ஈழ யுத்தம் – இறுதி நாட்கள்- (பாகம் -1): புலிகளின் பின்வாங்கல் முதலில் தொடங்கிய இடம்

0
985

மாவிலாறு, இலங்கையில் வேளாண்மைக்கு நீர் வழங்கும் ஆறுகளில் ஒன்று. இதில் தண்ணீர் திறந்து விடுவதற்கான அணைக்கட்டு கதவுகள், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் இருந்தது. இந்தக் கதவுகள் திறந்து விடப்பட்டால், மாவிலாற்றின் நீர், விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் இருந்து, இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் பாயும். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மாவிலாறு அணைக்கட்டு திறக்கப்பட்டால், தண்ணீர் பாய்ந்து செல்லும் பகுதிகள்: கல்லாறு, தெஹிவத்த, தோப்பூர், செருவில, செருநுவர ஆகிய கிராமங்களில் உள்ள வேளாண்மை செய்யும் வயல்கள்.

2006-ம் ஆண்டு, ஜூலை மாதம் 21-ம் தேதி.

ஈழ யுத்தம் – இறுதி நாட்கள்- (பாகம் -1)
மாவிலாறு, இலங்கையில் வேளாண்மைக்கு நீர் வழங்கும் ஆறுகளில் ஒன்று. இதில் தண்ணீர் திறந்து விடுவதற்கான அணைக்கட்டு கதவுகள், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் இருந்தது. இந்தக் கதவுகள் திறந்து விடப்பட்டால், மாவிலாற்றின் நீர், விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் இருந்து, இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் பாயும்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மாவிலாறு அணைக்கட்டு திறக்கப்பட்டால், தண்ணீர் பாய்ந்து செல்லும் பகுதிகள்: கல்லாறு, தெஹிவத்த, தோப்பூர், செருவில, செருநுவர ஆகிய கிராமங்களில் உள்ள வேளாண்மை செய்யும் வயல்கள்.

2006-ம் ஆண்டு, ஜூலை மாதம் 21-ம் தேதி.

கிராம விவசாயிகள் பலர் மாவிலாறில் தண்ணீர் வரவு மிகவும் குறைந்து போயிருப்பதை கவனித்தார்கள். உடனே சென்று, கல்லாறு பகுதி வேளாண்மை அதிகாரியிடம் தகவல் தெரிவித்தார்கள். வேளாண்மை அதிகாரி, மாவிலாறு அணைக்கட்டு கதவுகளை பார்வையிட சென்றார்.

அவர் அணைக்கட்டு கதவுகளில் இருந்து 1 கி.மீ. தொலைவில் விடுதலைப் புலிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அணைக்கட்டு கதவுகள், விடுதலைப் புலிகளால் மூடப்பட்டு இருந்தன.

அதை திறக்க மறுத்துவிட்ட விடுதலைப் புலிகள், வேளாண்மை அதிகாரியை திருப்பி அனுப்பி விட்டார்கள். அவர் திரும்பிச் சென்று விஷயத்தை அப்பகுதி அரசாங்க ஏஜென்ட்டிடம் (கலெக்டர்) தெரிவித்தார். அப்போது இலங்கையில் இருந்த யுத்த நிறுத்த கண்காணிப்பு (வெளிநாட்டு) குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விவசாயிகளுக்கும் விஷயம் தெரியவந்தது.

இதையடுத்து அப்பகுதி விவசாயிகள் தாமே ஊர்வலமாக கிளம்பிச் சென்று அணைக்கட்டு கதவுகளை திறக்க முடிவு செய்தார்கள். சுமார் 500 பேர் ஒன்றுதிரண்டார்கள். அவர்களை அணைக்கட்டுக்கு அருகே (புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்குள்) செல்ல விடாமல் தடுத்தது ராணுவம்.

