ஈழப் போரின் இறுதி நாட்கள்-20: புலிகளுக்கு எதிராக வெளிநாட்டு உளவுத்துறைகள்-2

0
7369

இலங்கை அரசுக்கு வெளிநாட்டு உளவுத்துறைகள் தகவல் கொடுத்ததற்கு நாம் குறிப்பிட்ட மூன்று காரணங்களில் ஒன்றை கடந்த அத்தியாயத்தில் பார்த்தீர்கள். இரண்டாவது காரணம், விடுதலைப் புலிகள் இயக்கம் நடத்திய தற்கொலை தாக்குதல்கள். செப். 11-ம் தேதிய அமெரிக்க தாக்குதலின்பின், தற்கொலை தாக்குதல்கள் என்பது அமெரிக்கா, பிரிட்டன் உட்பட கிட்டத்தட்ட அனைத்து மேலை நாடுகளாலும் அதீதமாக வெறுக்கப்பட்ட நடவடிக்கையாக மாறியது. தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்த அனைத்து அமைப்புகளும், விதிவிலக்கு இல்லாமல், பயங்கரவாத இயக்கங்கள் என்ற வட்டத்துக்குள் வந்தன.விடுதலைப் புலிகள் இயக்கமும் அதே வட்டத்துக்குள் வந்தது. உலக அளவில் மொத்தம் 32 நாடுகள், விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக தடை செய்தன. (தொடர் கட்டுரை)
இலங்கை அரசுக்கு வெளிநாட்டு உளவுத்துறைகள் தகவல் கொடுத்ததற்கு நாம் குறிப்பிட்ட மூன்று காரணங்களில் ஒன்றை கடந்த அத்தியாயத்தில் பார்த்தீர்கள். இரண்டாவது காரணம், விடுதலைப் புலிகள் இயக்கம் நடத்திய தற்கொலை தாக்குதல்கள்.

செப். 11-ம் தேதிய அமெரிக்க தாக்குதலின்பின், தற்கொலை தாக்குதல்கள் என்பது அமெரிக்கா, பிரிட்டன் உட்பட கிட்டத்தட்ட அனைத்து மேலை நாடுகளாலும் அதீதமாக வெறுக்கப்பட்ட நடவடிக்கையாக மாறியது.

தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்த அனைத்து அமைப்புகளும், விதிவிலக்கு இல்லாமல், பயங்கரவாத இயக்கங்கள் என்ற வட்டத்துக்குள் வந்தன.

விடுதலைப் புலிகள் இயக்கமும் அதே வட்டத்துக்குள் வந்தது. உலக அளவில் மொத்தம் 32 நாடுகள், விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக தடை செய்தன.

இது எவ்வளவு சீரியசான விஷயம் என்பதை, விடுதலைப் புலிகள் இயக்க தலைமை யுத்தத்தின் இறுதிவரை உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை.

ஒரு மேலை நாடு, இதுபோன்ற அமைப்பு ஒன்றை பயங்கரவாத இயக்கமாக தடை செய்தால், அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள், அல்லது, அந்த இயக்கத்துடன் ஏதாவது தொடர்பு உள்ளவர்கள் தமது நாட்டில் உள்ளார்களா என்று முதலில் பார்ப்பார்கள்.

இருந்தால், குறிப்பிட்ட இயக்கத்தின் நடவடிக்கைகளை கண்காணித்துக் கொண்டிருக்க தமது நாட்டு தேசிய உளவுத்துறையில் ஒரு தனிப்பிரிவை ஏற்படுத்துவார்கள்.

2006-ம் ஆண்டில் இருந்தே பல நாடுகளின் தேசிய உளவுத்துறைகளில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க தனிப் பிரிவுகள் உருவாக தொடங்கின.

இவை குறிப்பிட்ட ஒரு இயக்கத்தை மட்டும் கண்காணிக்கும் சிறப்பு பிரிவுகள். அதனால், அவர்களுக்கு தாம் கண்காணிக்கும் இயக்கம் பற்றிய தகவல்கள் அத்துப்படி. அதுவும், குறிப்பிட்ட இயக்கம் தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து நடத்திவரும் இயக்கமாக இருந்தால், கண்காணிப்பு தீவிரமாகும்.

