ஈழப் போரின் இறுதி நாட்கள்- 8: வன்னியில் புலிகளின் சில தளபதிகளுக்கு ஏற்பட்ட சந்தேகம்

0
7421

மூதூரில்  இருந்து   பின்வாங்க  தொடங்கிய  விடுதலைப்  புலிகள், அதற்கு அருகில் உள்ள செல்வநகர், பன்சால்வத்த, 64-வது மைல் போஸ்ட், கட்டபறிச்சான் ஆகிய இடங்களில் தாக்குதல்களை நடத்த தொடங்கினார்கள் என்று கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தோம். இந்த நடவடிக்கைதான், கிழக்கு  மாகாணத்தில்  யுத்தம் பெரிதாக  தொடங்க வழிவகுத்தது  என்றும்   குறிப்பிட்டிருந்தோம் . இது நடந்த   நேரத்தில், இலங்கை   ராணுவம்  உடனடி யுத்தம்  ஒன்றுக்கு தயாராக இருக்கவில்லை. யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்த நேரம் அது. புலிகள் தாக்குதல் தொடுப்பார்கள் என ராணுவம் ஊகிக்கவில்லை. அதனால், புலிகள் தாக்குதலை தொடங்கிய உடனேயே, ராணுவம் அனைத்து இடங்களிலும் அலர்ட் ஆகவில்லை.
மூதூரில்  இருந்து   பின்வாங்க  தொடங்கிய  விடுதலைப்  புலிகள், அதற்கு அருகில் உள்ள செல்வநகர், பன்சால்வத்த, 64-வது மைல் போஸ்ட், கட்டபறிச்சான் ஆகிய இடங்களில் தாக்குதல்களை நடத்த தொடங்கினார்கள் என்று கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தோம். இந்த நடவடிக்கைதான், கிழக்கு மாகாணத்தில் யுத்தம் பெரிதாக தொடங்க வழிவகுத்தது என்றும் குறிப்பிட்டிருந்தோம்  (பழைய அத்தியாயங்களை தவற விட்டிருந்தால், இங்கே கிளிக் செய்யவும்).

இது நடந்த நேரத்தில், இலங்கை ராணுவம் உடனடி யுத்தம் ஒன்றுக்கு தயாராக இருக்கவில்லை. யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்த நேரம் அது. புலிகள் தாக்குதல் தொடுப்பார்கள் என ராணுவம் ஊகிக்கவில்லை. அதனால், புலிகள் தாக்குதலை தொடங்கிய உடனேயே, ராணுவம் அனைத்து இடங்களிலும் அலர்ட் ஆகவில்லை.

மூதூரில் புலிகள் நடத்திய தாக்குதலை சமாளித்து, தமது முகாம்களை மீட்கவே, ராணுவத்துக்கு 4 நாட்கள் பிடித்தது. புலிகளை மூதூரில் இருந்து வெளியேற்ற, 700 கடற்படையினரை மூதூருக்கு கொண்டுவர வேண்டியிருந்தது. அந்த நிலையிலும், அதற்கு அருகில் இருந்த ராணுவ முகாம்கள் பலப்படுத்தப்படவில்லை.

மூதூரில் இருந்து பின்வாங்க தொடங்கிய புலிகள் தோப்பூரில் இருந்த இலங்கை ராணுவத்தின் இலகு இன்ஃபென்டரி 7-வது படைப்பிரிவின் தலைமை கேம்ப் மீது தாக்குதல் நடத்தினர். மூதூரில் இருந்து பின்வாங்கிய புலிகள், எதற்காக தோப்பூர் வரை சென்றார்கள் என்பதற்கு சரியான விளக்கம் இல்லை.

செல்வநகர் ராணுவ முகாமில் இருந்த ராணுவத்தினர், புலிகள் தமது 152mm ஆட்டிலரி பீரங்கிகளை வீதியால் கொண்டு செல்வதை கண்டார்கள். அதை தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்த தேவையான பலம், செல்வநகர் ராணுவ முகாமில் அப்போது இருக்கவில்லை. எனவே, பேசாமல் வேடிக்கை பார்த்துவிட்டு, இந்த தகவலை ராணுவ தலைமையகத்துக்கு அறிவித்ததோடு நிறுத்திக் கொண்டார்கள்.

இந்த நேரத்தில், தோப்பூர் ராணுவ முகாமுடன் அட்டாச்ட் ஆக இருந்த ராணுவ உளவுத்துறை ஆள் ஒரு தகவலை கொண்டு வந்தார்.

