ஈழப் போரின் இறுதி நாட்கள் -(பாகம்-15): புலிகளுடன் பேசும் போன் வைத்திருந்த ‘ஆர்மி அங்கிள்’

0
7372

கொழும்பு, பம்பலபிட்டிய என்ற இடத்தில் உள்ள கார் பார்க்கிங்குக்கு சந்திக்க வருமாறு அழைக்கப்பட்ட ‘ஐயா’ என்ற சங்கேதப் பெயருடைய விடுதலைப்புலிகள் தொடர்பாளர், விலையுயர்ந்த ‘பிரான்ட் நேம்’ கோட்-சூட் அணிந்து, காரிலிருந்து இறங்கினார் என கடந்த அத்தியாயத்தை முடித்திருந்தோம். கார் பார்க்கிங்கில் மறைந்திருந்த இலங்கை உளவுத் துறையினர் வெளிப்பட்டு ஐயாவை கைது செய்தனர். இவரை விசாரித்தபோது, அதுவரை இலங்கை உளவுத்துறையால் கைது செய்யப்பட்டவர்களில், மிக முக்கிய தகவல்கள் அதிகம்   வைத்திருந்த ஒருவர் இவர்தான் என தெரியவந்தது. இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்து கொல்லப்பட்ட லக்ஷ்மன் கதிர்காமரின் கொலை ஆபரேஷனில், பிரதான திட்டமிடல் செய்தவரும் இவர்தான என்றும் தெரியவந்தது. ஐயா கைது செய்யப்பட்டது, இலங்கையில் இறுதி யுத்தம் முடிவுக்கு வருவதற்கு 8 நாட்களின்முன், மே மாதம் 10-ம் தேதி (2009).

கொழும்பு, பம்பலபிட்டிய என்ற இடத்தில் உள்ள கார் பார்க்கிங்குக்கு சந்திக்க வருமாறு அழைக்கப்பட்ட ‘ஐயா’ என்ற சங்கேதப் பெயருடைய விடுதலைப்புலிகள் தொடர்பாளர், விலையுயர்ந்த ‘பிரான்ட் நேம்’ கோட்-சூட் அணிந்து, காரிலிருந்து இறங்கினார் என கடந்த அத்தியாயத்தை முடித்திருந்தோம்.

கார் பார்க்கிங்கில் மறைந்திருந்த இலங்கை உளவுத் துறையினர் வெளிப்பட்டு ஐயாவை கைது செய்தனர்.

இவரை விசாரித்தபோது, அதுவரை இலங்கை உளவுத்துறையால் கைது செய்யப்பட்டவர்களில், மிக முக்கிய தகவல்கள் அதிகம் வைத்திருந்த ஒருவர் இவர்தான் என தெரியவந்தது. இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்து கொல்லப்பட்ட லக்ஷ்மன் கதிர்காமரின் கொலை ஆபரேஷனில், பிரதான திட்டமிடல் செய்தவரும் இவர்தான என்றும் தெரியவந்தது.

ஐயா கைது செய்யப்பட்டது, இலங்கையில் இறுதி யுத்தம் முடிவுக்கு வருவதற்கு 8 நாட்களின்முன், மே மாதம் 10-ம் தேதி (2009).

அந்த இறுதி நேரத்தில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே மீது மனித வெடிகுண்டு தாக்குதல் ஒன்றை நடத்தி, யுத்தத்தை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தபோதுதான், அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் கைது செய்யப்பட்ட தினத்தில் இருந்து 4 நாட்களில் மே, 14-ம் தேதி, இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷே G-11 மாநாட்டில் கலந்துகொள்ள ஜோர்தான் சென்று இறங்குவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. அவர் ஜோர்தான் செல்வதற்காக கொழும்பு விமான நிலையம் செல்லும்போதே, பெரிய தற்கொலை தாக்குதல் நடத்தி அவரை கொல்ல திட்டமிடப்பட்டு இருந்தது.

அதுவரை அகப்பட்டுக்கொண்ட விடுதலைப் புலிகளின் கொழும்பு இணைப்பாளர்களுக்கும், ஐயாவுக்கும் இடையே இருந்த மிகப் பெரிய வேறுபாடு, அவரது தோற்றம் மற்றும் நடையுடை பாவனைகள்.

