ஈழப் போரின் இறுதி நாட்கள்-29: இறுதி யுத்தத்தில் வான் புலிகளுக்கு என்ன நடந்தது?-9

0
7626

வான்புலிகள் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதல்கள், கடந்த அத்தியாயத்தில் கூறப்பட்ட திரிகோணமலை கடற்படைத்தளம் மீதான தாக்குதல்வரை பெரிதாக எந்த வெற்றியையும் விடுதலைப் புலிகளுக்கு கொடுக்கவில்லை. இதனால், அடுத்த தாக்குதல் வேறு விதமாக திட்டமிடப்பட்டது. தரையிலும், வானிலும் இருந்து ஒரே இலக்கை தாக்கும் திட்டம் அது. 2008-ம் ஆண்டு, செப்டெம்பர் 9-ம் தேதி, வவுனியா என்ற இடத்தில் இருந்த பாதுகாப்பு படை காம்பிளெக்ஸ் மீது நடத்தப்பட்டது அந்த தாக்குதல். வவுனியா நகரில், இலங்கை ராணுவத்தின் 3 பாதுகாப்பு படைகளுக்கு தனித்தனியே தளம் இல்லாமல், மூன்றும் ஒரே இடத்தில், ஒரு காம்ப்ளெக்ஸில் இருந்தது. ராணுவம், விமானப்படை, போலீஸ் ஆகிய மூன்று தளங்களும் அந்த காம்ப்ளெக்ஸ் பில்டிங்கில் இருந்தன (வவுனியாவில் கடல் இல்லை என்பதால், கடற்படை அங்கில்லை).

வான்புலிகள் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதல்கள், கடந்த அத்தியாயத்தில் கூறப்பட்ட திரிகோணமலை கடற்படைத்தளம் மீதான தாக்குதல்வரை பெரிதாக எந்த வெற்றியையும் விடுதலைப் புலிகளுக்கு கொடுக்கவில்லை. இதனால், அடுத்த தாக்குதல் வேறு விதமாக திட்டமிடப்பட்டது. தரையிலும், வானிலும் இருந்து ஒரே இலக்கை தாக்கும் திட்டம் அது.

2008-ம் ஆண்டு, செப்டெம்பர் 9-ம் தேதி, வவுனியா என்ற இடத்தில் இருந்த பாதுகாப்பு படை காம்பிளெக்ஸ் மீது நடத்தப்பட்டது அந்த தாக்குதல்.

வவுனியா நகரில், இலங்கை ராணுவத்தின் 3 பாதுகாப்பு படைகளுக்கு தனித்தனியே தளம் இல்லாமல், மூன்றும் ஒரே இடத்தில், ஒரு காம்ப்ளெக்ஸில் இருந்தது. ராணுவம், விமானப்படை, போலீஸ் ஆகிய மூன்று தளங்களும் அந்த காம்ப்ளெக்ஸ் பில்டிங்கில் இருந்தன (வவுனியாவில் கடல் இல்லை என்பதால், கடற்படை அங்கில்லை).

இந்த காம்பிளெக்ஸ் மீது விடுதலைப்புலிகளின் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த 10 பேர் தரை மார்க்கமாக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் தரையில் தாக்குதல் நடத்தும் அதே நேரத்தில் வானில் வான்புலி விமானம் வந்து குண்டு வீசி அந்த காம்ப்ளெக்ஸை அழிப்பதே திட்டம்.

இதற்காக 10 பேர் (தற்கொலை தாக்குதல் பிரிவு – கரும்புலிகள்), உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு, ஆயுதங்கள் வெடிகுண்டுகள் சகிதம் இரவு நேரத்தில் வவுனியா பாதுகாப்பு படை காம்ப்ளெக்ஸ் இருந்த இடத்தை சென்றடைந்தனர். புலிகள் என்று அடையாளம் தெரியாதபடி, இலங்கை ராணுவத்தின் சீருடையே அணிந்திருந்தனர்.

அங்குள்ள பாதுகாப்பு வேலிகளை வெட்டிக்கொண்டு காம்ப்ளெக்ஸ் இருந்த காம்பவுன்ட்டுக்குள்ளும் சென்று விட்டனர்.

premium-idஅடுத்த கட்டமாக இந்த 10 பேரும் பிரிந்து, அந்த காம்ப்ளெக்ஸ் பில்டிங்கின் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று குண்டு வைக்க வேண்டும்.

அதன்பின் அந்த குண்டுகள் அனைத்தும் ஒரே நேரத்தில் வெடிக்கும்போது, இவர்கள் தாம் வைத்திருக்கும் ஆயுதங்களாலும் தாக்கி, தம்மையும் வெடிக்க வைக்க வேண்டும்.

