ஈழப் போரின் இறுதி நாட்கள்-23: இறுதி யுத்தத்தில் வான் புலிகளுக்கு என்ன நடந்தது?-3

0
7469

விடுதலைப் புலிகளின் வான்புலிகள் பிரிவு நடத்திய முதலாவது விமான தாக்குதல், கொழும்பு, கட்டுநாயக விமானப்படை தளத்தின்மீது நடத்தப்பட்டது என கடந்த அத்தியாயத்தில் எழுதியிருந்தோம். இறுதி யுத்தம் தொடங்கி, புலிகள் வின்வாங்க தொடங்கிய நாட்களில் இருந்தே, கட்டுநாயக விமானப்படை தளத்தின்மீது ஒரு தாக்குதலை ராணுவம் எதிர்பார்த்தது. காரணம், புலிகளின் பகுதிகளுக்குள் முன்னேறிக்கொண்டிருக்கும் ராணுவத்தை தடுத்து நிறுத்துவது என்றால், புலிகளால் அதை வன்னிக்குள் செய்ய முடியாது; ஆனால், யுத்த முனைக்கு வெளியே செய்யலாம் என்பதை ராணுவம் அனுபவரீதியாக உணர்ந்திருந்தது.

விடுதலைப் புலிகளின் வான்புலிகள் பிரிவு நடத்திய முதலாவது விமான தாக்குதல், கொழும்பு, கட்டுநாயக விமானப்படை தளத்தின்மீது நடத்தப்பட்டது என கடந்த அத்தியாயத்தில் எழுதியிருந்தோம். இறுதி யுத்தம் தொடங்கி, புலிகள் வின்வாங்க தொடங்கிய நாட்களில் இருந்தே, கட்டுநாயக விமானப்படை தளத்தின்மீது ஒரு தாக்குதலை ராணுவம் எதிர்பார்த்தது.

காரணம், புலிகளின் பகுதிகளுக்குள் முன்னேறிக்கொண்டிருக்கும் ராணுவத்தை தடுத்து நிறுத்துவது என்றால், புலிகளால் அதை வன்னிக்குள் செய்ய முடியாது; ஆனால், யுத்த முனைக்கு வெளியே செய்யலாம் என்பதை ராணுவம் அனுபவரீதியாக உணர்ந்திருந்தது.

2001-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி, கட்டுநாயக விமானப்படை தளத்துடன் அமைந்த்துள்ள விமான நிலையத்தின்மீது புலிகள் தரைவழி தற்கொலை தாக்குதல் நடத்தியபோது, ஏற்பட்ட சேதம் காரணமாக யுத்தத்தை நிறுத்த வேண்டிய நிலை ராணுவத்துக்கு ஏற்பட்டது. அதன்பின்னரே, 2002-ம் ஆண்டு சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு இலங்கை அரசு போக வேண்டியதாயிற்று.

ஒரு தாக்குதலில், யுத்தத்தை நிறுத்த வேண்டிய அளவுக்கு அந்த தாக்குதலின்போது அப்படி ஏற்பட்ட சேதம் என்ன?

அனைத்தும், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் (மொத்தம் 25)!

இதோ பட்டியலை பாருங்கள்: 11 விமானங்கள், ஹெலிகாப்டர்கள் முழுமையாக அழிக்கப்பட்டன (1 Mi-17 attack helicopter, 1 Mi-24 attack helicopter, 3 K-8 jet trainers, 2 Kfir fighter jets, 1 MiG-27 fighter jet, 3 Sri Lankan Airlines Airbuses). 14 விமானங்கள் சேதமடைந்தன. (5 K-8 jet trainers, 5 Kfir fighter jets, 1 MiG-27 fighter jet, 2 Sri Lankan Airlines Airbuses, 1 other military aircraft)

இவ்வளவு சேதத்தின் பின் ராணுவம், யுத்தத்தை தொடர்ந்து நடத்த முடியாமல், நிறுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று.

இறுதி யுத்தம் தொடங்கியபோது, விடுதலைப் புலிகள் தொடர்ந்து பின்வாங்கிக் கொண்டிருந்த நிலையில், முன்னேறிக் கொண்டிருந்த ராணுவத்தை தடுத்து நிறுத்துவது என்றால், புலிகள் மீண்டும் கட்டுநாயக மீது அப்படி ஒரு தாக்குதலை செய்துதான் நிறுத்தலாம் என்பது ராணுவத்துக்கு நன்றாக தெரிந்திருந்தது.

இதனால், கட்டுநாயக விமானப்படை தளத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்தியா வழங்கிய ரேடார்களில் ஒன்றும் அங்கே பொருத்தப்பட்டு இருந்தது. அந்த தளத்தின் மீது புலிகளின் தாக்குதல் ஒன்றை ராணுவம் எதிர்பார்த்து காத்திருந்தது.

