நடிகர் கமல் மகளை தாக்கியது ஏன்? கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்

0
299

நடிகர் கமல்ஹாசன் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசனை தாக்கியது ஏன்? என்பது பற்றி கைதானவர் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மும்பை: நடிகர் கமல்ஹாசன் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசனை தாக்கியது ஏன்? என்பது பற்றி கைதானவர் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் நடிகை ஸ்ருதிஹாசன், மும்பை பாந்திரா கடற்கரையோர பகுதியில் உள்ள பிரபலமான மேரி நிகேதன் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் 6வது மாடியில் வசித்து வருகிறார்.

கடந்த 19ஆம் தேதி ஸ்ருதிஹாசன், அவரது வீட்டிலேயே அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அந்த நபர் அங்கிருந்து தப்பினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ருதிஹாசன், பாந்திரா காவல்துறையில் புகார் செய்தார். மானபங்கம், அத்துமீறி நுழைதல் போன்ற பிரிவுகளின் கீழ் அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும், ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து அவரை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்நிலையில், ஸ்ருதிஹாசனை தாக்கியவரை மும்பை தாராவியில் நேற்று காவல்துறையினர் பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெயர் அசோக் சந்தர் திருமூக்கே (45) என்று தெரியவந்தது.

தாராவியில வசித்து வரும் அசோக், ஸ்ருதிஹாசன் தங்கி உள்ள குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்ததை ஒப்புக் கொண்டதோடு , அவரை தாக்கவில்லை என்று கூறியுள்ளார்.

காவல்துறையினரிடம் அசோக் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில், « மும்பையில் உள்ள போரிவிலி திரைப்பட நகரில் உதவியாளராக வேலை செய்து வருகிறேன். ஸ்ருதிஹாசனுக்கு உதவியாளர் தேவை என்று கேள்விபட்டேன். எனது தம்பி வேலை எதுவும் இன்றி இருக்கிறான். இதனால் அந்த வேலையை அவனுக்கு வாங்கி கொடுக்க முயற்சி செய்தேன். இதற்காக ஸ்ருதிஹாசனை நேரில் சந்திக்க முடிவு செய்தேன்.

படப்பிடிப்பு நடந்த இடங்களுக்கு சென்று அவரை சந்திக்க முற்பட்டேன். ஆனால் அவரை நேரில் சந்திக்க முடியவில்லை. இதனால் அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு, அதில் அவர் வசிக்கும் வீடு ஆகியவை பற்றி விசாரித்து தெரிந்து கொண்டேன். அங்கு நேரில் சென்று ஸ்ருதிஹாசனை சந்திக்க முற்பட்டேன். அவரை நான் தாக்கவில்லை » என்று கூறியுள்ளார்.

ஆனால், அசோக் சொல்வது உண்மையா? என்று காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

*