ஈழப் போரின் இறுதி நாட்கள்-22: இறுதி யுத்தத்தில் வான் புலிகளுக்கு என்ன நடந்தது?-2

0
7366

விடுதலைப் புலிகளின் விமானப்படை வான்புலிகள் விமானங்கள் முதல் தடவையாக பறந்து குண்டுவீசியபோது, அந்த சம்பவத்தை ரிசீவ் பண்ண யாரும் தயாராக இருக்கவில்லை. திருப்பி தாக்க, இலங்கை ராணுவமும் தயாராக இருக்கவில்லை. என்ன நடந்தது என்பதை புரிந்துகொண்டு தெரிவிக்க மீடியாக்களும் தயாராக இருக்கவில்லை. 2007-ம் ஆண்டு, மார்ச் 26-ம் தேதி, திங்கட்கிழமை, அதிகாலை 12.44-க்கு விடுதலைப்புலிகளது முதலாவது விமானக் குண்டுவீச்சு வானில் இருந்து தரையில் வீழ்ந்தது. முதலாவது குண்டு கொழும்பு கட்டுநாயக விமானத்தளத்தில் விழுந்து வெடித்தபோது, கட்டுநாயக விமானத் தளத்தில் பொறுப்பு அதிகாரியாக இருந்த விங் கமாண்டர் கொலித குணதிலகே, விமானத் தளத்தை நோக்கி தரை மார்க்கமாக நடக்கும் தாக்குதல் நடக்கிறது என்றுதான் நினைத்தார்.
விடுதலைப் புலிகளின் விமானப்படை வான்புலிகள் விமானங்கள் முதல் தடவையாக பறந்து குண்டுவீசியபோது, அந்த சம்பவத்தை ரிசீவ் பண்ண யாரும் தயாராக இருக்கவில்லை.

திருப்பி தாக்க, இலங்கை ராணுவமும் தயாராக இருக்கவில்லை. என்ன நடந்தது என்பதை புரிந்துகொண்டு தெரிவிக்க மீடியாக்களும் தயாராக இருக்கவில்லை.

2007-ம் ஆண்டு, மார்ச் 26-ம் தேதி, திங்கட்கிழமை, அதிகாலை 12.44-க்கு விடுதலைப்புலிகளது முதலாவது விமானக் குண்டுவீச்சு வானில் இருந்து தரையில் வீழ்ந்தது.

முதலாவது குண்டு கொழும்பு கட்டுநாயக விமானத்தளத்தில் விழுந்து வெடித்தபோது, கட்டுநாயக விமானத் தளத்தில் பொறுப்பு அதிகாரியாக இருந்த விங் கமாண்டர் கொலித குணதிலகே, விமானத் தளத்தை நோக்கி தரை மார்க்கமாக நடக்கும் தாக்குதல் நடக்கிறது என்றுதான் நினைத்தார்.

அதையடுத்து, தரையில் உள்ள காவலரண்களில், எந்த இடத்தில் புலிகள் ஊடுருவியிருக்கிறார் என அறிய, தரைக் காவலரண்களை தொடர்பு கொண்டார்.

ஆனால், அப்போது வான் புலிகளின் விமானங்கள், கட்டுநாயக வான் தளத்துக்கு மேலே பறந்து கொண்டிருந்தன.

மொத்தத்தில், அந்த கணத்தில் விமானப்படை தயாராக இருக்கவில்லை – விமானத் தாக்குதல் ஒன்றை விடுதலைப் புலிகள் நடத்துவார்கள் என்ற சாத்தியத்தை உடனடியாக ரிசீவ் பண்ணுவதற்கு!தாக்குதல் முடிந்து புலிகளின் விமானங்கள் திரும்பிச் சென்றபின், ஒரே பரபரப்பாகி விட்டது. மீடியாக்களின் கவரேஜ் உச்சத்தில் இருந்தது.ஆனால், நாம் குறிப்பிட்டதுபோல, விமான தாக்குதல் ஒன்றுக்கான செய்தியை சரியாக ரிசீவ் பண்ண, மீடியாக்களும் தயாராக இருக்கவில்லை. காரணம், உடனடியாக இந்த விமான தாக்குதல் பற்றி பல மீடியாக்களுக்கு (அதன் செய்தியாளர்களுக்கு) புரியவில்லை.