ஆனால், அதுவரை விடுதலைப் புலிகள் விமானம் மூலம் தாக்குதல் நடத்தவில்லை என்பதால், தரை மார்க்கமாக தாக்குவார்கள் என்பதே ராணுவத்தின் நினைப்பாக இருந்தது.

கட்டுநாயக விமானப்படை தளத்தை சுற்றி, 5 கி.மீ. சுற்றளவு பகுதியை உயர் பாதுகாப்பு வலயமாக மாற்றியிருந்தது ராணுவம். இந்த ஏரியாவுக்குள் குடியிருந்த பொதுமக்களிடையே, சிவில் பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தன. சந்தேகத்துக்கு உரிய விதத்தில் நடமாட்டங்கள் தென்பட்டால், உடனே தகவல் தெரிவிக்க போன் இலக்கங்கள் கொடுக்கப்பட்டு இருந்தன.

அத்துடன், இந்த உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்த மக்கள் குடியிருப்புகளில், ராணுவ உளவுத்துறையை சேர்ந்த உளவாளிகள், வீடுகளை வாடகைக்கு அமர்த்தி, பொதுமக்கள் போல தங்கியிருந்தனர்.

இவ்வளவு பலமான பாதுகாப்பு போடப்பட்ட நிலையில்தான், புலிகளின் முதலாவது விமான தாக்குதல் அங்கு நடந்தது.

2007-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி அதிகாலை.

கட்டுநாயக விமானப்படை தளத்தின் தளபதி விங் கமாண்டர் கொலித குணதிலகே பெரிய வெடிச் சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து திடுக்குற்று எழுந்தார்.

பலநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தாக்குதல் தொடங்கி விட்டது என புரிந்து கொண்டார்.

ஆனால், புலிகள் விமானத்தில் வருவார்கள் என்பதை அவர் அந்த கணத்தில் ஊகிக்கவில்லை.

தரை வழியாக புலிகள் ஊடுருவி விட்டார்கள் என நினைத்த அவர், விமான தளத்தை சுற்றியுள்ள காவல் அரண்களில், எந்த பகுதியை உடைத்துக்கொண்டு புலிகள் ஊடுருவினார்கள் என அறிய, உடனடியாக காவலரண்களை தொடர்பு கொண்டார்.

ஆனால், அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதத்தில், எந்த காவலரணும் தாக்கப்படவில்லை. புலிகளும் உள்ளே நுழையவில்லை.

அப்போதுதான், கட்டுநாயக விமான தளத்துக்கு மேலாக இரு சிறிய விமானங்கள் பறந்து குண்டு போடுகின்றன என்ற தகவல் அவருக்கு வந்தது. விமானங்கள் வருகின்றன என்பதை, அங்கு அமைக்கப்பட்டிருந்த இந்திய ரேடார்கள் எச்சரிக்கவே இல்லை.

புலிகளின் விமானங்களை, தரையில் இருந்து அவசர அவசரமாக விமான எதிர்ப்பு துப்பாக்கிகளால் சுட்டார்கள். ஆனால், இரவு நேரத்தில் பறக்கும் விமானங்களை குறிவைத்து சுட முடியவில்லை.

தரையில் இருந்து தாக்குதல் நடத்திய ராணுவத்துக்கு இரவு நேர இருள் எவ்வளவு பாதகமாக இருந்ததோ, அதேயளவு பாதகமாக, வான் புலிகளின் விமானிகளுக்கும் இருந்தது. அவர்களாலும் தரையில் இருந்த இலக்குகளை துல்லியமாக அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.

வான்புலி விமானிகள் குண்டு வீச வேண்டிய இலக்குகள், விமான தளத்துக்குள் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த ஹேங்கர்கள். (மேலேயுள்ள போட்டோ பார்க்கவும். அதுதான், கட்டுநாயக விமானத்தளத்தில் போர் விமானங்களை நிறுத்தும் ஹேங்கர். இதில்தான் குண்டுவீச வந்தன வான்புலி விமானங்கள்)

ஆனால், வான்புலி விமானிகள் விமானத்தில் பறந்தபடி மேலேயிருந்து பார்த்தபோது, விமான தளத்தில் பல பில்டிங்குகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே தெரிந்தன.

இதனால், “இவைதான் போர் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஹேங்கர்கள்” என்ற ஊகத்தில், இரு பில்டிங்குகள் மீது குண்டுகளை போட்டனர் வான்புலி விமானிகள்.

அந்த இரு பில்டிங்குகளும், போர் விமானங்கள் நிறுத்தப்பட்ட ஹேங்கர்கள் அல்ல.

