ஈழப் போரின் இறுதி நாட்கள்-25: இறுதி யுத்தத்தில் வான் புலிகளுக்கு என்ன நடந்தது?-5

0
7501

வான்புலிகளின் விமானம் முதல் தடவையாக கொழும்பு கட்டுநாயக விமானப்படை தளத்துக்கு சென்று குண்டு வீசிவிட்டு திரும்பிய மறுநாள், அந்த விமானம் வன்னியில் தரையிறங்கிய இடம் எது என்பதை தெரிந்துகொள்ள இலங்கை உளவுத்துறையினர் முயற்சியில் ஈடுபட்டனர் என எழுதியிருந்தோம். தரையிறங்கிய இடம் தெரிந்துவிட்டால், அதற்கு அருகில்தான் எங்காவது விமானங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்பது அவர்களது நினைப்பாக இருந்தது. விமானங்கள் அநேகமாக தாழ்வாக பறந்திருக்கும் (ரேடாரில் இருந்து தப்புவதற்காக) அப்போது தரையில் இருப்பவர்களுக்கு விமானத்தின் இஞ்சினின் ஓசை நன்றாக கேட்டிருக்கும். இது நடைபெற்ற நேரமோ இரவு நேரம். இதனால் விமானம் எந்தப் பகுதியில் தரையிறங்கியது என்பதை ஓரளவுக்குத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தார்கள் உளவுத்துறையினர்.

வான்புலிகளின் விமானம் முதல் தடவையாக கொழும்பு கட்டுநாயக விமானப்படை தளத்துக்கு சென்று குண்டு வீசிவிட்டு திரும்பிய மறுநாள், அந்த விமானம் வன்னியில் தரையிறங்கிய இடம் எது என்பதை தெரிந்துகொள்ள இலங்கை உளவுத்துறையினர் முயற்சியில் ஈடுபட்டனர் என எழுதியிருந்தோம்.

தரையிறங்கிய இடம் தெரிந்துவிட்டால், அதற்கு அருகில்தான் எங்காவது விமானங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்பது அவர்களது நினைப்பாக இருந்தது.

விமானங்கள் அநேகமாக தாழ்வாக பறந்திருக்கும் (ரேடாரில் இருந்து தப்புவதற்காக) அப்போது தரையில் இருப்பவர்களுக்கு விமானத்தின் இஞ்சினின் ஓசை நன்றாக கேட்டிருக்கும். இது நடைபெற்ற நேரமோ இரவு நேரம். இதனால் விமானம் எந்தப் பகுதியில் தரையிறங்கியது என்பதை ஓரளவுக்குத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தார்கள் உளவுத்துறையினர்.

ஆனால் அது அவர்கள் நினைத்த அளவுக்குச் சுலபமாக இருக்கவில்லை.

விமானம் தெற்கு நோக்கி (கட்டுநாயகவை நோக்கி) சென்றபோது கணேசபுரம் பகுதியில் விமானத்தின் ஓசை கேட்கப்பட்டிருந்தது. வில்பத்து வனப்பகுதியில் ஓசை கேட்டதாக சிலர் சொன்னார்கள். ஆனால் அவை அனைத்துமே விமானம் தாக்குதலுக்காக சென்றபோது கேட்ட ஓசைகள்.

விமானம் திரும்ப வந்தபோது கணேசபுரம் பகுதிக்கு மேலோ, வில்பத்து காட்டுக்கு மேலோ பறந்ததாக தகவல் இல்லை.

இதிலிருந்து வான்புலிகள் தங்களது பிளைட் பிளானில், தாக்குதல் முடிந்து திரும்பிவரும் பாதையை மிகவும் கவனமாகத் திட்டமிட்டனர் என்பது புரிந்தது. திரும்பி சென்ற பாதை தெரிந்தால், அதை வைத்து விமானம் எங்கே இறக்கப்பட்டது என்பதை ஓரளவுக்கு ஊகித்து விடலாம் என்ற தியரி அடிபட்டுப் போனது.

அடுத்தபடியாக உளவுத்துறையினர் கவனம் செலுத்தியது, விமானத்தின் த்ரஸ்ட் ரிவர்சர் (airplane thrust reverser) மூலமாக ஏற்படுத்தப்படும் ஓசையை.