இது வழமையான ஒரு விமான குண்டுவீச்சு அல்ல என்பதால், விமானங்கள் பற்றிய ஆழமான அறிவு இல்லாவிட்டால், போட்டுக் குழப்ப வேண்டிய நிலை ஏற்படும்.

அதுதான் நடந்தது.

தமிழக மீடியாக்கள் பல, சுதந்திர தின விமானக் கண்காட்சிகளில் பார்த்த விமானப்படையின் விமான சாகச விளையாட்டுகளை கற்பனை செய்துகொண்டே, விடுதலைப் புலிகளின் விமான குண்டுவீச்சு தொடர்பாக செய்திகளை வெளியிட்டன. “விமானம் டைவ் அடித்து குண்டு வீசியது” “தரையில் இருந்து சுடப்பட்ட போது, தலைகீழாக பறந்து தப்பிக்கொண்டு அடுத்தடுத்து குண்டுகளை வீசியது” என்றெல்லாம் செய்திகள்.

அதி சர்க்குலேஷன் கொண்ட பிரபல தமிழ பத்திரிகை ஒன்று, முதல் பக்கத்தில் மிக்-29 போர் விமானத்தின் போட்டோ ஒன்றை பிரசுரித்து, “இதுதான், புலிகளின் விமானம்” என்றது.

நிஜத்தில் நடந்தது அப்படியெதுவும் அல்ல. அவர்கள் குறிப்பிட்ட சாகசச் செயல்கள் எதையும், விடுதலை புலிகள் பயன்படுத்திய இலகு ரக விமானங்களால் (light aircrafts) செய்ய முடியாது.

வான் புலிகளின் முதலாவது விமான குண்டுவீச்சு கொழும்பு கட்டுநாயக விமான நிலையத்துக்கு அருகிலுள்ள இலங்கை விமானப்படையின் வான் படைத்தளத்தில் நடந்தபோது, விமானப்படையின் 3 பேர் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்தனர்.

வான்புலி விமானங்களில் இருந்து போடப்பட்ட 3 குண்டுகள், ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்படும் ஹாங்கர் அருகேயும், இஞ்சினியரிங் ஹாங்கரும் அருகேயும் தரையில் விழுந்து வெடித்தன. ஒரு குண்டு தரையில் விழுந்தும் வெடிக்கவில்லை.

நடப்பது விமானத் தாக்குதல்தான் என விமானத்தளத்தில் இருந்தவர்கள் உணர்ந்து கொள்ளவே சிறிது நேரம் எடுத்தது. அதன்பின் தரையில் இருந்து சுட தொடங்கியபோது, புலிகளின் விமானங்கள் திரும்பி போய் விட்டன.

தாக்குதலின் போது இலங்கை விமானப்படையின் மிக் மற்றும் கிபிர் போர் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் சேதமடைந்ததாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இலங்கை விமானப்படை அதை மறுத்திருந்தது

(எந்த விமானமும் சேதமடையவில்லை என்பது உண்மைதான். ஆனால், அந்த தாக்குதல் இலங்கை பாதுகாப்பு படை தலைமையை நடுங்க வைத்தது, என்பதை பின்னாட்களில் இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷே பேட்டி ஒன்றில் தெரிவித்தார். அந்த விபரங்களை தெடரின் அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்க்கலாம்).

இதற்கிடையே கொழும்பு மீடியா ஒன்று பரபரப்பான செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி விமானப்படையின் வான்தளத்துக்கு அருகே அடையாளம் காணப்படாத விமான நகர்வுகள் அறியப்பட்டவுடன், விமானப்படை தனது போர் விமானங்களை வான் தளத்தில் இருந்து அப்புறப்படுத்தியது என்று கூறப்பட்டது.

