ஈழப் போரின் இறுதி நாட்கள்-24: இறுதி யுத்தத்தில் வான் புலிகளுக்கு என்ன நடந்தது?-4

0
7372

விடுதலைப் புலிகளின் வான்புலிகள் பிரிவு நடத்திய முதலாவது விமான தாக்குதல், கொழும்பு, கட்டுநாயக விமானப்படை தளத்தின்மீது நடத்தப்பட்ட மறுநாள், வன்னியில் இருந்து வான்புலிகளின் விமானம் எப்படி கொழும்புவரை வந்திருக்க முடியும் என்பதை ஊகிக்கும் முயற்சிகள் தொடங்கின. இதுதான், முக்கியமானது. காரணம் இதை தெரிந்து கொண்டால், வான்புலிகளின் விமானம் மீண்டும் இதே பகுதிக்கு வரும்போது சுலபமாக ஸ்பாட் பண்ணி விடலாம். எந்த பாதையில் வருவார்கள், எந்தப் பாதையில் திரும்பி போவார்கள் என்பதை தெளிவாக புரிந்து கொண்டு விடலாம். வரும்போது தாக்க முடியாவிட்டாலும், திரும்பி போகும்போது தாக்கி வீழ்த்தி விடலாம். இதை வான்புலிகளும் உணர்ந்தே இருந்தார்கள். அதனால்தான் வான்புலி விமானங்கள் ஒரு தடவை குண்டுவீசிய இடத்துக்கு இரண்டாவது தடவை சென்றதில்லை. வெவ்வேறு இடங்களில் குண்டு வீசினார்கள்.

விடுதலைப் புலிகளின் வான்புலிகள் பிரிவு நடத்திய முதலாவது விமான தாக்குதல், கொழும்பு, கட்டுநாயக விமானப்படை தளத்தின்மீது நடத்தப்பட்ட மறுநாள், வன்னியில் இருந்து வான்புலிகளின் விமானம் எப்படி கொழும்புவரை வந்திருக்க முடியும் என்பதை ஊகிக்கும் முயற்சிகள் தொடங்கின.

இதுதான், முக்கியமானது. காரணம் இதை தெரிந்து கொண்டால், வான்புலிகளின் விமானம் மீண்டும் இதே பகுதிக்கு வரும்போது சுலபமாக ஸ்பாட் பண்ணி விடலாம். எந்த பாதையில் வருவார்கள், எந்தப் பாதையில் திரும்பி போவார்கள் என்பதை தெளிவாக புரிந்து கொண்டு விடலாம்.

வரும்போது தாக்க முடியாவிட்டாலும், திரும்பி போகும்போது தாக்கி வீழ்த்தி விடலாம்.

இதை வான்புலிகளும் உணர்ந்தே இருந்தார்கள். அதனால்தான் வான்புலி விமானங்கள் ஒரு தடவை குண்டுவீசிய இடத்துக்கு இரண்டாவது தடவை சென்றதில்லை. வெவ்வேறு இடங்களில் குண்டு வீசினார்கள்.

ஆனால், யுத்தம் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில், மீண்டும் ஒருதடவை கொழும்புவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு, கொழும்பு நோக்கி வந்தன வான்புலிகளின் இரு விமானங்களும்.

அதாவது, ஏற்கனவே ஒரு தடவை வந்து, குண்டுவீசிய இடத்துக்கு (முதலாவது தாக்குதல் நடந்த அதே கொழும்பு பகுதிக்கு) மீண்டும் பறந்து வந்தார்கள்.

இதுதான், அவர்கள் விட்ட பெரிய தவறு! இரண்டு விமானங்களும் வீழ்த்தப்பட்டன. அத்துடன் ‘வான்புலிகள்’ என்ற கதை முடிந்து போனது.

இரண்டாவது தடவையும் ஒரே இடத்தை நோக்கி வரும் தவறை தெரியாமல் செய்தார்களா, அல்லது தெரிந்து கொண்டே வேறு வழியில்லாமல் செய்தார்களா என்று தெரியவில்லை. அதை சொல்வதற்கு அந்த விமானிகள் யாரும் இப்போது உயிரோடு இல்லை.

வான்புலிகள் விமானம் கொழும்புவுக்கு வருவதென்றால், எப்படி வருவார்கள் என்று தெளிவாக ஊகித்து, கீழே பாதுகாப்பு ஏற்பாடுகளை பக்காவாக செய்துவிட்டு, இலங்கை பாதுகாப்பு படைகள் காத்திருக்க, அந்த வலைக்குள் பறந்துவந்த இரு வான்புலி விமானங்களும் சுலபமாக சிக்கியதில், விமானிகளும், விமானங்களும் அழிக்கப்பட்டன.