இது என்னவென்றால், விமானம் தரை இறங்கியவுடன் வேகம் அதிகமாக இருக்கும். வேகத்தை முடிந்த வரை குறைத்து விமானத்தைப் பாதுகாப்பாக நிறுத்துவதற்கு த்ரஸ்ட் ரிவர்சர் பயன்படும். விமானத்தின் இஞ்சினை எதிர்ப்புறமாக ஓட விடுவதன்மூலம், அதன் வேகத்தைக் குறைக்கும் செயற்பாடு இது.

இதன்போது வித்தியாசமான ஓசை ஒன்று ஏற்படும். விமானம் பறக்கும்போது எழும் ஓசைபோல அல்லாது, இந்த த்ரஸ்ட் ரிவர்சர் இயங்கும்போது கடினமான சத்தம் (லேசாக ஊளையிடுவதுபோல) கேட்கும்.

ராணுவ உளவுப்பிரிவினர், விமானம் சாதாரணமாகப் பறக்கும்போது எழும் ஓசையையும், த்ரஸ்ட் ரிவர்சர் இயக்கப்படும்போது எழும் ஓசையையும் ஒலிப்பதிவு செய்து வன்னியைச் சுற்றியுள்ள ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் வசிப்பவர்களுக்குப் போட்டுக் காட்டினார்கள்.

அதிலும் சரியான பலன் கிடைக்கவில்லை. ஓசை கேட்டதாகக் கூறிய சிலராலும், இந்த இரு ஓசைகளையும் வேறுபடுத்திக் கூறமுடியாமல் இருந்தது.

அந்தக் கட்டத்தில் வேறு ஒரு கோணமும் ஆராயப்பட்டது. அது என்னவென்றால் வான்புலிகள் தரை இறங்கியபோது த்ரஸ்ட் ரிவர்சர் உபயோகிக்காமலேயே இருந்திருக்கலாம் என்பது.

இதுவும் சாத்தியம்தான். ஆனால் கொஞ்சம் ரிஸ்கியானது. ரன்வேயின் நீளம் மிக அதிகமாக இருந்தால், முயன்று பார்க்கலாம் – விமானத்தை வெறும் பிரேக் மூலம் நிறுத்துவது.

விமானத்தின் லேன்டிங் வெயிட் அதிகமாக இல்லாதிருந்தால் பைனல் அப்ரோச்சின்போது வேகத்தை நன்றாகக் குறைத்து, கிட்டத்தட்ட ஒரு மிதக்கும் நிலைக்கு கொண்டுவந்து, லேன்டிங் கியரை மட்டும் உபயோகித்துத் தரையிறக்குவதுதான், த்ரஸ்ட் ரிவர்சர் உபயோகிக்காமல் லேன்டிங் செய்யும் விதம்.

இதை கிளைடிங் லேன்டிங் (airplane gliding landing) என்பார்கள்.

இது, எமர்ஜன்சி லான்டிங் என்ற வகை முறையில் செய்யப்படும் லேன்டிங். பொதுவாக, தேவையில்லாமல் எந்த விமானியும் செய்ய மாட்டார்கள். அதுவும் இரவு நேரத்தில் மகா ரிஸ்க்.

காரணம் என்னவென்றால் விமானம் தரையைத் தொடும்போது லெவல் பண்ணுவது கடினம். இடப்புறம் அல்லது வலப்புறம் சரியப் பார்க்கலாம்.

வான்புலிகளின் விமானங்கள், இவ்வளவு ரிஸ்க் எடுத்து இறக்கப்பட்டிருக்காது என்பதால், இந்த சாத்தியம் ஒதுக்கப்பட்டது.

எப்படியோ, உளவுப்பிரிவின் விசாரணைகளில், வான்புலிகளின் விமானம் இறக்கப்பட்ட லொகேஷன் எது என்பது தெரியவரவில்லை.

வான்புலிகளின் விமானம் கட்டுநாயகவில் தாக்குதல் நடத்திவிட்டுத் திரும்புகிறது என்று தெரியவந்தபோது, அந்த விமானங்களை துரத்திச் சென்று தாக்குவதற்காக இலங்கை விமானப்படை அனுப்ப முயன்ற இரு விமானங்களும் K-8 ரகத்திலான விமானங்கள்.

இவை இலங்கை விமானப்படையினரால் பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும் விமானங்கள்.

