ஈழப் போரின் இறுதி நாட்கள்-30: இறுதி யுத்தத்தில் வான் புலிகளுக்கு என்ன நடந்தது?-10

0
7331

வவுனியா பாதுகாப்பு படை காம்ப்ளெக்ஸ் மீது வான்புலிகள் நடத்திய தாக்குதலுக்கு பின், அடுத்த தாக்குதல், 2008-ம் ஆண்டு, அக்டோபர் 28-ம் தேதி நடந்தது. இம்முறை வான்புலி விமானங்கள் வன்னியில் இருந்து மேற்கு நோக்கி பறந்து, மன்னார் அருகேயுள்ள தள்ளாடி ராணுவ தளம்மீது, இரண்டு குண்டுகளை வீசிவிட்டு, தொடர்ந்து கொழும்பு நோக்கி பறந்தன. அங்கே கெலன்னிதிஸ்ஸ பவர் ஸ்டேஷன்மீது இரு குண்டுகளை வீசிவிட்டு, திரும்பின. இதில் தள்ளாடி ராணுவ முகாம் மீது வீசப்பட்ட குண்டுகள் பெரிய சேதம் எதையும் ஏற்படுத்தவில்லை. கெலன்னிதிஸ்ஸ பவர் ஸ்டேஷன்மீது வீசப்பட்ட குண்டுகள், கணிசமான சேதத்தை அந்த பவர் ஸ்டேஷனில் ஏற்படுத்தின. இதுதான், முதல் தடவையாக வான்புலிகளின் தாக்குதலால் கணிசமான அளவு சேதம் ஏற்பட்ட சம்பவம்..  (தொடர் கட்டுரை)
வவுனியா பாதுகாப்பு படை காம்ப்ளெக்ஸ் மீது வான்புலிகள் நடத்திய தாக்குதலுக்கு பின், அடுத்த தாக்குதல், 2008-ம் ஆண்டு, அக்டோபர் 28-ம் தேதி நடந்தது. இம்முறை வான்புலி விமானங்கள் வன்னியில் இருந்து மேற்கு நோக்கி பறந்து, மன்னார் அருகேயுள்ள தள்ளாடி ராணுவ தளம்மீது, இரண்டு குண்டுகளை வீசிவிட்டு, தொடர்ந்து கொழும்பு நோக்கி பறந்தன.

அங்கே கெலன்னிதிஸ்ஸ பவர் ஸ்டேஷன்மீது இரு குண்டுகளை வீசிவிட்டு, திரும்பின.

இதில் தள்ளாடி ராணுவ முகாம் மீது வீசப்பட்ட குண்டுகள் பெரிய சேதம் எதையும் ஏற்படுத்தவில்லை. கெலன்னிதிஸ்ஸ பவர் ஸ்டேஷன்மீது வீசப்பட்ட குண்டுகள், கணிசமான சேதத்தை அந்த பவர் ஸ்டேஷனில் ஏற்படுத்தின.

இதுதான், முதல் தடவையாக வான்புலிகளின் தாக்குதலால் கணிசமான அளவு சேதம் ஏற்பட்ட சம்பவம். இந்த சேதம், ராணுவ தளம் ஒன்றில் ஏற்படவில்லை, நாட்டுக்கு மின்சாரம் வழங்கும் பவர் ஸ்டேஷனில் ஏற்படுத்தப்பட்டது.

இந்த தாக்குதலில், மற்றொரு ‘முதல் தடவை’ விவகாரமும் உண்டு.

வான்புலி விமானங்கள், கெலன்னிதிஸ்ஸ பவர் ஸ்டேஷன்மீது இரு குண்டுகளை வீசிவிட்டு திரும்பிக்கொண்டு இருந்தபோது, முதல் தடவையாக, இலங்கை விமானப்படையின் போர் விமானம் ஒன்று, இந்த விமானங்களை துரத்தியது.

வான்புலி விமானங்கள் மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி செல்கின்றன என்ற தகவல், தள்ளாடி ராணுவ முகாமில் இருந்து, கொழும்பு தலைமையக ஆபரேஷன் சென்டருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இலங்கை விமானப்படையின் F7-G இன்டர்செப்டர் விமானம் ஒன்று, கட்டுநாயக விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு, வான்புலி விமானங்களை தேட தொடங்கியது.

F7-G இன்டர்செப்டர் விமானத்தில், வானில்-இருந்து-வானுக்கு ஏவும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டு இருந்தன.