அதன்பின், அணைக்கட்டு கதவுகளை திறக்க வைக்க செய்யப்பட்ட பேச்சுவார்த்தைகள் ஏதும் பலன் தராத நிலையில், தமது பயிர்கள் தண்ணீர் இல்லாது கருகுகின்றன என விவசாயிகள் போராட்டங்களை தொடர்ந்தார்கள். அதையடுத்து, ராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து, மாவிலாறு அணைக்கட்டை விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்பது என இலங்கை அரசு முடிவு செய்தது.

ஜூலை மாதம் 26-ம் தேதி, அதிகாலை 5 மணி.

இலங்கை ராணுவத்தின் அதிரடி கமாண்டோக்கள், கல்லாறு ராணுவ முகாமில் இருந்து மாவிலாறு அணைக்கட்டு கதவுகளை நோக்கி புறப்பட்டு சென்ற அந்தக் கணத்தில்….

….தொடங்கியது, இறுதி யுத்தம்!

கல்லாறு ராணுவ முகாமில் இருந்து புறப்பட்ட இலங்கை ராணுவத்தின் அதிரடி கமாண்டோ படையினர் தெற்கு நோக்கி நகர்ந்து, மாவிலாறு அணைக்கட்டு பகுதியில் இருந்து 800 மீட்டர் தொலைவுக்கு வந்த நிலையில், அணைக்கட்டு பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளின் தாக்குதல் தொடங்கியது.

இலங்கை கமாண்டோ படையினரை நோக்கி, மோட்டார் மற்றுட் ஆட்டிலரி தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்த தொடங்கியதால், அதிரடிப் படையினரால் மேற்கொண்டு நகர முடியவில்லை. இந்த தகவல் ராணுவ தலைமையகத்துக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இவர்களுக்கு உதவுவதற்காக இரு படைப்பிரிவுகள் அனுப்பி வைக்கப்பட்டன.

இலங்கை ராணுவத்தின் 8-வது கெமுனு வாட்ச் படைப்பிரிவு, மற்றும் 5-வது பாட்டிலியன் படைப்பிரிவினர் வந்து சேர்ந்தனர்.

ஆனால், நாட்கணக்கில் யுத்தம் தொடரவே, வீடுகளில் அடைந்திருந்த மக்களின் உணவு மற்றும் இதர தேவைகளை கவனிக்க வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டது. உணவு சப்ளையை தொடங்குவதற்காக சேருவிலா கிராமத்தை சேர்ந்த பிரதேச செயலரை (சப் கலெக்டர்) தேடினால், அவர் 26-ம் தேதியே மாயமாக மறைந்து விட்டிருந்தார் என்று தெரிந்தது.

அதற்கு அருகில் இருந்த கிராமங்களில் பணிபுரிந்த அரசு நிர்வாக அதிகாரிகளையும் காணவில்லை. அரசு சுகாதார துறையைச் சேர்ந்த ஒரேயொரு அதிகாரியும், அவரது மனைவியும் மட்டுமே கிராமத்தில் இருந்தனர். மற்றைய அனைவரும் மாயமாக மறைந்து விட்டிருந்தனர்.

இதையடுத்து திரிகோணமலை அரசு செயலகத்தில் பணிபுரிந்த தொழில்துறை அதிகாரி ஒருவரை இந்த கிராமங்களுக்கு தற்காலிக சப் கலெக்டராக நியமித்த அரசு, அவர் மூலமாக கிராமவாசிகளுக்கு உணவு சப்ளையை தொடங்கியது. லாரிகளில் உணவுப் பொதிகள், மற்றும் அரிசி, பருப்பு போன்ற பொருட்களை கொண்டுவந்தார்கள்.

அப்போது, இரு தரப்பினர் இடையேயும் யுத்தம் நடந்து கொண்டிருந்தது. சில ஆட்டிலரி செல்கள் கிராமங்களுக்குள் வந்து விழுந்து கொண்டிருந்தன. இதனால் மக்கள் வெளியே வராத நிலையில், லாரிகளை வீதியில் செலுத்தியபடி, உணவுப் பொதிகளை வீடுகளுக்குள் வீசிக்கொண்டு சென்றார்கள்.

