கணவருக்கு ஆச்சரிய பரிசு கொடுக்க ஆசைப்பட்டு அலையில் உயிரை விட்ட இளம்பெண்

0
283
பலியான ஷைலா தனது கணவர் விக்னேஷ் மற்றும் குழந்தையுடன் இருக்கும் படம்.
அலையாய் வந்து கலைந்து போனது அந்த இளம் தம்பதியின் ஆசை கனவு. அது மட்டுமல்ல வாழ்நாளெல்லாம் தீராத சோகத்தையும் ஏற்படுத்தி விட்டது.

கிழக்கு கடற்கரை சாலை என்பது இளசுகளின் கொண்டாட்டத்துக்கு பெயர் பெற்றது. விபரீதத்தை உணராமல் விளையாடுவதும் அதில் ஒரு சிலர் மகிழ்ச்சியோடு திரும்புவதும், பலர் சோகத்தை சுமப்பதும் வாடிக்கையாகி விட்டது.

விக்னேஷ் (30). ஜவுளி நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். இவரது மனைவி வேணி ஷைலா (27). வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார்.

2018 பிப்ரவரி 7-ந்தேதி மாலை சூடிய இந்த இளம் தம்பதிக்கு ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

குழந்தை பிறந்திருந்ததால் முதல் திருமண நாளை கோலாகலமாக கொண்டாட முடியவில்லை. எனவே 2-வது திருமண நாளை விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார்கள்.

அதற்காக அவர்கள் தேர்வு செய்த இடம் நீலாங்கரை கடற்கரை.

நண்பர்கள், உற்றார், உறவினர்கள் என்று சுமார் 30 பேருடன் விக்னேஷ்-வேணிஷைலா தம்பதியினர் 5 கார்களில் நேற்று முன்தினம் காலையில் வேலூரில் இருந்து சென்னை புறப்பட்டனர்.

உற்சாக மூடில் இருந்த ஷைலாவுக்கு இதுவே தனது இறுதிப் பயணம் என்பது தெரிந்திருக்க நியாயமில்லை. விதி வலியதாயிற்றே!

நீலாங்கரை வந்திறங்கியவர்கள் அங்குள்ள நண்பர் ஒருவரது வீட்டில் பகல் பொழுதை மகிழ்வோடு கழித்தார்கள்.

அழகிய பெண்ணே…. ஆபத்தை விலை கொடுத்து வாங்கப் போகிறாய்! உன் பரிதாப முடிவை பார்க்க என் மனம் விரும்பவில்லை என்று நினைத்து கதிரவனும் கண்மூடி மறைந்து கொண்டான்.

சூழ்ந்தது இருள். இரவு உணவை முடித்துக் கொண்டு நள்ளிரவு 11.30 மணிக்கு கார்களில் அனைவரும் பாலவாக்கம் பல்கலைக்கழக நகர் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர்.

நில வொளியில் வெண்மணற் பரப்பில் சரியாக 12 மணிக்கு கேக் வெட்டி திருமண நாளை கொண்டாட வேண்டும் என்பது அவர்களது திட்டம்.

நள்ளிரவில் கடல் மணலில் ஒரு கும்பல் அமர்ந்து இருப்பதையும், 5 கார்கள் நின்று கொண்டிருப்பதையும் கவனித்த ரோந்து காவலர்கள் இருவர் அவர்கள் அருகில் சென்றனர்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று குதூகலமாக இருந்த அவர்களை பார்த்ததும் பிரச்சனைக்கு உரியவர்கள் அல்ல என்பதை யூகித்துக் கொண்ட போலீசார், ‘இன்னும் ஏன் இங்கு அமர்ந்து இருக்கிறீர்கள்? கிளம்ப வேண்டியது தானே’ என்றனர்.

சார், இனிதான் எங்கள் கொண்டாட்டமே ஆரம்பிக்க போகுது. இன்னும் சிறிது நேரத்தில் திருமண நாள் கேக் வெட்ட போகிறோம். அதை முடித்துக் கொண்டு கிளம்பி விடுவோம் என்றனர்.

அதை கேட்ட போலீசார், சரி பரவாயில்லை. ரொம்ப நேரம் இருக்காதீங்க என்று சொல்லிக் கொண்டே அவர்களும் பாதுகாப்புக்காக அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள்.

கடற்கரை மணலில் ஒரு ஸ்டூலை போட்டு அதில் கொண்டு வந்திருந்த கேக்கை வைத்தார்கள். நண்பர்களும், உறவினர்களும் கைதட்டி ஆரவாரம் செய்ய தம்பதிகள் இருவரும் கேக்கை வெட்டினார்கள்.

கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி தங்கள் அன்பை பரிமாறி கொண்டார்கள். பின்னர் உறவினர்களுக்கும் கொடுத்தார்கள்.

அடுத்து கொண்டாட போவதுதான் நிறைவு காட்சி!

கடலுக்கடியில் திருமணம்- வான்வெளியில் திருமணம் என்று பல கோடீசுவரர்கள் நடத்திய வித்தியாசமான திருமணங்களை கேள்விப்பட்ட வேணி ஷைலாவுக்கு தனது திருமண நாளை வித்தியாசமாக கொண்டாட ஆசை.

