திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு, மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொல்ல முயற்சி – பரோட்டா மாஸ்டர் கைது

0
32
திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் நின்ற மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொல்ல முயன்ற பரோட்டா மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.

 

திருக்கோவிலூர் அருகே உள்ள பல்லரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 34). இவரும் அதேபகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வி(28) என்பவரும் காதலித்து, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தையும், 6 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். சிவக்குமார் திருக்கோவிலூரில் உள்ள ஒரு ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். தமிழ்ச்செல்வி திருக்கோவிலூரில் உள்ள ஒரு ஜவுளி கடையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் தமிழ்ச்செல்விக்கும், அவரது உறவினர் ஒருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த சிவக்குமார் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதையடுத்து தமிழ்ச்செல்வி, அவரது கணவரிடம் பேசுவதை தவிர்த்துள்ளதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சிவக்குமார் தனது மனைவியை கொல்ல திட்டமிட்டார். அதன்படி நேற்று முன்தினம் மாலை தமிழ்ச்செல்வி வேலை முடிந்ததும் சொந்த ஊருக்கு செல்வதற்காக திருக்கோவிலூர் பஸ் நிலையத்துக்கு வந்து, பஸ்சுக்காக காத்திருந்தார்.
இதைநோட்டமிட்டு அங்கு வந்த சிவக்குமார் தான் வைத்திருந்த கத்தியால் தனது மனைவியின் கழுத்தை அறுத்தார். இதைபார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து, சிவக்குமாரை மடக்கி பிடித்து திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனிடையே கழுத்து அறுக்கப்பட்டத்தில் காயமடைந்த தமிழ்ச்செல்வி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பின்னர் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, சிவக்குமாரை கைது செய்தனர்.
திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் மனைவியின் கழுத்தை அறுத்து கணவனே கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.