கெலன்னிதிஸ்ஸவில் இருந்து வன்னி நோக்கி சென்று கொண்டிருந்த வான்புலி விமானத்தை, F7-G போர் விமானத்தை செலுத்திய விமானி கண்டுவிட்டார்.

அதையடுத்து வான்புலி விமானத்துக்கு மேலே பறந்து கடந்த F7-G விமானம், வான்புலி விமானத்தின் பின்புறம் சென்று வட்டமடித்து திரும்பியது. இப்போது, வான்புலி விமானம் F7-G விமானத்தின் பயரிங் ஸ்பாட்டில் வந்தது. ஏர்-டு-ஏர் ஏவுகணை சிஸ்டத்தை இயக்கிய F7-G விமானி, அந்த சிஸ்டத்தில், வான் புலி விமானத்தை லாக் செய்ய முயன்றபோது-

மிசைல் சிஸ்டம் ‘லாக்’ செய்யவில்லை.

F7-G விமானத்தின் ஏவுகணை சிஸ்டம், எப்படி இயங்குகிறது என்றால், வெப்பத்தை வைத்தே இலக்கை நோக்கி ஏவுகணையை ஏவும் விதத்தில்!

அதாவது, இலக்கு வைக்கப்பட வேண்டிய விமானத்தில் இருந்து வெப்பம் வெளியேறும் அல்லவா? ஏவுகணை உள்ள விமானம், மிசைல் சிஸ்டத்தை இயக்கியதும், இலக்கு விமானத்தின் வெப்ப புள்ளியை இந்த சிஸ்டம் ஆட்டோமேட்டிக்காக தேடும். அந்தப் புள்ளி உணரப்பட்டதும், சிஸ்டம் அந்த புள்ளியில் லாக் ஆகும். அதன்பின் ஒரு பட்டனை அழுத்தினால், ஏவுகணை, அந்த வெப்பப் புள்ளியை தேடிச் சென்று மோதி வெடிக்கும்.

இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், இலக்கை சிஸ்டம் ‘லாக்’ செய்யாவிட்டால், ஏவுகணையை ஏவும் பட்டன் செயல்படாது!

F7-G விமானம், வான் புலி விமானத்தை சில தடவைகள் வட்டமடித்து, மிசைல் சிஸ்டத்தை லாக் செய்ய முயன்றது. ஒரு தடவைகூட லாக் செய்ய முடியவில்லை. வான் புலி விமானம், தப்பித்து சென்று விட்டது.

இது எப்படி சாத்தியம்?

யுத்தம் முடிந்த இறுதி நாட்களில் (2009-ம் ஆண்டு பிப்ரவரி 20), வான்புலி விமானங்கள் இரண்டும் சுட்டு வீழ்த்தப்பட்ட போதுதான், அவற்றை ஆராய்ந்ததில், வான்புலிகள் செய்திருந்த ஒரு தந்திரம் என்னவென்று தெரியவந்தது.

இந்த ஏவுகணைகள் வெப்பத்தை (heat source) நோக்கி செல்லும் வகையில் உள்ளது அல்லவா? அந்த சிஸ்டத்தை ஏமாற்ற வான்புலிகள் ஒரு தந்திரம் செய்திருந்தனர். தமது விமானங்களில் இருந்து வெப்பம் வெளியேறும் திசையை, விமானத்தின் முன் பகுதியை நோக்கி திருப்பி விட்டிருந்தனர்.

வான்புலி விமானத்தின் பின்புறமாக இருந்த exhaust out அடைக்கப்பட்டு, அந்த பைப்பில் இருந்து மற்றொரு எக்ஸ்டென்ஷன் பைப் தொடுக்கப்பட்டு, முன்புறம் திருப்பி விடப்பட்டு இருந்தது.

சுமார் 1 அடி நீளத்துக்கு வெளியே நீட்டிக்கொண்டு இருந்த இந்த பைப் மூலம், விமானத்தில் இருந்து வெளியேறிய வெப்பம், விமானத்துக்கு முன்புறமாக வெளியேறியது.

இதனால், இலங்கை விமானப்படை விமானம், வான்புலி விமானத்துக்கு பின்னே நின்று டார்கெட் பண்ண முயன்றபோது, மிசைல் சிஸ்டம் லாக் ஆகவில்லை. லாக் ஆவதற்கு heat source போதாது!

யுத்தம் முடிந்த பின்னரே, இந்த தந்திரத்தை இலங்கை விமானப்படையினர் தெரிந்து கொண்டனர்.