ஒரு பில்டிங், ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டிருந்த ஹேங்கர், மற்றையது, விமானப்படையின் இஞ்சினியரிங் ஹேங்கர்.

இந்த இரு பில்டிங்குகள் மீது வான்புலிகளின் இரு விமானங்களும் தலா 2 குண்டுகளை வீசின. தரையில் விழுந்த 4 குண்டுகளில், 3 குண்டுகளே வெடித்தன. அவைகூட, இந்த ஹேங்கர்களை முழுமையாக அழிக்காமல், சற்றே வெளியே விழுந்தன.பில்டிங்குகளுக்கு வெளியே நின்றிருந்த 3 விமானப்படையினர் கொல்லப்பட்டனர், 14 பேர் காயமடைந்தனர். முதலாவது ஹேங்கருக்குள் இருந்த ஹெலிகாப்டர்களுக்கு சேதம் ஏதுமில்லை. இரண்டாவது இஞ்சினியரிங் ஹேங்கருக்குள் இரவு நேரங்களில் விமானங்களை நிறுத்தி வைப்பது வழக்கமில்லை.

இரு பில்டிங்குகளிலும், பக்கவாட்டில் ஓரளவு சேதம் ஏற்பட்டது.

இதனால், முதல் தடவையாக குண்டுவீச வந்த வான்புலி விமானங்கள், வெற்றிகரமாக குண்டு வீசின. வெற்றிகரமாக திரும்பிச் சென்றன. எதிர்பார்த்த சேதத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஆனால், ராணுவத்துக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டு சென்றன.

அவர்கள் போட்ட குண்டுகள் மட்டும் சரியான ஹேங்கரிலும் விழுந்து, அந்த குண்டுகளும் சக்திவாய்ந்த குண்டுகளாக இருந்திருந்தால், யுத்தத்தின் போக்கே மாறி போயிருக்கும். ஆனால், சரியாக விழவில்லை.

வான்புலி விமானங்களால், இலக்குகள் மீது ஏன் துல்லியமாக போடமுடியவில்லை என்பதற்கான டெக்னிகல் விளக்கத்தை, அடுத்தடுத்த அத்தியாயங்களில் எழுதலாம்.

விடுதலைப் புலிகள் நடத்திய முதலாவது விமான தாக்குதல் முடிந்த பின்னரும், ஏகப்பட்ட குழப்பங்கள். “குண்டு வீசியவை இலகுரக விமானங்கள்” என்று கூறியது, இலங்கை விமானப்படை. ஆனால் அவை என்ன ரக விமானங்கள் என்று கூற முடியவில்லை.

விடுதலைப் புலிகள் வெளியிட்ட போட்டோக்களில் ஒன்று: இந்த போட்டோக்கள் சொல்லாமல் சொன்ன பல விஷயங்கள் இருந்தன!

தாக்குதல் நிறைவு பெற்ற பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கம் சில போட்டோக்களை வெளியிட்டது. அதில் ஒரு விமானம் காண்பிக்கப்பட்டது.

வான்புலிகள் தொடர்பான போட்டோக்களை விடுதலைப் புலிகள் இயக்கம் வெளியிட்டது, அதுதான் முதல் தடவை.

ஆனால் புலிகள் இயக்கம், அந்த போட்டோவில் இருந்த விமானம்தான் தாக்குதலுக்கு உபயோகிக்கப்பட்ட விமானம் என்று குறிப்பிடவில்லை. (பின்னாட்களில் கிடைத்த தகவல்களின்படி, போட்டோவில் காண்பிக்கப்பட்ட விமானம்தான், தாக்குதலுக்கு உபயோகிக்கப்பட்ட விமானங்களில் ஒன்று என தெரிந்தது).

விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட போட்டோக்கள், அவர்களது சர்வதேச பிரசாரத்துக்கு பெரிதும் உதவியது என்பது உண்மை. மிகத் திறமையாக அந்த போட்டோக்கள் எடுக்கப்பட்டு, திறமையான முறையில் அவை உபயோகிக்கப்பட்டு, மேக்ஸிமம் பலனை கொடுத்தன அந்த போட்டோக்கள்.

தாம் வெளியிட்ட போட்டோக்கள் பற்றி விடுதலைப் புலிகள் விளக்கம் ஏதும் கொடுக்கவில்லை. இருந்தாலும், “இதோ புலிகள் கையசைத்துவிட்டு, தாக்குதலுக்கு கிளம்புகிறார்கள்” என்ற ஐடியாவை கொடுக்கும் விதத்தில் இருந்தன, அந்த போட்டோக்கள். அதனால், அந்த போட்டோக்கள், தமிழர்கள் மத்தியில் பெரிய எழுச்சியை ஏற்படுத்தின என்பது நிஜம்.