அப்போது தோப்பூர் இலகு இன்ஃபென்டரி 7-வது படைப்பிரிவு முகாமுடன் அட்டாச்ட்டாக ராணுவ உளவுப் பிரிவைச் சேர்ந்த இருவர் இருந்தனர். அவர்களில் செனிவிரட்ன என்பவர் ஒருவர். தமிழ் பேசக்கூடிய அவர், தோப்பூரில் வசித்த மக்கள் மத்தியில் நடமாடிக் கொண்டு இருந்தவர்.

இந்த செனிவிரட்ன ராணுவ உளவுப் பிரிவைச் சேர்ந்தவர் என தோப்பூர் மக்கள் தெரிந்து கொண்டிருக்கவில்லை. ராணுவத்துக்கு உணவுப் பொருட்களை சப்ளை செய்யும் ஒரு கான்ட்ராக்ட் சப்ளையர் என்றே அவர் அங்கு அறியப்பட்டிருந்தார்.

புலிகள் மூதூரில் இருந்து முழுமையாக பின்வாங்கிய தினத்தன்று இரவு, அவர் ஒரு உளவுத் தகவல் கொண்டு வந்தார். அந்த தகவல் என்னவென்றால், தோப்பூருக்கு அருகேயுள்ள கிராமங்களில் இருந்த அனேக தமிழர்கள், தமது கிராமங்களை விட்டு வெளியேற தொடங்குகிறார்கள் என்பதே.

அவர்களிடம் விசாரித்தபோது, “மூதூரில் சண்டை நடந்ததுபோல இங்கும் நடக்கலாம் என்ற ஊகத்தில் வெளியேறுகிறோம்” என்ற பதில் வந்ததாம். அதற்கு செனிவிரட்ன கொடுத்த விளக்கம், “இவர்கள் ஊக அடிப்படையில் வெளியேறவில்லை. இந்தப் பகுதியில் தாக்குதல் நடத்த போகிறோம் என்று புலிகள் இவர்களுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்”

இந்த தகவலும், கொழும்பில் இருந்த ராணுவ தலைமையகத்துக்கு போய் சேர்ந்தது. அவர்கள் அங்கே இது தொடர்பாக முடிவு எடுப்பதற்கு முன், கிழக்கு மாகாணத்தில் சம்பவங்கள் கடகடவென நடக்க தொடங்கின.

செனிவிரட்ன தகவல் கொண்டுவந்த மறுநாளே, கட்டப்பறிச்சான் ராணுவ முகாமின் காவலரண் (சென்ட்ரி) மீது புலிகள் தாக்குதல் நடத்தினர். இந்த காவலரண் கட்டப்பறிச்சான் ராணுவ முகாமுக்கு வெளியேயுள்ள சிறிய பாலம் ஒன்றில் இருந்தது.

அந்த தாக்குதலில், காவல் பணியில் இருந்த சில ராணுவத்தினர் காயமடைந்தனர். அதையடுத்து, காவலரணை கைவிட்டுவிட்டு, முகாமுக்குள் ஓடி வந்தார்கள் அவர்கள்.

அது நடந்தபோது, தோப்பூர் இலகு இன்ஃபென்டரி 7-வது படைப்பிரிவு ராணுவ முகாமின் பொறுப்பு அதிகாரியாக இருந்தவர், லெப். கர்னல் செனகா விஜேசூர்யா.

பழைய சம்பவங்களை யுத்தம் முடிந்தபின் நினைவுகூர்ந்த விஜேசூர்யா, “யுத்த நிறுத்தம் முடிந்து, மீண்டும் யுத்தம் தொடங்குவதற்கான ஆரம்ப அறிகுறிகள் இவை என்பதை அந்த நிமிடத்தில் நான் புரிந்து கொண்டேன்” என்றார்.

“எமது காவலரண் தாக்கப்பட்ட விஷயத்தை ராணுவ தலைமையகத்துக்கு அறிவிப்பதற்கு முன்னர், எமது ராணுவ முகாமின் அதிகாரத்தில் கீழ் வந்த சிறிய ராணுவ முகாம்களுக்கு உடனடியாக ‘ரெட் அலர்ட்’ அனுப்பினேன். ‘எந்த நிமிடத்திலும் உங்கள் முகாம், புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகலாம். 24 மணி நேரமும் உஷாராக இருங்கள்’ என்ற எச்சரிக்கை கொடுத்துவிட்டே, தலைமையகத்துக்கு, காவலரண் தாக்கப்பட்டது பற்றி ரிப்போர்ட் செய்தேன்” என்றும் கூறினார் செனகா விஜேசூர்யா.