முதலாவது தாக்குதல் நடந்து 2 நாள் டயம் கொடுத்தாலே, பல விஷயங்களை ஊகித்துவிட முடியும். அதற்கு ஏற்றபடி தரையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து விடலாம்.

எப்படி ஊகிக்கலாம்? பிளைட்-ஆப்ஸ் பின்னணியுடைய ஆட்களால், பல விஷயங்களை ஊகிக்கவும், கணிப்பிடவும் முடியும்.

தற்போது பிளைட் பிளான் (Flight Plan) உருவாக்குவது முழுக்க முழுக்க கம்ப்யூட்டர்கள் முலமாகதான். இதனால் தரவுகளை உள்ளே செலுத்தி விட்டால், யோசிக்கும் வேலையை கம்ப்யூட்டர் செய்து, பிளைட் பிளானை உருவாக்கி கொடுத்துவிடும். ஆனால், நான் விமான நிறுவனத்தில் இணைந்த 1980களில் இந்த வசதி கிடையாது. நாமே சொந்தமாக பிளைட் பிளான் (manual flight plan) போடவேண்டும்.

புலிகளின் பிளைட் பிளானும் கம்ப்யூட்டர் உபயோகிக்காமல் manual flight plan போடப்பட்டிருக்க வேண்டும். காரணம், கம்ப்யூட்டர் புரோகிராம்கள், வர்த்தக விமானங்களுக்கானவை. வர்த்தக விமானங்களை கீழேயிருந்து யாரும் சுட மாட்டார்கள்.

ஆனால், வான்புலிகளின் விமானங்களுக்கு அந்த அபாயம் உள்ளது என்பதால், சொந்தமாக manual flight plan போட்டிருக்க வேண்டும்.

வன்னியில் இருந்து கொழும்புவரை வந்து வான்புலி விமானங்கள் முதல் தடவை தாக்கிவிட்டு திரும்பிய பின், manual flight plan அனுபவம் உள்ள ஒருவரால், அவர்கள் வந்த பாதையை ஊகிக்க முடியும். இலங்கை விமானப்படையிலும் அதைத்தான் செய்தார்கள்.

இறுதி யுத்தம் முடிந்து 2 ஆண்டுகளின் பின், கொழும்பு BMICH-ல் இலங்கை பாதுகாப்பு அமைச்சகமும், அமெரிக்க தூதரகமும் இணைந்து, நடத்திய பாதுகாப்பு கான்பிரன்ஸ் ஒன்றில் கலந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது.

அப்போது, அதில் கலந்துகொண்ட இலங்கை விமானப்படை உயரதிகாரி ஒருவரிடம், இதுபற்றி கேட்டபோது, “வான்புலிகள் முதல் தடவை கொழும்பு வந்து கட்டுநாயகவில் குண்டு வீசிவிட்டு திரும்பியபோது, அவர்களது பிளைட் பிளானை ஊகித்து விட்டோம்” என்றார்.

2007-ம் ஆண்டு, மார்ச் 26-ம் தேதி, திங்கட்கிழமை, அதிகாலை 12.44-க்கு வான்புலிகளின் முதலாவது விமானக் குண்டுவீச்சு வானில் இருந்து தரையில் வீழ்ந்தது. மறுநாள் செவ்வாய்க்கிழமை கனடாவில் வெளியான எமது பத்திரிகை ‘பரபரப்பு வீக்லி’-யில், வான்புலிகளின் விமானம் எந்த வழியாக வந்திருக்கலாம் என்ற பிளைட் பிளானை, நாமும் ஊகித்து எழுதியிருந்தோம்.

அந்த விபரங்களை விமானப்படை அதிகாரியிடம் தெரிவித்து, “நீங்கள் ஊகித்தது, இதிலிருந்து வேறுபட்டிருந்ததா?” என்று கேட்டபோது அவர் கூறிய பதில்-

“நாங்கள் ஊகித்ததும், கிட்டத்தட்ட இதுதான். வான் புலிகள் முதலாவது தடவை கொழும்பு வருவதற்கு உபயோகித்த பாதையும் இதுதான் என்பதை பின்பு தெரிந்து கொண்டோம். இரண்டாவது தடவையும் இதே பாதையில் வந்தபோது, இரு விமானங்களும் வீழ்த்தப்பட்டன” என்றார்.

சரி. 2007-ம் ஆண்டு, மார்ச் 27-ம் தேதி, செவ்வாய்க்கிழமை நாம் ‘பரபரப்பு வீக்லியில்’ என்ன எழுதினோம் என்று படிக்க ஆர்வமா? இதோ, இதுதான் அந்தக் கட்டுரை:

வன்னியில் விடுதலைப் புலிகளின் ரன்வே உள்ள இடத்தில் (அது புதுக்குடியிருப்போ, இரணமடுவோ அல்லது வேறு ஏதாவது பெயர் குறிப்பிடப்படாத இடமோ) இருந்து பறக்கத் தொடங்கும் விமானம், தெற்கு நோக்கிச் செல்லும்போது, தென் கிழக்குத் திசையில் கடலைக் கடக்க முடியாது.