அதே நேரத்தில் வானில் வான்புலி விமானங்கள் இரண்டு வந்து, அந்த பில்டிங்மீது குண்டு வீச வேண்டும்.

இப்படியாக, தரையிலும், வானிலும் இருந்து ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தி, அந்த கூட்டுப் படைத் தளத்தை அழிக்க வேண்டும் என்பதுதான், போடப்பட்ட திட்டம்.

இந்த திட்டம், 10 கரும்புலிகளும் பாதுகாப்பு வேலிகளை வெட்டிக்கொண்டு காம்ப்ளெக்ஸ் இருந்த காம்பவுன்ட்டுக்குள் சென்றதுவரை சரியாக நடந்தது. அங்கிருந்து ஓசைப் படாமல் காம்பிளெஸ் பில்டிங்கின் வெவ்வேறு பகுதிகளுக்கு செல்லும் நேரத்தில் திட்டம் பிசகியது.

இவர்கள் 10 பேரும் காம்பவுன்ட்டுக்குள் ஊடுருவியதை, அங்கு காவலுக்கு நின்றிருந்த ராணுவத்தினர் கண்டு விட்டனர்.

அதையடுத்து அவர்கள் இவர்கள் மீது துப்பாக்கியால் சுட, இவர்கள் திருப்பிச்சுட, பில்டிங்கை நெருங்கும் முன்னரே, யுத்தம் தொடங்கிவிட்டது.

இந்த நேரத்தில்தான், முதலில் திட்டமிட்டது போல வான்புலிகள் விமானங்கள் குண்டுகளுடன் வானில் வந்து சேர்ந்தன.

மிகவும் தவறான டைமிங் அது! காரணம், 10 கரும்புலிகளும் காம்பிளெக்ஸ் பில்டிங்கின் வெவ்வேறு பகுதிகளில் குண்டுகளை வெடிக்க வைத்தபின் அந்த இடங்களில் எரியும் தீயை அடையாளமாக வைத்தே வான்புலி விமானங்கள் குண்டு வீச வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது.

ஆனால், இந்த 10 பேரும் பில்டிங்குக்குள் நுழையவே முடியாமல் வெளியே நின்று சண்டை போட்டுக்கொண்டு இருக்கும்போது, வான்புலி விமானங்கள் வந்துவிட்டன. இதனால், அந்த இருளில் எங்கே குண்டு போடுவது என வான்புலி விமானிகளால் அடையாளம் காண முடியவில்லை.

இந்த காம்பிளெக்ஸ் பில்டிங்கை அடியோடு தகர்க்க வேண்டும் என்பதே விடுதலைப் புலிகளின் திட்டம். அதற்கு காரணம் என்னவென்றால், இந்த பில்டிங்கில்தான் விமானங்களை கண்டுபிடிக்க இந்தியாவால் வழங்கப்பட்ட ஒரு ‘இந்திரா மார்க்-II’ ரேடார் இருந்தது. அத்துடன், விமான எதிர்ப்பு துப்பாக்கிகளும் இந்த பில்டிங்கில் பொருத்தப்பட்டு இருந்தன.

இதனால், கரும்புலிகள் முதலில் அந்த பில்டிங்கில் வெடிகுண்டுகளை வெடிக்க வைத்தபின்னரே, வான்புலி விமானங்கள் அங்கு வர வேண்டும். அப்படி நடந்திருந்தால், வானில் இருந்து பார்க்கும்போது, பில்டிங்கும் அடையாளம் தெரிந்திருக்கும், பில்டிங்கில் இருந்த விமான எதிர்ப்பு துப்பாக்கிகளும் குண்டுவெடிப்பில் அழிந்திருக்கும்.

ஆனால், வான்புலி விமானங்கள் அந்த இடத்துக்கு வந்தபோது, பில்டிங்கில் குண்டுவெடிப்பே நடக்கவில்லை.

அப்படியான நிலையில், வான்புலி விமானங்கள் அந்த பில்டிங்குக்கு மேலே பறப்பது மிக அபாயம். கீழேயிருந்து, விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் வெடிக்க தொடங்கிவிடும். விமானமே சுட்டு வீழ்த்தப்படலாம்.

இப்போது வான்புலி விமானங்களின் விமானிகளுக்கு இரண்டு சாய்ஸ்கள்தான் இருந்தன.

முதலாவது, கொண்டுவந்த குண்டுகளுடன் வந்த வழியே திரும்பி சென்றுவிடலாம். இரண்டாவது, கூட்டுப்படை காம்ப்ளெக்ஸ் பில்டிங்குக்கு அருகே போகாமல், அந்த காம்பவுன்டுக்குள் எங்காவது குண்டுகளை வீசிவிட்டு போகலாம்.