இவர் ரெட் அலர்ட் அனுப்பி சில மணி நேரத்தில், செல்வநகர் ராணுவ முகாமில் இருந்து, தோப்பூர் ராணுவ முகாம் ரேடியோ கன்ட்ரோல் ரூமுக்கு ஒரு தகவல் வந்தது.

ரெட் அலர்ட் கிடைத்ததை அடுத்து, செல்வநகர் ராணுவ முகாமில் இருந்து சிறிய யூனிட்டை சேர்ந்த சிலர், ராணுவ முகாமுக்கு வெளியே ரோந்து செல்ல அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ராணுவ முகாமில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவுவரை சென்ற நிலையில், அவர்கள்மீது விடுதலைப் புலிகள் தாக்குகின்றனர்” என்பதுதான் அந்த மெசேஜ்.

இதையடுத்து செனகா விஜேசூர்யா, “அவர்களது உதவிக்கு மேலதிக ராணுவத்தினரை அந்த இடத்துக்கு அனுப்புங்கள்” என்ற உத்தரவை பிறப்பித்தார்.

அப்போது செல்வநகர் ராணுவ முகாமில் இருந்த ராணுவத்தினரின் மொத்த எண்ணிக்கை வெறும் 60 பேர்தான். அவர்களில் சுமார் 15 பேர் ரோந்து சென்றிருந்த நிலையில் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தனர். முகாமில் மீதமாக இருந்தவர்களில், மேலும் 15 பேர், தாக்குதல் நடந்த இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலேயுள்ள தகவல்கள், ராணுவ தரப்பில் விசாரித்தபோது கிடைத்தவை. இதே நேரத்தில் புலிகள் தரப்பில் என்ன நடந்தது?

அப்போது, கிழக்கு மாகாணத்தில் இருந்த புலிகளில் ஓரிருவர், இப்போது கூறிய தகவல்களை பார்க்கலாம்.

மூதூர் ராணுவ முகாம், மூதூர் டவுன் ஆகியவற்றை புலிகள் கைப்பற்றியபோது, சுமார் 150 புலிகளே அந்த சண்டைகளில் ஈடுபட்டிருந்தனர். ராணுவ முகாமை தாக்குவதற்கு முதல், சம்பூரில் இருந்து ராணுவ முகாமை நோக்கி ஆட்டிலரி தாக்குதல்கள் நடத்தப் பட்டதால், ஒரே நாளில் ராணுவ முகாமும், டவுனும் புலிகளின் கைகளில் வீழ்ந்தன.

700 கடற்படையினரை தரையிறக்கிய பின், தொடர்ந்து நடந்த சண்டையில், புலிகளால் மூதூர் டவுனை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. இதனால், மூதூரை கைவிட்டு பின்வாங்கும் முடிவு எடுக்கப்பட்டது.

இதற்கு முக்கிய காரணம், தாக்குதல் நடந்து 2-ம் நாள், சம்பூரில் இருந்த புலிகள் ஆட்டிலரி தாக்குதல் நடத்துவதை நிறுத்தி விட்டனர். அதற்கான உத்தரவு, வன்னியில் இருந்து வரவில்லை. வன்னியில் இருந்து வந்த ஒரே உத்தரவு, “தற்போது எங்கெங்கே இருக்கிறீர்களோ, அந்தந்த இடங்களை விட்டு நகராமல், அவற்றை தக்க வைத்துக் கொள்ளுங்கள்” என்பதே.

இதனால், மூதூரில் கடற்படையினரின் எண்ணிக்கை 700க்கும் அதிகமாக உள்ள நிலையில், மேலதிக போராளிகளை சம்பூரில் இருந்து, மூதூருக்கு அனுப்பவில்லை. வெடிப்பொருள் சப்ளையும் அங்கிருந்து வராது என்று தெரியவந்தது. இதனால், மூதூரை முழுமையாக கைவிட்டு பின்வாங்கும் முடிவு எடுக்கப்பட்டது.

அப்படி பின்வாங்கியபோது, அருகில் உள்ள மினி ராணுவ முகாம்களை தாக்குவது என்ற முடிவு, ஆன்-த-ஸ்பாட்டில் எடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவு எங்கிருந்தும் வரவில்லை. இந்த 150 பேரும், தமக்கிடையே அணி அணியாக பிரித்துக்கொண்டு, சிறு ராணுவ முகாம்களை தாக்க கிளம்பினர்.

