மாநகராட்சி துப்புரவு பணிக்கு போட்டியிடும் பட்டதாரிகள்

0
25

துப்புரவு பணிக்காக நடைபெற்ற நேர்காணலில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்களும், பொறியியல் பட்டதாரிகளும் பங்கேற்ற நிகழ்வு கோவையில் நடந்துள்ளது.

கோவை மாநகராட்சியில் பணிபுரிய நிரந்தர துப்புரவு பணிக்கான 549 பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல், கடந்த மூன்று நாட்களாக மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது.

சுமார் 7000க்கும் மேற்பட்டவர்கள் நேர்காணலுக்கு விண்ணப்பித்திருந்தனர். இதில் 5200 விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு வந்திருந்தனர். அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படித்த பட்டதாரிகள்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் குப்பைகளை சேகரிப்பது, அதனை தரம் பிரித்து, குப்பைக்கிடங்கு அலுவலகர்களிடம் ஒப்படைப்பது ஆகிய பணிகளை துப்புரவு பணியாளர்கள் மேற்கொள்கின்றனர். நிரந்தரம் மற்றும் ஒப்பந்த அடிப்படை என 2000க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் தற்போது கோவை மாநகராட்சியில் பணிபுரிந்து வருகின்றனர்

இந்நிலையில், காலியாக உள்ள நிரந்த துப்புரவு பணியாளர் வேலைக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் வழங்கப்பட்டது. இதற்கான அடிப்படை கல்வி தகுதி தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

_109952055_img_20191129_160613ஆனால், பட்டதாரிகளும் இந்த வேலைக்கு போட்டிபோடுவதால் படிக்காதவர்களின் வாய்ப்புகள் பறிபோகும் என கூறுகிறார் ஒப்பந்த அடிப்படை துப்புரவு பணியாளராக இருக்கும் சத்யமூர்த்தி.

”பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு எப்படியும் ஒரு வேலை கிடைத்துவிடும். ஆனால், எங்களை போன்ற படிப்பறிவு இல்லாதவர்களுக்கு இந்த துப்புரவு பணி மட்டும்தான் வாழ்வாதாரமாக இருக்கிறது. படிப்பறிவில்லாத பல குடும்பங்கள் இந்த வேலையை நம்பித்தான் இருக்கின்றன. தற்போது, கோவை மாநகராட்சியில் நடைபெற்ற நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கான நேர்காணலில், தமிழ் மொழி எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும் என்பதே அடிப்படை கல்வித் தகுதியாக கூறப்பட்டுள்ளது.”

”ஆனால், டிப்ளமோ, இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்ற ஏராளமானோர் நேர்காணலில் பங்கேற்று, எங்களோடு போட்டி போடுகின்றனர். இது எங்களுக்கான வாய்ப்புகளை தட்டிப்பறிக்கும் செயல். மாநகராட்சியின் ஒப்பந்த துப்புரவு பணியாளராக பல ஆண்டுகள் வேலைசெய்யும் எங்களுக்கு தான் நேர்காணலில் முன்னுரிமை வழங்கி நிரந்தர தொழிலார்களாக பணியமர்த்தி இருக்கவேண்டும்,” என்கிறார் சத்யமூர்த்தி.

மூன்று நாட்கள் நடைபெற்ற நேர்காணலில், இரண்டாவது நாளான வியாழக்கிழமை அன்று மட்டுமே 500க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வந்திருந்தனர்.

”பொறியியல் படித்துமுடித்து தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். இருந்தும், அரசு வேலைக்கு தொடர்ந்து முயற்சித்து வருகிறேன். துப்புரவு பணியாக இருந்தாலும் அரசு பணி என்பதால் நேர்காணலில் பங்கேற்றேன்,” என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத ஐ.டி பணியாளர் ஒருவர்.

_109952057_img_20191129_160650”படித்தவர்களுக்கும், தகுதியான இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழிற்சாலைகளை நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல், அனைத்து மாவட்டங்களிலும் நிறுவ வேண்டும். மேலும், அரசுப்பணிகளின் மீது இருக்கும் நம்பகத்தன்மையை தனியார் நிறுவனங்களும் உருவாக்கிகொள்ளவேண்டும்,” என்கிறார் மூத்த கல்வியாளர் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் பிச்சாண்டி.

மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இதனால், குறைந்த ஊதியத்தில் ஒப்பந்த பணியாளராக ஏராளமான துப்புரவு ஊழியர்கள் இந்த நேர்காணலில் பங்கேற்றனர்.

நேர்காணலின் இறுதிநாளன்று பங்கேற்ற ரா.முருகவேள் பேசுகையில், ”நான் ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். துப்புரவு வேலை மட்டும்தான் பல தலைமுறையாக பார்த்து வருகிறோம். ஆனால், எனது குழந்தைகள் இந்த வேலைக்கு வந்துவிடக் கூடாது என ஆசைப்படுகிறேன். நானும், எனது மனைவியும் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறோம். இருவரில் ஒருவருக்கு நிரந்தர பணியாளராக வாய்ப்பு கிடைத்தாலும், என் குடும்பம் முன்னேறிவிடும்,” என்கிறார்.
Image caption ரா.முருகவேள்

_109952609_img_20191129_160446பட்டப்படிப்பு முடித்தவர்களும் இந்த வேலைக்கு போட்டிபோடுவது குறித்த கேள்விக்கு, ”படித்தவர்களுக்கு எங்களைப் போல் சுத்தம் செய்யத் தெரியாது. அவர்களுக்கு கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்ய மட்டும்தான் தெரியும்,” என்று கோபத்தோடு பதிலளித்துவிட்டு நகர்ந்துவிட்டார்.

இதேபோல், 2018 ஆம் ஆண்டு மாவட்ட நீதிமன்ற அலுவலக உதவியாளர் பணிக்கு எம்.பில் பட்டம் பெற்றவர்கள் உட்பட பல பட்டதாரிகள் பங்கேற்றது விமர்சனத்துக்குள்ளானது. இந்த பணிக்கான கல்வி தகுதி ஐந்தாம் வகுப்பு என்பது குறிப்படத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.