யுத்தம் முடிந்தபின் இலங்கை விமானப்படை அதிகாரி ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தபோது, “இந்த தந்திரம் ஒன்றுக்காகவே, வான்புலிகள் எதையாவது சாதித்திருக்க வேண்டும்!” என்றார், ஆச்சரியத்துடன்.

ஆனால், இறுதிவரை எதையும் சாதிக்க முடியவில்லை.

இப்படி, பல விஷயங்களையும் நுணுக்கமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட வான் புலி தாக்குதல்கள் ஏதும், புலிகளுக்கு பெரிய பலனை கொடுக்கவில்லை என்பதை கவனித்தீர்களா? காரணம், ஒவ்வொரு முறையும், அதிஷ்டம் அவர்களை கைவிட்டது!

வான்புலிகளின் 1-வது தாக்குதலில் புலிகளுக்கு அதிஷ்டம் கைகொடுக்கவில்லை என்பதை முதலில் கவனியுங்கள்.

2007-ம் ஆண்டு மார்ச், 25-ம் தேதி அதிகாலை அந்த தாக்குதல் நடந்தபோது, வான்புலிகளின் விமானங்கள் அப்போதுதான் முதல் தடவையாக தாக்குதலுக்கு பறந்து வந்தன. இதனால், தரையில் ராணுவம் அதற்கு தயாராகவே இல்லை. விமான எதிர்ப்பு துப்பாக்கிகளும் கிடையாது.

புலிகளின் விமானத்தை கண்ட பிரமிப்பில் இருந்தனர் ராணுவத்தினர். சுருக்கமாக சொன்னால், அந்த தாக்குதலுக்கு வந்த இரு வான்புலி விமானங்களுக்கும், தரையில் எந்த ஆபத்தும் கிடையாது. நிதானமாக பறந்து குண்டு வீசலாம் என்ற பிளஸ்-பிளஸ் நிலை!

இரு விமானங்களும் 4 குண்டுகளை, கட்டுநாயக விமானப்படை தளத்தில் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ள ஹாங்கரின்மீது போட வேண்டும் என்பதே திட்டம்.

ஆனால், புலிகளுக்கு அதிஷ்டம் கைகொடுக்கவில்லை.

எப்படியென்றால், வான்புலி விமானிகள் மேலேயிருந்து பார்த்தபோது, ஒரே மாதிரியான ஷேப்பில் நாலைந்து ஹாங்கர்கள் தெரிந்ததில், அவற்றில் இரு ஹாங்கர்களை தேர்ந்தெடுத்து குண்டு வீசினார்கள். இவர்கள் குண்டுவீசியது, விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட ஹாங்கர் அல்ல.

ஒரு பில்டிங், ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டிருந்த ஹேங்கர், மற்றையது, விமானப்படையின் விமானங்களை திருத்தும் இஞ்சினியரிங் ஹாங்கர்!

இந்த இரு பில்டிங்குகள் மீது வான்புலிகளின் இரு விமானங்களும் தலா 2 குண்டுகளை வீசின. தரையில் விழுந்த 4 குண்டுகளில், 3 குண்டுகளே வெடித்தன. அவைகூட, இந்த ஹேங்கர்களை முழுமையாக அழிக்காமல், சற்றே வெளியே விழுந்தன.

பில்டிங்குகளுக்கு வெளியே நின்றிருந்த 3 விமானப்படையினர் கொல்லப்பட்டனர், 14 பேர் காயமடைந்தனர். முதலாவது ஹேங்கருக்குள் இருந்த ஹெலிகாப்டர்களுக்கு சேதம் ஏதுமில்லை. இரண்டாவது இஞ்சினியரிங் ஹேங்கருக்குள் இரவு நேரங்களில் விமானங்களை நிறுத்தி வைப்பது வழக்கமில்லை.

அவர்கள் போட்ட குண்டுகள் மட்டும் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த ஹேங்கரிலும் விழுந்து, அந்த குண்டுகளும் சக்திவாய்ந்த குண்டுகளாக இருந்திருந்தால், யுத்தத்தின் போக்கே மாறி போயிருக்கும்.

யுத்தத்தின் போக்கு எந்தளவுக்கு மாறியிருக்கும் தெரியுமா? யுத்தமே நின்று போயிருக்கும்!