அப்படிக் கிளம்பிய அணிகளில் ஒன்றுதான், கட்டப்பறிச்சான் ராணுவ முகாமின் காவலரண் மீது தாக்குதல் நடத்தியது. மற்றொரு அணி, செல்வநகர் ராணுவ முகாமில் இருந்து ரோந்து செய்ய கிளம்பிய 15 பேர் அடங்கிய ராணுவ அணியை தாக்கியது.

கிழக்கு மாகாணத்தில் இப்படியாக சண்டை தொடங்கி நடந்து கொண்டிருக்க, கிழக்கில் உள்ள புலிகளுக்கு உத்தரவு கொடுக்க வேண்டிய வன்னியில் என்ன நடந்து கொண்டிருந்தது?

அப்போது கிழக்கு மாகாண புலிகளுடன் தொடர்பை வைத்திருந்த வன்னியில் இருந்த புலிகள், இப்போது கூறிய தகவல்களை பார்க்கலாம்.

கிழக்கு மாகாணத்தில் சண்டை நடந்த விபரங்கள் வன்னிக்கு ரேடியோ மூலம் தெரிவிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. “மூதூரை கைவிட்டு பின்வாங்குகிறோம்” என்ற தகவல் வன்னியை வந்தடைந்தபோது, புலிகளின் தளபதிகள் மட்டத்திலான ஆலோசனை கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது.

அந்தக் கூட்டம் நடந்து கொண்டிருக்கையில், “கட்டப்பறிச்சான்  ராணுவ முகாம் மீது தாக்குகிறோம்” என்று ஒரு தகவல் வந்தது.

இந்த தகவல் வன்னியில் இருந்தவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. காரணம், அப்படியொரு உத்தரவு வன்னியில் இருந்து போகவில்லை.

“தாக்குதலில் எத்தனை பேர் ஈடுபட்டுள்ளீர்கள்?” என்று வன்னியில் இருந்து கேட்கப்பட்டபோது, சுமார் 20 பேர் கட்டப்பறிச்சானில் நிற்பதாக தகவல் வந்தது.

“மூதூரில் சுமார் 150 பேர் இருந்தீர்களே.. இப்போது கட்டப்பறிச்சானில் 20 பேர் நின்றால், மீதி ஆட்கள் எங்கே?” என்று கேட்கப்பட்டபோது கிழக்கில் இருந்து வந்த பதில், “மீதி ஆட்கள் வெவ்வேறு அணிகளாக செல்வநகர், பன்சால்வத்த, 64-வது மைல் போஸ்ட் ராணுவ முகாம்களை தாக்க போயிருக்கிறார்கள்” என்ற பதில் வந்தது.

இந்த தகவலும், வன்னியில் இருந்தவர்களுக்கு புதிதாக இருந்தது! எங்கிருந்து இந்த உத்தரவுகள் போகின்றன என்ற குழப்பம், புலிகளின் தளபதிகள் சிலருக்கு ஏற்பட்டது.

வன்னியில் அப்படியொரு குழப்ப நிலை இருக்க, சண்டை நடந்த கிழக்கில் நடந்தது என்ன?

செல்வநகரில் தாக்கிய புலிகளின் அணி, வீதியோரங்களில் இருந்த பில்டிங்குகளில் (சிறிய கடைகள்) மறைந்து நின்றபடி தாக்குதல் நடத்தியபோது, வீதியில் வந்த ராணுவம் அடி வாங்கியது. இரண்டு பேர் அந்த இடத்தில் கொல்லப்பட, வேறு சிலர் காயமடைந்தனர். இதையடுத்து ராணுவத்தை சேர்ந்தவர்கள் மறைவிடங்களுக்குள் பாய்ந்து கவர் எடுத்துக் கொண்டனர்.

வீதியில் இருந்து ராணுவம் மறைந்துவிட, தமது மறைவிடங்களில் இருந்து வெளியே வந்த புலிகள் ராணுவம் பாய்ந்து மறைந்த இடங்களை நோக்கி சுட்டபடி முன்னேறினர்.

இந்த நிலையில்தான், நாம் மேலே குறிப்பிட்டது போல, செல்வநகர் முகாமில் இருந்து மேலதிகமாக 15 பேர், தாக்குதல் நடந்த இடத்துக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் தாக்குதல் நடந்த இடத்துக்கு வந்தபோது, புலிகளின் நின்றிருந்த இடத்துக்கு பின்புறமாக வந்து சேர்ந்தனர்.  துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்த புலிகளை மிக தெளிவாக பார்க்க முடிந்தது.

புதிதாக வந்த ராணுவ அணி, உடனே சுடத் தொடங்கியது. அந்த நிமிடத்தில் இருந்து அங்கு, சண்டையின் போக்கு மாறியது.

(தொடரும்)

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.