கொழும்பு ஹை-சொஸைட்டி குடும்பத்தை சேர்ந்த இளைஞர் போல தோற்றமளித்த ஐயா, விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் காரில் பவனிவந்து கொண்டிருந்தவர். எப்போதும், பெரிய பிசினெஸ் எக்ஸகியூட்டிவ் போல உடையணிந்து நடமாடிய அவர்மீது யாருக்கும், எந்த சந்தேகமும் ஏற்பட்டிருக்கவில்லை.

இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த நாட்களில், கொழும்புவில் வீதிதோறும் தடைகள் ஏற்படுத்தப்பட்டு, பலத்த ராணுவ சோதனை நடைபெறுவது வழக்கம். தடுக்கப்படும் நபரின் அடையாள அட்டையில் இருந்து அவர் தமிழர் என்று தெரியவந்தால், அவரிடமிருந்த அனைத்துப் பொருட்களையும் அக்குவேறு ஆணிவேறாக சோதனையிட்டு விட்டே அனுப்புவார்கள்.

ஐயாவை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியபோது, கொழும்புவின் எந்தவொரு வீதித் தடை சோதனையிலும் அதுவரை தமது காரை சோதனையிட்டதே இல்லை என்றார்.

அவரது ஆடம்பர காரையும், அதற்குள் இருந்த அவரது ஹை-சொஸைட்டி தோற்றத்தையும் பார்த்த ராணுவத்தினர், அவர் யாரோ மிகப் பெரிய புள்ளி என கருதி, அடையாள அட்டையை காண்பிக்கும்படிகூட கேட்டதில்லையாம்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தமது ஆடம்பர காரின் சீட் அடியே, மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு தேவையான வெடிப்பொருட்களையும், தற்கொலை அங்கிகளையும், சுலபமாக கொழும்புவின் எந்தப் பகுதிக்கும் எடுத்துச் செல்ல முடிந்ததாக விசாரணையில் ஐயா தெரிவித்தார்.

கொழும்புவில் நடந்த பல தற்கொலை தாக்குதல்களின்போது, மனித வெடிகுண்டாக வெடித்து சிதறப்போகும் கரும்புலி தற்கொலை அங்கி அணியாமல் ராணுவ செக் பாயின்ட்களை கடந்து செல்ல, பிளாஸ்டிக் வெடிகுண்டு பொருத்தப்பட்ட தற்கொலை அங்கிகளை தமது காரில் எடுத்துச் சென்று கொடுத்துவிட்டு வந்ததாகவும் ஐயா தெரிவித்தார்.

யுத்தம் முடிவதற்கு சில தினங்களுக்கு முன், அதுவும் ஜனாதிபதி ராஜபக்ஷேவின் வெளிநாட்டு பயணத்துக்கு முன் ஐயா அகப்பட்டது, யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் புலிகள் வைத்திருந்த மாஸ்டர் பிளானை கவிழ்த்து விட்டது.

யுத்தத்தை நிறுத்துவதற்காக ஜனாதிபதி ராஜபக்ஷேவை கொல்வதற்கு, சிங்கள ராணுவ அதிகாரி ஒருவரே (அந்த நேரத்தில் ‘ஆர்மி அங்கிளின்’ நிஜ பெயர், ஐயாவுக்கும் தெரிந்திருக்கவில்லை) காரணமாக இருக்கப் போகிறார் என்ற தகவலை, உளவுத்துறை விசாரணையாளர்களிடம் தெரிவித்தார் ஐயா.

திகைத்துப் போன உளவுத்துறை, அவசரகதியில் ‘ஆர்மி அங்கிளை’ தேடத் தொடங்கியது.

இந்த ஆர்மி அங்கிளும் இரண்டு செல்போன்களை வைத்து இயக்கிக் கொண்டிருந்தார். விடுதலைப் புலிகளின் தொடர்பாளர்களுடன் பேசும் போனில், மற்றவர்களுடன் பேசுவதில்லை. இதனால், உளவுத்துறையினர் தமது கண்காணிப்பில் வைத்திருந்த போன் இலக்கம் எப்போதும் சுவிட்ச் ஆஃப் என்ற நிலையிலேயே இருந்தது.

ஜனாதிபதி ராஜபக்ஷேவின் வெளிநாட்டு பயணத்துக்கான நாள் நெருங்கிக் கொண்டிருக்க, ஆர்மி அங்கிள் அகப்படவில்லை.