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் ராணுவத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம், இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷே. கடந்த 2012-ல் வெளியான கோத்தாவின் யுத்தம் (Gota’s War) என்ற புத்தகத்தில், வான்புலிகளின் முதலாவது தாக்குதல் பற்றி எழுதப்பட்டுள்ளதை பாருங்கள்:

The entire military establishment was shaken by this attack. Due to sheer luck, the LTTE planes had failed to find their target. If they had been successful, this would have been a war-terminating event and, all the gains after Mavilaru would have been wiped out at a single stroke.

“அந்த ஒரு அடியில், முழு யுத்தமுமே நின்றிருக்கும்” என கூறப்பட்டுள்ள அந்த ‘ஒரு அடியில்’ புலிகளுக்கு அதிஷ்டம் கைகொடுக்கவில்லை. அதையடுத்து நடந்த ஒவ்வொரு வான்புலி தாக்குதலிலும், அதிஷ்டம் கைகொடுக்கவில்லை.

24 ஏப்ரல் 2007-ல், யாழ்ப்பாணம், பலாலி ராணுவத் தளத்தில் குண்டு விழாமல், மயிலிட்டி கடற்கரையில் வீழ்ந்தது. 29 ஏப்ரல் 2007-ல், இரு எண்ணை சேகரிப்பு நிலையங்கள் மீது வான்புலிகளால் வீசப்பட்ட குண்டுகள், வெளியே விழுந்தன.

26 ஆகஸ்ட் 2008-ல் திரிகோணமலை கடற்படை தளம்மீது போடப்பட்ட குண்டுகளும் குறி தவறி வெளியே விழுந்தன.

இறுதியில் நாம் கடந்த அத்தியாயத்தில் பார்த்த வவுனியா கூட்டுப்படை காம்ப்ளெக்ஸ் தாக்குதலிலும், அதிஷ்டம் காலை வாரியது.

ஒரு தாக்குதலில் அதிஷ்டம் தவறலாம். ஆனால், ஒவ்வொரு தாக்குதலிலும் அதிஷ்டம் கைகொடுக்காதது ஏன்?

உங்களில் எத்தனை பேர் நம்புவீர்களோ தெரியாது, அதற்கு ஆன்மீகத்தில் ஒரு காரணம் உள்ளது.

யுத்தத்தின் இறுதி நாட்களில், தம்முடன் இருந்த மக்களின் ‘ஆத்ம பலத்தை’ விடுதலைப் புலிகள் இழந்திருந்தனர். 2008-ம் ஆண்டில் இருந்தே, வன்னியில் இள வயதினரை கட்டாயமாக பிடித்துச் சென்று ஓரிரு நாட்கள் பயிற்சி கொடுத்து, யுத்த முனைகளில் நிறுத்தினார்கள்.

அந்த குழந்தைகளின் பெற்றோர் அழுது புரண்டு கொடுத்த சாபங்கள், நிச்சயமாக புலிகளின் ஆத்ம பலத்தை உருக்குலைய வைத்திருக்கும்.

கட்டாயமாக பிடித்துச் செல்லப்பட்ட இளையவர்கள், ஒன்றோ, இரண்டோ அல்ல, ஆயிரக்கணக்கில்!

யுத்த முனைக்கு கொண்டு செல்லப்படும் இளையவர்களின் உடல்களை, 50, 100 என்ற எண்ணிக்கையில், ட்ராக்டர்களில் கொண்டுவந்து ஒரு இடத்தில் இறக்குவார்கள். பெற்றோர்கள் விரும்பினால், போய் எடுத்துச் சென்று இறுதிச் சடங்குகளை செய்யலாம். இல்லாவிட்டால், புலிகளே புதைத்து விடுவார்கள்.

உயிருடன் இழுத்துச் செல்லப்பட்ட குழந்தைகளை,  ட்ராக்டரில் கொண்டுவந்து இறக்கப்பட்ட உடல்களில் தேடி எடுத்துச் சென்ற பெற்றோர்கள்,  புலிகளை மனம் குளிர வாழ்த்தி கொண்டா சென்றிருப்பார்கள்?

தமிழ் மக்களை காப்பாற்ற ஆயுதம் தூக்கியதாக சொன்னார்கள் புலிகள். அந்த புலிகளிடம் இருந்து தமது குழந்தைகளை காப்பாற்ற, ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் படாத பாடு படவேண்டியிருந்தது!

அவர்களின் சாபம், 2008-ம் ஆண்டுக்குப்பின், புலிகளின் ஒவ்வொரு முயற்சியையும் குப்புற தள்ளி, குழியும் பறித்தது. (தொடரும்)

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.