சஜித்துக்கு வழங்கப்படும் எதிர்கட்சித் தலைவர் பதவியால் எந்த பலனும் இல்லை’ – மனோ கணேசன்

0
46

இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவருமான சஜித் பிரேமதாஸவை நியமிக்குமாறு, சபாநாயகர் கரு ஜசூரியவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

இதனால் நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவரைத் தீர்மானிப்பதில் இருந்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தமையை அடுத்து, அவரை எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு நியமிக்குமாறு அவருக்கு சார்பான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், எதிர்கட்சித் தலைவராக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்குமாறு கோரி, சபாநாயகருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் சில வாரங்களுக்கு முன்னர் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.

ஆனால் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள், சஜித் பிரேமதாஸவை எதிர்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கடிதமொன்றின் மூலம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளிக் கட்சிகளான தமிழ் – முஸ்லிம் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய கட்சிகளும், இந்த விவகாரத்தில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கின.

இந்த நிலவரம் காரணமாக எதிர்கட்சித் தலைவராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் பெரும் இழுபறி நிலவி வந்தது.

இந்த நிலையிலேயே, நேற்று வியாழக்கிழமை ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சஜித் பிரேமதாஸவை எதிர்கட்சித் தலைவராக நியமிப்பதென ஏகமனதாகத் தீர்மானித்தனர்.

இதனையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தமது கட்சியின் தீர்மானம் குறித்து சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தியுள்ளதோடு, சஜித் பிரேமதாஸவை நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவராக நியமிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதுவும் ஆகப்போவதில்லை – மனோ கணேசன் கருத்து

எவ்வாறேனும், சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் எதிர்கட்சித் தலைவர் பதவியால் பெரிதாக எதுவும் ஆகப்போவதில்லை என்று, சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் பேஸ்புக் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தை எதிர்வரும் ஜனவரி 03ஆம் தேதி வரை, ஜனாதிபதி ஒத்தி வைத்துள்ள நிலையில்; அன்றைய தினம் கூடும் நாடாளுமன்ற அமர்வில் ஜனாதிபதி உரையாற்றுவார் என்றும், அதனையடுத்து, மீண்டும் மார்ச் 03ம் தேதி வரை நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்படும் எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

_110027282_058147ba-ae5a-4ad4-8449-7cf8dc59eb68‘இதற்கிடையில் பிப்ரவரி 25ம் தேதியை அடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ஏப்ரல் 27ம் தேதி அளவில் பொதுத் தேர்தல் நடத்தப்படும்.

இடைப்பட்ட காலத்தில் நாடாளுமன்றம் கூட்டப்படாது. ஆகவே சஜித் பிரேமதாஸவுக்கு தரப்பட்டதாக சொல்லப்படும், எதிர்க்கட்சி தலைவர் பதவியால் பெரிதாக எதுவும் ஆக போவதில்லை.

ஏப்ரல் நடைபெறவுள்ள தேர்தலில் மிக குறைந்த ஆசனங்களை பெறும்வகையில், ஐக்கிய தேசிய முன்னணியை பலவீனப்படுத்தி, மறுபுறம் பொதுஜன பெரமுன 2/3 பெரும்பான்மை பெறுவதற்குத் திட்டமிடப்பட்டு காய் நடத்தப்படுகிறது.

இந்த சவால்களை வென்று மீள்வது தொடர்பில் பல காய் நகர்த்தல்களை நாமும் திட்டமிட்டுள்ளோம். விரைவில் அவை தெரிய வரும்’ என்றும், தனது பேஸ்புக் பதிவில் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.