காரணம், அந்த பாதை சீனன்குடா, மட்டக்களப்பு, அம்பாறை, விரவில, ரட்மலான, கட்டுநாயக ஆகிய இடங்களின் மேலாக பறக்கும் சுற்றுப்பாதை.

தென்மேற்குத் திசையில் பறந்து கடலைக் கடந்திருக்கலாம். பின்னர், கடல் மார்க்கமாக கட்டுநாயக விமானப்படை தளம்வரை சென்று குண்டு வீசியிருக்கலாம். அது சரியான பாதை. குறைந்த தூரம்.

ஆனால் அதையும் வான்புலிகள் உபயோகித்திருக்க மாட்டார்கள்.

என்ன காரணம்?

கடலுக்கு மேலால் பறந்து போய் குண்டுவீசிவிட்டு, வட்டமடித்துத் திரும்பும்போது, இடதுபுறமாகத் திரும்பினால், கட்டுநாயகவுக்கும், பலாவித்துறைக்கும் இடையிலுள்ள வான் பகுதிக்கு மேலால் பறந்துதான் கரையைக் கடக்க வேண்டும். இந்த இரண்டு இடத்திலும் வான்படைத் தளங்கள் உள்ளன. அதற்கு மேலாக பறப்பது ஆபத்து.

வலப்புறம் வட்டமடித்தால் அது மகா முட்டாள்தனம். கொழும்பு நகருக்கு மேலால் அல்லது கொழும்புக்கும் கட்டுநாயகவுக்கும் இடைப்பட்ட வான் பகுதியால் கரையைக் கடக்க வேண்டும். சொல்லிச் சொல்லித் தாக்குவார்கள்.

மீண்டும் கடல்வழியை நாடிச் செல்லாமல் குண்டு வீசியவுடன் வடகிழக்கு நோக்கித் திரும்பினால், பலாவித்துறைக்கும் சிகிரியவுக்கும் இடையே தரைக்கு மேலால் பறக்க வேண்டும். இந்த இரு இடங்களிலும் வான்படைத் தளங்கள்.

அதில் தப்பினாலும் பின்னர் வரிசையாக ஹிங்குரகொட, அனுராதபுர, வவுனியா ஆகிய மூன்று இடங்களில் உள்ள வான் படைத் தளங்களுக்கு சற்று மேற்கே பறக்க வேண்டியிருக்கும்.

மிகவும் ஆபத்தான பாதை.

சரி. வேறு சுலபமான பாதை இல்லையா? சரியாகத் திட்டமிட்டால் இருக்கிறது.

வன்னியில் அமைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் ரன்வே அநேகமாக கிழக்கு – மேற்கு திசையை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்ட ரன்வேயாக இருக்காது. பெரும்பாலும் வடக்கு – தெற்கை பேஸ் ஆக வைத்து அமைக்கப்பட்டிருக்கும். இன்னும் சரியாகச் சொன்னால் வடகிழக்கு – தென்மேற்கு அல்லது வடமேற்கு – தென்கிழக்கை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்ட ரன்வேயாக இருக்கும்.

அதில் டேக்-ஆஃப் செய்து தென்மேற்குத் திசையில் பறக்கத் தொடங்கினால், சிறிது தூரம் தரைக்கு மேலால் பறக்க வேண்டியிருக்கும்.

புலியாறு, பறங்கியாறு, ஆகியவற்றுக்கு மேலால் பறந்து, மடுப்பாதையைக் கடக்கும் வரை கடல் பக்கமாகத் திரும்பக் கூடாது. (திரும்பினால் தலைமன்னார் வந்துவிடும்)

இப்படிப் பறக்கும்போது, வான்புலிகளின் விமானியின் இடது புறமாக வவுனியா நகரம் தெரியும். மொடரகம டவுனுக்கு மேற்கே கடல் கரையோரமாகப் பறந்து, நொச்சியாகம டவுனுக்கு மேற்கே, கவஓய பகுதியை கடந்து பறக்க வேண்டும்.

இப்படிச் செய்யும்போது அனுராதபுரம் நகரம் விமானியின் இடப்புறம் தெரியும். ஹிங்குரகொட மிகமிகத் தொலைவில் புள்ளியாகத் தெரியும்.

இப்படி பறந்தால், வவுனியா, அனுராதபுரம், ஹிங்குரகொட மூன்றையும் தவிர்த்து விடலாம்.

இந்த இடத்தில் கரையைக் கடந்து மேற்கு நோக்கித் திரும்பினால் கல்பிட்டியவைத் தவிர்த்து அதன்பின் தெற்கு நோக்கிக் கரையோரமாக கட்டுநாயக வரை செல்லலாம். கடலுக்கு மேலே பறக்கும் விமானியின் இடதுபுறம் கட்டுநாயக விமானப்படை தளம் தெரியும்.