முதலாவது சாய்ஸில், கொண்டுவந்த குண்டுகளை மீதப்படுத்திக் கொள்ளலாம். இரண்டாவது சாய்ஸில் பலன் ஏதும் இல்லையென்றாலும், “வவுனியாவில் குண்டு வீசினோம்” என்று பிரசாரம் செய்யலாம்.

இரண்டாவது சாய்ஸை தேர்ந்தெடுத்த வான்புலி விமானிகள், கூட்டுப்படை காம்ப்ளெக்ஸ் இருந்த காம்பவுன்ட்டுக்குள் குத்துமதிப்பாக 4 குண்டுகளை வீசிவிட்டு சென்றனர். அதில் எந்த சேதமும் ஏற்படவில்லை.

இந்த விமானங்கள் திரும்பிச் சென்ற நிலையில், கீழே தரையில் என்ன நடந்தது?

அங்கு ஊடுருவி விட்டிருந்த கரும்புலிகள் 10 பேருக்கும், ராணுவத்தினருக்கும் நடந்த சண்டையில், அங்கிருந்த ஆயிரக்கணக்கான ராணுவத்தினரை எதிர்த்து 10 பேரால் என்ன செய்ய முடியும்?

10 கரும்புலிகளும் கொல்லப்பட்டனர். இவர்கள் தாக்கியதால், 11 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 31 பேர் காயமடைந்தனர்.

புலிகள் திட்டமிட்டபடி, கூட்டுப்படை காம்ப்ளெக்ஸூக்கோ, அதிலிருந்த இந்திய ரேடார்களுக்கோ, விமான எதிர்ப்பு துப்பாக்கிகளுக்கோ எந்த சேதமும் ஏற்படாமல், முடிந்து போனது அந்த ஆபரேஷன்.

இதுவரை நாம் எழுதிய எந்தவொரு வான்புலி தாக்குதலும், நிஜமான சேதத்தை – அல்லது திட்டமிடப்பட்ட சேதத்தை – ஏற்படுத்தவில்லை என்பதை கவனித்திருப்பீர்கள். அதற்கு முக்கிய காரணம் எது என்பதை கவனித்தீர்களா?

எந்தவொரு தாக்குதலிலும், புலிகளுக்கு அதிஷ்டம் கைகொடுக்கவில்லை!

உதாரணமாக, நாம் இப்போது கடைசியாக குறிப்பிட்ட தாக்குதலையே எடுத்துக் கொள்ளுங்கள். இதில் அதிஷ்டம் முழுமையாக கைவிட்டு விட்டது.

ஊடுருவிய 10 கரும்புலிகளும், அங்கு காவலுக்கு நின்றிருந்த ராணுவத்தினரின் கண்களில் படாமல் காம்ப்ளெக்ஸ் பில்டிங்கை நெருங்க முடிந்திருந்தால், கதையே தலைகீழாக மாறியிருக்கும்.

புலிகளின் திட்டப்படி, அந்த காம்ப்ளெக்ஸ், அதிலிருந்த ஆயிரக்கணக்கான ராணுவம், விமானப்படை, போலீஸார், இந்தியா வழங்கிய ரேடார், விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் அனைத்தும் அழிந்திருக்கும்.

இந்த அழிவில் இருந்து மீண்டு வர வேண்டும் என்றால், ராணுவம் வன்னியில் யுத்தத்தை நிறுத்த வேண்டி வந்திருக்கும். வன்னியில், யுத்த முனையில் பின்வாங்கிக் கொண்டிருந்த புலிகளுக்கு மூச்சுவிட்டு, தம்மை பலப்படுத்திக் கொள்ள கால அவகாசம் கிடைத்திருக்கும்.

இவ்வளவும், புலிகளை அதிஷ்டம் முழுமையாக கைவிட்டு விட்டதில், பலிக்கவில்லை.

வவுனியா தாக்குதலுக்கு முன் நடந்த எந்தவொரு வான்புலி தாக்குதலிலும்கூட புலிகளுக்கு அதிஷ்டம் கைகொடுக்கவில்லை.

ஒவ்வொரு தாக்குதலும்,  அதிஷ்டம் கை கொடுக்காத காரணத்தாலேயே தோல்வியடைந்தது என்பதை நாம் எழுதியதில் இருந்து கவனித்திருப்பீர்கள். இல்லாவிட்டால், கடந்த அத்தியாயங்களை ஒருமுறை பார்க்கவும்

ஒரு தாக்குதலில் அதிஷ்டம் தப்பலாம். ஆனால், ஒவ்வொரு தாக்குதலிலும் அதிஷ்டம் கைகொடுக்காதது ஏன்?

உங்களில் எத்தனை பேர் நம்புவீர்களோ தெரியாது.., அதற்கு ஆன்மீகத்தில் ஒரு காரணம் உள்ளது. அதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம். (தொடரும்)

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.