்துகிருஷ்ணன் தெளித்தார். அது சிறுத்தை மீது சரியாக படவில்லை.

மீண்டும் அதன் மீது மருந்தை தெளிக்க டாக்டர் முத்துகிருஷ்ணன் முயற்சித்த போது திடீரென பொதுமக்கள் நின்ற திசை நோக்கி சிறுத்தை பாய்ந்து வந்து  தாக்கியது. இதில் காடுவெட்டி பஞ்சாயத்து தலைவர் துரை என்ற ஆறுமுகம், வனத்துறை ஊழியர், தீயணைப்புத் துறை ஊழியர், போட்டோகிராபர் மீரான்கனி  ஆகியோர் காயமடைந்தனர்.

இவர்களில் படுகாயமடைந்த துரை ஆறுமுகத்தை பாளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பொதுமக்கள் மத்தியில் பாய்ந்து சென்ற புலி, அந்தப் பகுதியில் உள்ள சுப்பிரமணியன் என்பவரது வீட்டு கழிவறைக்குள் புகுந்து பதுங்கி கொண்டது.

உடனே வனத்துறையினர் அந்த கழிவறையின் கதவை பூட்டினர். மீண்டும் கால்நடை டாக்டர் முத்துகிருஷ்ணன் மயக்க மருந்தை ஜன்னல் வழியாக  செலுத்தினார். சிறுத்தையை உயிரோடு பிடிக்க கூண்டு வரவழைக்கப்பட்டு சுப்பிரமணியன் வீட்டு முன்பு வைக்கப்பட்டது.

அதனை வெளியே கொண்டு  வருவதற்கு வசதியாக அந்த வீட்டின் காம்பவுண்ட் சுவர் இடிக்கப்பட்டது. வலை, கயிறு உள்ளிட்டவைகளுடன் வனத்துறை மற்றும் கால்நடைத் துறை ஊழியர்கள்  தயாராக இருந்தனர். அப்போது டாக்டர் முத்துகிருஷ்ணன் கழிவறை கதவை திறந்தார். உடனே பாய்ந்து வெளியேறிய சிறுத்தை கூண்டுக்குள் சிக்கியது.  இதையடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், முத்தூர் மலைப்பகுதியில் புலி, சிறுத்தை நடமாட்டம் கிடையாது. இந்த மலையில் ஏராளமான மான்களும்,  முயல்களும், காட்டு ஆடுகளும் உள்ளன. இந்த இரைகளுக்காக களக்காடு முண்டந்துறையில் இருந்து இந்த சிறுத்தை வந்திருக்கலாம். சிறுத்தையின்  உருவத்தைப் பார்க்கும் போது அதற்கு 4 வயதிருக்கும் என்று கணிக்க முடிகிறதுÕ என்றார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.