ஆனால், அதை நோக்கி செல்லக்கூடாது. அதையும் கடந்து பறக்க வேண்டும்.

அதன்பின் விமானத்தை இடதுபுறமாகத் திருப்பி வட்டமடித்து, விமானத்தின் பொசிஷனை 3X90 பாகை திரும்பும் பொசிஷனுக்குக் கொண்டுவந்தால் (தூரக்கணிப்பீடு முக்கியம்) விமானம் கட்டுநாயக வான்படைத் தளத்துக்கு கிழக்கே நிற்கும்.

இப்போது மேற்கு நோக்கிச் செலுத்த வேண்டும். அடுத்த சில நிமிடங்களில் சரியாக விமானத் தளத்துக்கு நேர் மேலே போய்ச் சேரலாம்!

வெடிகுண்டைப் போட்டுவிட்டு, திசை திருப்பாமல் நேரே பறந்தால் கரையைக் கடக்கலாம். தொடர்ந்து விமானத்தை வலப்புறம் (வடக்கு) திருப்ப வேண்டும். இப்போது விமானம் கடலுக்கு மேலால் பறக்கத் தொடங்கும்.

குண்டு வீச்சு நடைபெற்றவுடன் சகல ராணுவ தளங்களுக்கும் செய்தி போகும். எல்லோரும் தமது வான் பகுதியை கவனித்துக் கொள்வார்கள். ஆனால் விமானம் கடலுக்கு மேலே பறந்து கொண்டு இருக்கும்.

தரைப்பாதையில் விமானம் இல்லை என்று உறுதியான பின்னர்தான் கடல்வழி பற்றி யோசிக்கத் தொடங்குவார்கள்.

இது ஒரு மனோதத்துவம். ஏனென்றால், கட்டுநாயக படைத்தளத்தில் குண்டுவீசிய விமானம், அடுத்து தங்களது தளத்திலும் குண்டு வீசுமோ என்ற பயத்தில் முதலில் தங்களுக்கு மேலுள்ள வான்பகுதியில்தான் எல்லோரும் முதலில் அக்கறை எடுப்பார்கள்.

இவ்வளவுக்கும் ஒரு 25 நிமிடம் தரையில் குழப்ப நிலை நிலவினால் போதுமானது. 25 நிமிடத்தில் விமானியின் வலப்புறம் வவுனியா நகரம் தெரிய தொடங்கி விடும். இப்போது வட-கிழக்குத் திசையில் திருப்பி வன்னியை நோக்கிச் செல்லலாம்.

தரையில் ராணுவத்தினர் விமானத்தை தீவிரமாக தேடத் தொடங்கும்போது, வன்னியில் உள்ள ரன்வேயில் தரையிறங்கி விடலாம்.

நாம் குறிப்பிட்ட இந்த பாதையில் பறந்திருந்தால், வன்னியில் இருந்து கட்டுநாயக வுக்கு போவதற்கு 45-50 நிமிடங்களும், குண்டு வீசிவிட்டு வன்னிக்கு திரும்புவதற்கு 35-40 நிமிடங்களும் எடுக்கலாம் (உயரம் குறைந்த பறத்தலையும் கணக்கில் எடுக்கும்போது).

இதைவிட வேகமாகவும் போகலாம். ஆனால் எரிபொருள் அதிகம் இழுத்துவிடும்.

விமானம் புறப்பட்டதிலிருந்து விமானிகளுக்கிடையிலான ரேடியோத் தொடர்புகளோ, விமானிகளுக்கும் தரைக்கும் இடையிலான ரேடியோ தொடர்புகளோ அநேகமாக இருந்திருக்காது. அது ஆபத்து.

வன்னியில் தரையிறங்கும் போது விமானத்தில் 10 லிருந்து 15 சதவிகித எரிபொருளே மீதம் இருக்கும். இதனால் லேன்டிங் செய்யும்போது, MLW (Maximum Landing Weight) பிரச்னையும் ஏற்படாது.

வான்புலிகள் தாம் எப்படி கொழும்புவரை பறந்தார்கள் என்பதை ஏதாவது ஒரு காலத்தில் வெளியே சொல்வார்களோ இல்லையோ தெரியாது. ஆனால், நாம் இப்போதே சொல்கிறோம் – இதுதான் அவர்கள் சென்று, குண்டு வீசிவிட்டு வந்த பாதையாக இருக்கும்.

காரணம், பல பிளைட் பிளான்களை அலசிப் பார்த்ததில், இதுதான் இருப்பதற்குள் சுலபமான, மற்றும் பாதுகாப்பான பாதை.

தொடரும்…………

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.