விடுதலைப் புலிகள் இயக்கம், தாம் நடத்திய அனைத்து தற்கொலை தாக்குதல்களுக்கும் வெளிப்படையாக உரிமை கோரியதில்லை. அப்படி உரிமை கோராவிட்டால், எங்கோ லாங்க்லியில் உள்ள சி.ஐ.ஏ.-வின் விடுதலைப் புலிகளை கண்காணிக்கும் தனிப்பிரிவுக்கு தகவல் தெரிய வராது என நினைத்தால், அதைப் போன்ற தமாஷ் வேறு எதுவும் இருக்க முடியாது.

அவர்கள், பக்கா ப்ரொஃபெஷனல் உளவுத்துறை. அவர்களிடம் உள்ள உளவு பார்க்கும் வசதிகள், மலைப்பை ஏற்படுத்தக்கூடியவை. லாங்க்லியில் இருந்தபடியே, கிளிநொச்சியில் நடக்கும் விஷயங்களை, மிக சுலபமாக தெரிந்து கொள்வார்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தொடர் தற்கொலைத் தாக்குதல்கள், அனேக மேலைநாட்டு உளவுத்துறைகளை, விடுதலைப் புலிகளுக்கு எதிராக கடும் நிலைப்பாட்டை எடுக்க வைத்தது. ஆனால், அந்த நாடுகளில் இருந்த விடுதலைப் புலிகளின் செயல்பாட்டார்கள், மிக வெளிப்படையாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

இதையடுத்து, 2008-ம் ஆண்டு மத்தியில், பெரிய உளவுத்துறைகள் சில, விடுதலைப் புலிகள் இயக்கமே இருக்கக்கூடாது என்ற முடிவை எடுத்து விட்டன.

மேலை நாட்டு உளவுத்துறைகள் விடுதலைப் புலிகளுக்கு முடிவு கட்டும் தீர்மானத்துக்கு வர காரணமாக இருந்த முக்கிய தற்கொலைத் தாக்குதல், 2008-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி நடந்தது.

கொழும்பு பிரதான ரயில்வே ஸ்டேஷனில், உடலில் வெடிகுண்டுகளை கட்டிவந்த பெண் ஒருவர் குண்டுகளை வெடிக்க வைத்ததில், ரயில்வே பெட்டி ஒன்றுக்கு வெளியே நின்றிருந்த 9 பள்ளிச் சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.

இவர்கள் டி.எஸ். சேனநாயக பள்ளியின் மாணவர்கள். வெளியூர் ஒன்றில் மேட்ச் விளையாடிவிட்டு திரும்பிக் கொண்டிருந்த பேஸ்பால் டீமின் உறுப்பினர்கள்.

ஒரு பள்ளியின் பேஸ்பால் டீமே தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம், இலங்கையை உலுக்கியது. அதுவரை விடுதலைப் புலிகளுடன் வெவ்வேறு தொடர்புகளை வைத்திருந்த சில வெளிநாட்டு தூதரகங்கள், தமது தொடர்புகளை முறித்துக் கொண்டார்கள்.

விடுதலைப் புலிகள் இந்த தாக்குதலுக்கும் உரிமை கோரவில்லை. ஆனால், அதை யார் செய்திருப்பார்கள் என்பதை வெளிநாட்டு உளவுத்துறைகள் ஊகித்து கொண்டார்கள். அப்போதுதான், இந்த தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பான சில உளவுத் தகவல் பரிமாற்றங்களை வெளிநாட்டு உளவுத்துறைகள், இலங்கை உளவுத்துறை SIS-க்கு வழங்கத் தொடங்கின.

கிடைத்த உளவுத் தகவல்களின் அடிப்படையில், வெளிநாடு ஒன்றில் இருந்த விடுதலைப் புலிகள் செயல்பாட்டாளர் போனில் தகவல்களை பரிமாறிக் கொண்ட கொழும்பு வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இவர், கொழும்பு கொட்டஹேனா என்ற இடத்தில் வர்த்தகம் செய்த கடை உரிமையாளர். விசாரணையில் இவர் சில விஷயங்களை ஒப்புக்கொண்டார்.