அதாவது கடல் அலையில் இறங்கி அலை நடுவில் நின்று தன் அன்பு கணவருக்கு மோதிரம் அணிவிக்க வேண்டும் என்பதுதான் அந்த பாசக்கார பெண்ணின் ஆசை.

ஆனால் அதை தனது கணவரிடம் கூட சொல்லாமல் மோதிரத்தையும் வாங்கி ரகசியமாக வைத்துக் கொண்டார்.

கேக், வெட்டி முடிந்ததும் கணவர் விக்னேசிடம், ‘வாங்க, கடல் அலையில் இறங்கி நம் காதலும் காலமெல்லாம் உற்சாகமாக இருக்க நான் உங்களுக்கு ஒரு பரிசு தரப்போகிறேன்’ என்றார்.

ஆச்சரியப்பட்ட விக்னேஷ் ‘அப்படி என்ன பரிசு தரப்போகிறாய்? என்றதும் ரகசியத்தை உடைத்தார். அலையின் நடுவில் நின்று உங்களுக்கு மோதிரம் அணிவிக்கப் போகிறேன் என்றதும் விக்னேஷ் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!
202002081354411811_1_beach0._L_styvpf

இருவரும் கைகளை பற்றிக் கொண்டு கடலை நோக்கி மெல்ல நடந்தார்கள்! அவர்கள் கடலுக்குள் இறங்கப் போவதை பார்த்ததும் உஷார் அடைந்த போலீசார் ‘இது ஆபத்தாயிற்றே’ என்று ஓடிசென்று அவர்களை தடுத்தனர்.

இது அலை அதிகம்-ஆழம் அதிகம் உள்ள பகுதி. மிகவும் ஆபத்தானது. கடலுக்குள் இறங்காதீர்கள் என்று எச்சரித்தனர். கேடு வரும்போது புத்தி கேட்காதே!

ஆழமான பகுதிக்கு செல்ல மாட்டோம். அலையில்தான் கால் நனைப்போம் என்று போலீசாரை சமாளித்து அலையில் இறங்கினார்கள்.

அலை வடிவாய் உக்கிரமாக தாண்டவம் ஆடிக் கொண்டிருந்த கடல் மங்கை ‘பெண்ணே, என்னோடு விளையாட வராதே. வேகமாக ஆடிக்கொண்டிருக்கும் என்னுள் சிக்கினால்…. என்று எச்சரிப்பது போல் அலைக்கரங்கள் அவர்களை எச்சரித்தது.

ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் கடலுக்குள் இறங்கினார்கள். இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டு எழுந்து வரும் அலையில் மூழ்கி அப்போது விக்னேசின் விரல்களில் மோதிரம் அணிவிப்பதுதான் ஷைலாவின் ஏற்பாடு.

மகிழ்ச்சி பொங்க கடலில் நின்ற அவர்களை கரையில் நின்றவர்கள் வீடியோவில் படமாக்கி கொண்டிருந்தார்கள்.

ஷைலா எதிர்பார்த்தபடி ஆரவாரத்தோடு பெரிய அலை ஒன்று வந்து கொண்டிருந்தது. ஆனால் அது வாரி சுருட்டிவிடும் என்பது அவர் எதிர்பாராதது.

வேகமாக வந்த அலை இருவரையும் தண்ணீருக்குள் புரட்டி போட்டது. தண்ணீருக்குள் விழுந்த அவர்களை பார்த்ததும் கரையில் நின்றவர்கள் தவித்தனர். ஆனால் சில வினாடிகளில் விக்னேஷ் சுதாரித்து கரை திரும்பினார்.

அவரைப் போலவே ஷைலாவும் வந்து விடுவார் என்று எதிர் பார்த்தார்கள். ஆனால் காணவில்லை. இதனால் பதட்டம் அடைந்த உறவினர்கள் அலறினார்கள். உடனே அங்கு போலீசார் விரைந்து வந்து நிலைமையை உணர்ந்து அருகில் உள்ள மீனவர் குப்பத்துக்கு ஓடினார்கள்.

விபரத்தை சொல்லி உதவிக்கு அழைத்தார்கள். ஆனால் இருள் சூழ்ந்த இந்த நேரத்தில் தேட முடியாது. தண்ணீரில் எதுவும் கண்ணுக்கு தெரியாது என்றனர். உடனே நீலாங்கரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் சில போலீசார் கடற்கரைக்கு விரைந்தனர்.

இந்த நிலையில் அதிகாலை 2 மணியளவில் ஷைலாவின் உடல் கொட்டிவாக்கம் கடற்கரையில் ஒதுங்கி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மணநாளை கொண்டாட வந்து பிணமாகி கிடந்த மனைவியின் உடலை பார்த்து தனது குழந்தையுடன் விக்னேசும், உறவினர்களும் கதறி துடித்தது மிகவும் பரிதாபமாக இருந்தது.

எதிர்பாராத ஆபத்தை தவிர்க்க முடியாது. இந்த மாதிரி விபரீத விளையாட்டுக்களை தவிர்ப்பது நல்லது.

LEAVE A REPLY

*