பாதுகாப்பு பணியில்  ஈடுபடுத்தப்பட்டுள்ள  ராணுவத்தினரில்  ஒருவராக அந்த ஆர்மி அங்கிள் இருக்கலாம். அவரது பதவி நிலை என்னவென்றும்   தெரியாது. பாதுகாப்பு   பணிக்கு பொறுப்பாகவுள்ள   உயரதிகாரியாக கூட இருக்கலாம். உத்தரவிடும் அதிகாரியாக இருக்கலாம். ராணுவ  உளவுத்துறையை  சேர்ந்தவராக இருக்கலாம். ஏன், விமான நிலைய பாதுகாப்பு பணியில் உள்ள ராணுவத்தினரின் மேலதிகாரியாககூட இருக்கலாம்.

ஜனாதிபதி ராஜபக்ஷேவை கொல்லும் விடுதலைப் புலிகளின் திட்டத்துக்கு ஆர்மி அங்கிள் முக்கியமானவர் என்று அய்யா கூறிவிட்ட நிலையில், ஜனாதிபதி வெளிநாடு செல்ல வேண்டிய நாள் நெருங்க, நெருங்க என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தது உளவுத்துறை.

நீர்கொழும்புவில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி தொடர்பாளருடன் இந்த ஆர்மி அங்கிள் ஒருமுறை போனில் பேசியபோது, அந்த போன் ரத்மலான டவருக்கும், ஹொமகம டவருக்கும் இடையே எங்கிருந்தோதான் வந்தது என்பதை தவிர வேறு தடயம் ஏதுமில்லை.

அவர் பேசிய போன் இலக்கத்துக்குரிய சிம் கார்டும், போலிப் பெயரில் எடுக்கப்பட்டிருந்தது.

இப்போது அந்த போன் இலக்கத்தை ட்ரேஸ் பண்ண பதிவு செய்து விட்டதால், மற்றொரு தடவை அந்த இலக்கத்தில் இருந்து அவர் பேசினால், இடத்தை லொகேட் பண்ண முடியும். ஆனால் ஆர்மி அங்கிளோ, அந்த போனையே சுவிட்ச் ஆன் பண்ணுவதாக இல்லை. விடுதலைப் புலிகளுடன் பேசுவதற்காக மட்டுமே அந்த போனை அவர் உபயோகித்தார்.

இதனால், அடுத்த போன் வரும்வரை உளவுத்துறை பதட்டத்துடன் காத்திருந்தது.

இதற்கிடையே ஆர்மி அங்கிள் தன் பங்குக்கு முட்டாள்தனமான காரியம் ஒன்றை செய்துவிட்டார்.

எக்கச்சக்கமாக மது அருந்தும் நபர் அவர். ஒரு நாள் இரவு பார் ஒன்றுக்கு சென்று மது அருந்திவிட்டு, விடுலைப் புலிகளை அழைக்கும் போனை சுவிட்ச் ஆன் செய்து, டாக்சி ஒன்றை வரவழைத்து அதில் ஏறி வீட்டுக்குச் சென்றார் அவர்.

அடுத்த ஓரிரு மணி நேரத்தில் உளவுத்துறையின் கஸ்டடியில் இருந்தார் ஆர்மி அங்கிள். அவரது பெயர், லெப்டினெட் கர்னல் ரஞ்சித் பெரேரா என்று தெரிந்தது.

அவரை விசாரித்தபோது, ஏற்கனவே ஜனாதிபதி ராஜபக்ஷேவை கொலை செய்வதற்கு, தற்கொலை அங்கி அணிந்த கரும்புலியை அழைத்துச் சென்ற சம்பவங்கள் தெரியவந்தன.

அவற்றில் ஒன்றில், மனித வெடிகுண்டாக வெடிக்க தயாராக இருந்த கரும்புலிக்கு, தற்கொலை அங்கிக்கு மேல் இலங்கை ராணுவ சீருடை அணிவித்து, ராணுவ சிப்பாயாக, தமது ராணுவ ஜீப்பில் அழைத்துச் சென்றிருந்தார் அவர்! (தொடரும்….)

-ரிஷி-

(முன்னைய  தொடர்களை பார்வையிட  இங்கே… அழுத்தவும்  ஈழப் போரின் இறுதி நாட்கள்)

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.