பொதுவேட்பாளராகப் போட்டியிட விக்னேஸ்வரன் மறுப்பு – ‘வடக்கு மக்களுக்கு சேவையாற்றுவதே இலக்கு’

0
308

சிறிலங்கா அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளராக முன்னிறுத்தப்படுவதை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார்.  தமக்கு அதிகாரப் பசி இல்லை என்றும் அவர் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றிடம், குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளராக முன்னிறுத்தப்படுவதை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார்.

தமக்கு அதிகாரப் பசி இல்லை என்றும் அவர் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றிடம், குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக சிவி.விக்னேஸ்வரனை ஏற்றுக்கொள்வதற்கு என்ன தடை உள்ளது என்ற அண்மையில், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியிருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும், இதுகுறித்த எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்று கேட்டிருந்தார்.

இதையடுத்து, விக்னேஸ்வரனை பொதுவேட்பாளராக நிறுத்துவது குறித்து ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் வெளியாகத் தொடங்கியுள்ள நிலையிலேயே, சிறிலங்கா அதிபர் பதவிக்குப் போட்டியிடும் எண்ணம் தமக்கு இல்லை என்று விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள விக்னேஸ்வரனுக்கு நெருக்கமான வட்டாரங்கள், பொதுவேட்பாளராக நிறுத்தப்படுவது குறித்த பரிந்துரையைக் கேட்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை என்று அவர் தெரிவித்ததாக கூறியுள்ளன.

“உண்மையில் அரசியலில் நுழைய எனக்கு விருப்பமில்லை.

போருக்குப் பிந்திய வடக்கிற்கு நல்லதொரு தலைமைத்துவத்தை வழங்கி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று பலரும் என்னைக் கேட்டுக் கொண்டதால் தான், அரசியலில் இறங்கினேன்.

வடக்கிலுள்ள மக்கள் ஏகோபித்த ஆதரவுடன் என்னை முதலமைச்சராகத் தெரிவு செய்து ஏழு மாதங்களாக அந்தப் பதவியை வகிக்றேன்.

ஆனால் துரதிஸ்டவசமாக, ஆக்கபூர்வமான வகையில் என்னால் மக்களுக்கு சேவையாற்ற முடியவில்லை.

ஏனென்றால், வடக்கு மாகாணசபைக்கு சரியான முறையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவில்லை.

தற்போது வடக்கு மாகாணசபைக்குரிய அதிகாரங்களைப் பெறுவதற்காக போராடிக் கொண்டிருக்கிறேன்.

அடுத்த அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளராக நிற்பது குறித்து என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

எந்தவொரு அதிகாரப்பசியுடனும் நான் அரசியலுக்கு வரவில்லை.

என்னை வடக்கு மாகாண முதல்வராகத் தெரிவு செய்த மக்களுக்குச் சேவையாற்றுவதே எனது இலக்கு.

எனவே என்னை பொதுவேட்பாளராக முன்னிறுத்துவது அர்த்தமற்றது.

நான் அதற்கு சார்பாக இல்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.