ரயில்வே ஸ்டேஷனில் மனித வெடிகுண்டாக வெடித்த பெண்ணை, தமது வாகனத்தில் ஏற்றிச்சென்று இறக்கியவர் இவர்தான். அந்தப் பெண் அணிந்திருந்த தற்கொலை அங்கி இவரது கொட்டஹேனா கடையில்தான் இருந்தது.

அந்தப் பெண், இவரது கடைக்கு வந்தபோது, இவர் கடைக்கு வெளியே போய், கடையை வெளிப்புறமாக பூட்டிக் கொண்டார். கடைக்கு உள்ளே வைத்து அந்த பெண் தற்கொலை அங்கியை அணிந்து கொண்டார். அதன்பின் தமது வாகனத்தில் அந்த பெண்ணை ஏற்றிக்கொண்ட இவர், கொழும்பு ரயில்வே ஸ்டேஷனின் பின்புற வாயில் அருகே இறக்கி விட்டார்.

இறக்கி விடப்பட்ட பெண், தற்கொலை தாக்குதல் நடத்த வேண்டிய இடம், கொழும்பு ரயில்வே நிலையம் அல்ல. அதற்கு அருகேயுள்ள லேக்ஹவுஸ் என்ற அரசு மீடியா பில்டிங்குக்கு அருகேதான் தற்கொலை தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்தது.

காரணம் என்னவென்றால், அது நடந்த தினத்துக்கு மறுதினம் (பிப்ரவரி 4-ம் தேதி), இலங்கையின் சுதந்திர தினம். அதற்காக லேக்ஹவுஸூக்கு முன் ராணுவ அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அந்த இடத்தை அடைவதற்கு குறுக்குப் பாதையாக ரயில்வே ஸ்டேஷனின் உட்புறமாக செல்ல தொடங்கினார் இந்தப் பெண்.

அன்றைய தினத்தில், இலங்கை ராணுவம் ரயில்வே ஸ்டேஷனில் திடீர் சோதனை நடத்தத் தொடங்கியது. இந்த பெண், ரயில்வே ஸ்டேஷனுக்குள் சென்றபின், ஸ்டேஷனின் அனைத்து வாயில்களுக்கும் ராணுவம் வந்துவிட்டது.

ஸ்டேஷனை விட்டு வெளியேறிய ஒவ்வொரு பயணியும் சோதனையிடப்பட்டனர்.

வெளியே போனால் சிக்கிக்கொள்ள நேரிடும் என்பதால், ஸ்டேஷனுக்கு உள்ளே பிளாட்பாரம் ஒன்றில் வைத்து தனது உடலில் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்க வைத்தார் அந்தப் பெண். பிளாட்பாரத்தில் அவர் வெடித்த இடத்தில் நின்றிருந்த ரயில் பெட்டிக்கு வெளியே டி.எஸ். சேனநாயக பள்ளியின் பேஸ்பால் டீம் மாணவர்கள் நின்றிருந்தனர்!

இவ்வளவு விபரங்களும், வெளிநாட்டு உளவுத்துறை ஒன்று கொடுத்த உளவுத் தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட கொழும்பு வர்த்தகர் ஒருவர் மூலமே தெரியவந்தது.

மேலே குறிப்பிட்டது, இலங்கை அரசுக்கு வெளிநாட்டு உளவுத்துறைகள் தகவல் கொடுத்ததற்கு இரண்டாவது காரணம். முன்றாவது காரணத்தை, தொடரின் அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம். (தொடரும்)

-ரிஷி-

ஈழப் போரின் இறுதி நாட்கள்-18: புலிகளுக்கு எதிராக வெளிநாட்டு உளவுத்துறைகள்-1

ஈழப் போரின் இறுதி நாட்கள்-17: கொழும்புவில் கரும்புலிகள் இருப்பிடத்துக்கு லீட் கொடுத்த MI-5

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.