அதே நேரத்தில், அந்த போட்டோக்களை வைத்து, விமானத்துறையுடன் தொடர்புடையவர்களால் சில விஷயங்களை ஊகிக்க கூடியதாக இருந்தது.

போட்டோவில், வெடிகுண்டுகள் விமானத்தின் Fuselage-ன் கீழ்ப்புறத்தில் பொருத்தப்பட்டிருந்தன. அதை பார்க்கும்போது, இந்த போட்டோ எடுக்கப்பட்டது தாக்குதலுக்காக விமானம் புறப்படும் கடைசி நிமிடத்தில் இல்லை என்று கூறலாம்.

காரணம், விமானத்தின் Fuselageக்குக் கீழ் பொருத்தப்பட்டுள்ள குண்டுகள் அவற்றின் ரிலீஸ் டாக்கில் இருந்து அகற்றப்படுவதற்கு முன்னரே போட்டோ எடுக்கப்பட்டிருக்கின்றது. அது அகற்றப்பட்டாலே தவிர, குண்டு கிழே விழாது.

மற்றொரு போட்டோவில், வான்புலிகள் விமானிகள் இருவர் விமானத்தில் ஏறி, ”இதோ கிளம்புகிறோம்” என புறப்பட தயாராக நிற்பது போல காட்சி இருக்கின்றது.

போட்டோவை கவனித்து பார்த்தால், அந்த போட்டோ எடுக்கப்பட்டது, விமானம் புறப்படுவதற்கு தயாராக ரன்வேயில் நின்றபோது அல்ல என்பதை புரிந்து கொள்ளலாம். விமானத்தின் Rudder திரும்பிய நிலையில் இருப்பதில் இருந்து, அதை ஊகிக்கலாம்.

மற்ற விஷயம், விமானம் Tug ஒன்றினால் Tow பண்ணப்பட்டு பார்க் செய்யப்பட்ட நிலையிலேயே போட்டோ எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, விமானம் ‘ஓய்வு’ நிலையில் உள்ளது.

மற்றுமோர் போட்டோவில் GPU (Ground Power Unit) இணைப்பு தெரிகின்றது. அதிலிருந்து விமானம் அதன் சொந்த மின்சக்தியில் இல்லாமல் தரையில் இருந்து கொடுக்கப்பட்டுள்ள மின்சக்தியில் நின்றிருந்தபோது போட்டோ எடுக்கப்பட்டது என்று ஊகிக்கலாம்.

எப்படியோ, இப்படியான சில கேட்ச்சுகள் இருந்தாலும், அந்த போட்டோக்கள் புத்திசாலித்தனமாக எடுக்கப்பட்டிருந்தன. போட்டோக்களில் இருந்து விமானம் என்ன ரகம் என்பதை யாரும் ஊகிக்கக்கூடாது என்ற எண்ணத்துடன் எடுக்கப்பட்டது தெரிந்தது.

இப்படியான விமானங்களில் அவற்றின் தயாரிப்பு நிறுவனங்களால் EBR (Electrical Bomb Release) வசதி அமைக்கப்படுவதில்லை. வான் புலிகளின் விமானங்கள் வெற்றிகரமாக குண்டுகளை வீசியதில் இருந்து, EBR சிஸ்டம் ஒன்றை வான்புலிகள் உருவாக்கிப் பொருத்தியிருந்தார்கள் என்பதை ஊகிக்க முடிந்தது.

இரு விமானங்கள் வந்து குண்டு வீசிவிட்டு திரும்பிச் சென்ற பின்னரும், அந்த விமானங்கள் எங்கிருந்து வந்தன என்பதையோ, குண்டு வீசிவிட்டு எங்கே திரும்பிச் சென்றன என்பதையோ, இலங்கை ராணுவத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதைக் கண்டுபிடிக்க இலங்கை ராணுவ உளவுப்பிரிவினர் களத்தில் இறக்கிவிடப்பட்டார்கள்.

உளவுப்பிரிவினர் முக்கியமாகப் பெற விரும்பிய தகவல், குண்டு வீசிவிட்டு திரும்பிய இரு விமானங்களும் எந்த இடத்தில் தரையிறங்கின என்பதை அறிவதுதான்.

அவர்கள் அதை கண்டுபிடித்தார்களா? (தொடரும்)

ஈழப் போரின் இறுதி நாட்கள்-22: இறுதி யுத்தத்தில் வான் புலிகளுக்கு என்ன நடந்தது?-2

ஈழப் போரின் இறுதி நாட்கள்-21: இறுதி யுத்தத்தில் வான் புலிகளுக்கு என்ன நடந்தது?-1


LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.