யாழில் பாரிய ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது: சம்பவம் தொடர்பில் விசாரணை!

0
67

யாழ். மல்லாகத்தில் குடிமனை உள்ள பகுதி ஊடாகச் செல்லும் ரயில் பாதை ஒன்றில் வைத்து ரயில் ஒன்றை தடம்புரளச் செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதா என்ற கோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மல்லாகத்துக்கும் கட்டுவானுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள ரயில் பாதையில் உள்ள வளைவு ஒன்றில் தண்டவாளத்தையும் சிலிப்பர் கட்டைகளையும் இணைத்து பொருத்தப்பட்டிருக்கும் இரும்பு கிளிப்புகளை இனந்தெரியாத நபர்கள் நேற்று (29) வெள்ளிக்கிழமை அகற்றியுள்ளனர். சுமார் 20க்கும் மேற்பட்ட சிலிப்பர் கட்டைகளின் கிளிப்புகளே இதன்போது அகற்றப்பட்டிருந்தன.

குறித்த சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல்களையடுத்து அங்கு சென்ற பொலிஸார் இது தொடர்பில் ரயில்வே திணைக்களத்துக்கு தெரியப்படுத்தினர்.

அதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே திணைக்கள அதிகாரிகள் , கிளிப்புகள் அகற்றப்பட்ட இடத்தில் வேறு கிளிப்புகளைப் பொருத்தி  ரயில் பாதை சீர் செய்யப்பட்டது. இதன் காரணமாக பாரிய விபத்து தடுக்கப்பட்டதாக ரணில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கல்கமுவ பகுதியில் யாழ்.தேவி ரயில் தடம் புரண்டது. அதனால்  இரண்டு நாட்கள் வடக்குக்கான ரயில் சேவைகள் தடைப்பட்டிருந்தன.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.