31-ம் தேதி, மாவிலாறு அணைக்கட்டு கதவுகள் இருந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் வரை நெருங்கி வந்துவிட்ட ராணுவத்தினர், தாம் இருந்த இடத்தில் இருந்து மாவிலாறு அணைக்கட்டை பார்க்க முடிந்தது. அணைக்கட்டில் விடுதலைப்புலிகள் யாரையும் காண முடியவில்லை. அங்கிருந்து வந்துகொண்டிருந்த ஆட்டிலரி தாக்குதல்களும் நின்று போயிருந்தன.

விடுதலைப் புலிகள் அணைக்கட்டை கைவிட்டு பின்வாங்கி சென்றிருந்தார்கள்.

விடுதலைப் புலிகள் மாவிலாறு அணைக்கட்டை எதற்காக மூடினார்கள் என்பதை விளக்க முயன்றால், இது அரசியல் தொடராகிவிடும். நாம், யுத்தம் எப்படி நடந்தது என்பதை மட்டுமே இந்த தொடரில் பார்க்க போகிறோம்.

“விடுதலைப் புலிகளை அசைக்க முடியாது, அவர்கள் மீது தாக்கி பின்வாங்க வைக்க முடியாது” என ராணுவத்திலேயே பலர் நினைத்திருந்தார்கள். மாவிலாறில் நடைபெற்ற யுத்தத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல், அங்கிருந்து விடுதலைப் புலிகள் பின்வாங்கியபோது, இலங்கை ராணுவத்தில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டது.

அந்த எழுச்சியே, அடுத்தடுத்து பல இடங்களில் விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்த உத்வேகத்தை கொடுத்ததில், ராணுவம் தாக்க தாக்க, விடுதலைப் புலிகள் ஒவ்வொரு பகுதியையும் கைவிட்டு பின்வாங்கினார்கள். ஒவ்வொரு இடத்தில் இருந்தும் புலிகள் பின்வாங்க, பின்வாங்க, ராணுவத்தின் உத்வேகம் அதிகரித்து சென்றது.

(சில தமிழ் மீடியாக்கள் இதை ‘தந்திரோபாய பின்வாங்கல்’ என வர்ணித்தார்கள். புலி பதுங்குவது பாய்வதற்கு என்று புலிகளை உசுப்பேற்றி கொண்டிருந்தார்கள். முள்ளிவாய்க்கால்வரை ‘தந்திரோபாய பின்வாங்கல்’ என சொல்லிய மீடியாக்களும் உண்டு. அதன்பிறகு சொல்லவில்லை… காரணம், முள்ளிவாய்க்காலில் இருந்து பின்வாங்க வேறு இடமில்லை)

மாவிலாறு அணைக்கட்டை மூடினால், அதை திறக்க ராணுவம் வரும் என்பது புலிகளுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அப்படியிருந்தும், ராணுவத்தை தாக்கி, மாவிலாறை தக்க வைத்துக்கொள்ள முடியும் என விடுதலைப்புலிகளின் தலைமைக்கு யாராவது சொன்னார்களா தெரியவில்லை. யாராவது அப்படி சொல்லியிருந்தால், அது தவறு என்று 5 நாட்களில் ஜூலை 31-ம் தேதி நிரூபணமாகியது.

மாவிலாறு கைவிட்டு போனதில் ஏற்பட்ட சரிவை சரிசெய்வதற்கு, மறுநாள் ஆகஸ்ட் 1-ம் தேதி, மிகப்பெரிய தாக்குதல் ஒன்றை திட்டமிட்டார்கள் விடுதலைப்புலிகள். இம்முறை அவர்கள் இலக்கு வைத்தது, ஜெட்லைனர் என்ற கப்பலை!

1200 ராணுவ வீரர்களுடன் திரிகோணமலையை நோக்கி வந்துகொண்டிருந்தது அந்தக் கப்பல்.

(தொடரும்)

LEAVE A REPLY

*