தாக்குதல் நடைபெற்று 20 நிமிடங்களின் பின்னர்தான் முதலாவது விமானம் வானில் ஏறியது. அந்த விமானம் வடக்கு நோக்கிப் பறந்த நிலையில், வான்புலிகளின் விமானம் வானில் அவர்களுக்குத் தட்டுப்படவில்லை.

இரண்டாவது K-8 விமானம் தரையில் இருந்தே கிளம்பாமல் கடைசி நிமிடத்தில் நிறுத்தப்பட்டது. காரணம் அதன் விமானி விமானத்தில் ஏறும்போது தவறித் தரையில் வீழ்ந்து விட்டதால் காலில் காயமேற்பட்டதாக கூறப்பட்டது. (இது பற்றிய ராணுவ விசாரணை, ஏர் வைஸ் மார்ஷல் கே.ஏ.பிரேமசந்திர தலைமையில் நடந்தது. அதன் முடிவு என்னாகியது என்பது தெரியவில்லை)

முதலில் புறப்பட்டுச் சென்ற K-8 விமானம் வன்னிக்கு மேலாக அதிக உயரத்தில் பறந்திருக்கின்றது (தரையிலிருந்து தாக்குதல் வரலாம் என்ற பயம்) அவ்வளவு உயரத்தில் இருந்து பார்த்தபோது, வான்புலிகளின் விமானங்கள் தரையிறங்கிய அடையாளமோ, கீழே ரன்வேயின் லேன்டிங் லைட்டுகள் எரிந்த அடையாளமோ தெரியவில்லை.

இதனால், வான்புலிகளின் விமானத்தைத் துரத்த முயன்ற விமானத்தால், இந்த இரு விமானங்களும் வன்னியில் எங்கே தரையிறங்கின என்பதைத் தெரிந்து கொள்ள முடியாது போய்விட்டது.

தாக்குதல் நடைபெற்றபின் வான்புலிகளின் விமானம் தரையிறங்கும் வரைதான் இலங்கை விமானப்படைக்குச் சந்தர்ப்பம் அதிகம். விமானம் வானில் இருக்கும்போது பின்தொடர்வதும் சுலபம். அவை எங்கே தரையிறங்குகின்றன என்பதை அறிவதும் சுலபம்.

அப்படியான சந்தர்ப்பத்தை இலங்கை விமானப்படை இழந்துவிட்ட நிலையில், ஆளில்லாத உளவு விமானங்களை வன்னிக்கு மேலே பறக்க விட்டு, தரையில் விமானம் இறங்கிய அடையாளம் ஏதவாது தென்படுகிறதா என்று பார்த்தார்கள்.

உளவு விமானம் வானிலிருந்து படம் எடுக்கும் போது, முதல்நாள் தரையிறங்கிய விமானத்தின் தடயங்களைப் பிடிப்பது சுலபமல்ல.

பொதுவாக இப்படியான தேடல்களில் நடைமுறை என்னவென்றால், தரையில் ரன்வே ஒன்று இருந்து, அதில் விமானம் தரையிறங்கிய டயர் அடையாளங்கள் (விமானம் தரையைத் தொட்ட இடத்திலிருந்து சுமார் 20 அடி தூரம் வரை நல்ல கருப்பு நிறத்தில் தரையில் அடையாளம் பதிந்திருக்கும்) இருக்கின்றனவா என்று பார்ப்பது.

இதுவும் சரியாக கைகொடுக்கவில்லை. வான்புலிகள் உபயோகித்த ரன்வே விமானம் இறங்கியபின் புதர்களால் மறைக்கப்பட்டிருக்கலாம். டயர் அடையாளங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் என விடவேண்டியதாயிற்று.

மொத்தத்தில், வான் புலிகளின் முதலாவது விமான தாக்குதல் எதிர்பாராத விதத்தில் திடீரென நடந்து முடிந்து, விமானங்களும் மறைந்து விட்டதால், எதையும் கண்டுபிடிக்க முடியாத நிலை, இலங்கை பாதுகாப்பு படைகளுக்கு ஏற்பட்டது. மற்றொரு தடவை அந்த விமானங்கள் வானத்துக்கு வந்தால்தான், மேற்கொண்டு தகவல்கள் தெரியவரலாம் என்று காத்திருந்தார்கள்.

அதற்கிடையே, வான்புலிகளின் விமானங்களை கண்டுபிடிக்க வேறு சில விஷயங்களிலும் கவனம் செலுத்த தொடங்கினார்கள். (தொடரும்..)

-ரிஷி-

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.