வான்புலிகளின் குண்டுவீச்சு நடைபெறுவதற்கு மூன்று நிமிடங்களுக்கு முன்னர், விமானப்படையின் போர் விமானங்கள் இலங்கை வான்தளத்தில் இருந்து டேக்-ஆஃப் செய்து பறந்து விட்டன. அதனால்தான் விமானப்படை விமானங்களுக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றது கொழும்பு மீடியா செய்தி.

விடுதலைப் புலிகளுக்கு சாதகமாக எழுதப்பட்ட ‘விமான சாகச விளையாட்டு’ செய்தி போல, இலங்கை விமானப்படைக்கு சாதகமாக சிங்கள பத்திரிகையால் எழுதப்பட்ட செய்தி அது.

இலங்கை விமானப்படை தளபதிகளே, தமக்கு சாதகமானதாக நினைத்து எழுதப்பட்ட அந்த அந்த செய்தியை படித்தவுடன், திகைத்துப் போய் தலையில் கை வைத்திருப்பார்கள்!

இந்த செய்தியை எழுதியவர் விமான நகர்வு விஷயங்களில் சுத்தமாக பரிச்சயமில்லாத நபராக இருக்க வேண்டும். அவரது செய்தியில் பல ஓட்டைகள்!

முதலாவது வான் பகுதியில் அடையாளம் தெரியாத விமான நடமாட்டம் அவதானிக்கப்பட்டது என்றால், அது வயல்வெளியில் நின்று கொக்கு பார்த்தது போன்ற சமாச்சாரமல்ல. ரேடாரில் பார்த்திருக்க வேண்டும்.

ரேடாரில் விமான நகர்வு தெரிந்திருந்தால் விமானப்படைத்தளம் உடனடியாக தரையிலிருந்து வானத்துக்கு ஏவும் SAM ரக ஏவுகணைகளை ஏவ முயற்சி செய்திருப்பார்கள்.

இரண்டாவது, போர் விமான விமானிகள் விமானத்தின் காக்பிட்டில் அமர்ந்தபடி ரேடார் பார்த்துக் கொண்டிருப்பதில்லை – அதில் ஏதாவது தெரிந்தால் உடனே தமது விமானத்தை கிளப்பிக்கொண்டு பறந்து போவதற்கு.

ரேடார் இருப்பது தரை கட்டுப்பாட்டு மையத்தில்!

விமான நகர்வு ரேடாரில் தெரிந்திருந்தால், விமானத் தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து அந்த விபரம் ஆபரேஷன் சென்டருக்குத் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விமானிக்கு அறிவித்து, விமானி விமானத்தில் ஏறி, இயக்கி, பறப்பதற்கு சுமார் 10 இலிருந்து 15 நிமிடங்கள் கால அவகாசம் தேவை.

சிங்கள பத்திரிகை குறிப்பிட்டது போல குண்டு வீச்சு நடைபெறுவதற்கு 3 நிமிடங்களுக்கு முன்னர் போர் விமானங்கள் புறப்பட்டுச் சென்றன என்றால், வானில் அடையாளம் தெரியாத விமானங்களின் நகர்வை டிடெக்ட் பண்ணி குறைந்தபட்சம் 13 நிமிடங்களின் பின்னர்தான் வான்புலிகளின் விமானம் விமானப்படை தளத்துக்கு மேலே வந்திருக்க வேண்டும்.

இந்த 13 நிமிடங்கள் போதும், எத்தனையோ பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தரையில் செய்வதற்கு! அப்படி எதுவும் செய்யப்படவில்லை.

இப்படி இரு தரப்பு மீடியா செய்திகளும், தத்தம் தரப்பை சிலாகித்து, அதீத கற்பனை தகவல்களை வெளியிட்டுக் கொண்டிருக்க-

விடுதலைப் புலிகளின் முதலாவது விமான தாக்குதல் நடந்த அந்த இரவில், நிஜமாக என்னதான் நடந்தது?

அந்த தாக்குதலின் பின் நடந்த ஃபாலோ-அப் என்ன? அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம் (தொடரும்)

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.