யாழ். குருநகரில் யுவதி சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கு; பாதிரியார்களிடம் வாக்குமூலம் பதிவு

0
361

யாழ். குருநகர் பகுதியில் யுவதி ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று யாழ். நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது. குற்றஞ்சாட்டப்பட்ட பாதிரியார்கள் இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவர்களின் வாக்குமூலங்களும் தனித்தனியே இன்று பதிவு செய்யப்பட்டது. (வீடியோ)
யாழ். குருநகர் பகுதியில் யுவதி ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று யாழ். நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.

இதன்போது இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 6 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த மாதம் 13 ஆம் திகதி காணாமற் போயிருந்த நிலையில், மறுநாள் அந்தப் பகுதியிலுள்ள கிணற்றில் இருந்து ஜெரோமி கொன்சலிற்றா என்ற யுவதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

குறித்த யுவதியின் மரணத்திற்கு யாழ்.மறைமாவட்டத்தினைச் சேர்ந்த இரண்டு பாதிரியார்கள் காரணம் என யுவதியின் பெற்றோர் தெரிவித்ததை அடுத்து, குறித்த சம்பவம் தொடர்பாக யாழ். நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு கடந்த மாதம் 23 ஆம் திகதி முதற்தடவையாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது உயிரிழந்த யுவதியின் பெற்றோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, உயிரிழந்த யுவதி பயன்படுத்திய கைத்தொலைபேசியை விசாரணைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

அத்துடன், குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு பாதிரியார்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறும் யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதன் பிரகாரம் குற்றஞ்சாட்டப்பட்ட பாதிரியார்கள் இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவர்களின் வாக்குமூலங்களும் தனித்தனியே இன்று பதிவு செய்யப்பட்டது.

வாக்குமூலங்களை பதிவுசெய்த நீதவான், வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 6 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.