ஆண் குழந்தை ரூ.1.15 லட்சம்… தரகருக்கு ரூ.20,000! – திருச்சியை அதிரவைத்த குழந்தை விற்பனை

0
19

ராசிபுரம் குழந்தை விற்பனை சம்பவத்தின் பரபரப்பே இன்னும் ஓயவில்லை. அதற்குள் திருச்சியில் பச்சிளம் குழந்தை லட்ச ரூபாய்க்கு பேரம் பேசி விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`குழந்தையில்லை எனக் கேட்டாங்க. கொடுத்துவிட்டோம்’ என விஜயா சொன்ன வார்த்தைகளால் திருச்சி அரசு மருத்துவர்கள் அதிர்ந்து கிடக்கிறார்கள். பிறந்து 7 நாள்களே ஆன ஆண் குழந்தை 1.15 லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவம் இது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகில் உள்ள முருக்கன்குடி கிராமத்தைச் சேர்ந்த பூ வியாபாரி முருகேசன், பிறந்து சில நாள்களே ஆன ஆண் குழந்தையுடன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்தார். அந்தக் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

குழந்தையை 50 வயதைக் கடந்த அவர் மட்டுமே பார்த்துக்கொண்டார். அவரின் மனைவி உடனிருந்தாலும் பாலுக்காக கதறிய குழந்தைக்கு பால் கொடுக்க வழியில்லை. இதில், சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள், அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் சந்தேகமடைந்த ஊழியர்கள், திருச்சி `சைல்ட் லைன் எண் 1098′ எண்ணுக்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து, குழந்தைகள் நல அலுவலர்கள் நடத்திய விசாரணையில் அடுத்தடுத்த அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாயின.

திருச்சி மணப்பாறை பாரதியார் நகரைச் சேர்ந்தவர் செல்வம், இவர் தீராத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதன் காரணமாகவே, இவரின் முதல் மனைவி மற்றும் பிள்ளைகள் இவரை விட்டுச் சென்றனர். அடுத்து இவருக்கும் திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த விஜயா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 13 வருடங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அதில் இவர்களுக்கு ஐந்து வயது மகளும், மூன்று வயது மகனும் உள்ளனர். இந்த நிலையில், விஜயா மூன்றாவதாக கருவுற்றார்.

vikatan_2019-11_b3f7fe39-4234-4821-9fc5-f1e5dadc86d9_WhatsApp_Image_2019_11_07_at_6_34_57_PMதிருச்சி மணப்பாறை அரசு மருத்துவமனை பகுதியில் செல்வம் டீக்கடை நடத்திவருவதால், அவரின் மனைவி விஜயா, அவ்வப்போது சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துவந்தார். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு, வையம்பட்டியை அடுத்த அனுக்கானத்தம் பகுதியில் உள்ள அவரின் சகோதரி வீட்டுக்குச் சென்றிருந்த விஜயாவுக்குப் பிரசவ வலி ஏற்பட்டது.

ஆம்புலன்ஸ் வருவதற்குக் காலதாமதமானதால், விஜயாவுக்கு வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைப் பிறந்த தகவலை தெரிந்துகொண்ட செவிலியர் ஒருவர் மற்றும் மணப்பாறை அடுத்துள்ள முத்தப்புடையான்பட்டியைச் சேர்ந்த அந்தோணியம்மாள் என்கிற மேரி ஆகியோர் செல்வம் மற்றும் விஜயாவைச் சந்தித்தனர். அப்போதுதான், குழந்தையை விற்பதற்குப் பேரம் பேசப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஆண்குழந்தைக்கு 1.15 லட்ச ரூபாய் விலை பேசப்பட்டு வெற்றுப் பத்திரங்களில் அந்தோணியம்மாள் முன்னிலையில் கையொப்பம் வாங்கியிருக்கிறார்கள். பின்னர், மணப்பாறை பேருந்து நிலையம் அருகே உள்ள முனியப்பன் கோயில் முன்பு குழந்தையை விஜயாவின் கணவர் செல்வம், முருகேசனிடம் ஒப்படைத்தாராம்.

இந்த நிலையில், திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால், குழந்தையைத் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அப்போது முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளிக்கவே சிக்கிக்கொண்டாராம் முருகேசன். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் விசாரணை நடத்திய குழந்தைகள் நல அதிகாரிகள் மற்றும் போலீஸார் குழந்தை விற்பதற்குத் தரகராக செயல்பட்ட அந்தோணியம்மாள் என்கிற மேரி, செல்வம், விஜயா, முருகேசன் ஆகியோரைக் கைது செய்து மணப்பாறை காவல்நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

போலீஸாரின் விசாரணையில், “முருகேசனின் மகன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விபத்தில் இறந்து போனாராம். அவரின் மகளை ஆசையோடு முருகேசன் வளர்த்து வந்த நிலையில், விபத்துக்கான இழப்பீடு கிடைத்ததும், மருமகள் பேத்தியை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டாராம். குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த முருகேசனும் அவரின் மனைவியும், அந்தோணியம்மாளிடம் தகவலைச் சொல்லி வைத்திருந்தனராம்.

vikatan_2019-11_a51f522a-2880-48b2-b2cd-d608126d2121_WhatsApp_Image_2019_11_07_at_6_33_29_PMஏற்கெனவே, வறுமையில் உள்ளவர்களைக் குறிவைத்து குழந்தை பேரம் பேசிக் கைமாற்றிவிடும் வேலையைச் செய்துவந்த அந்தோணியம்மாள், விஜயா மற்றும் செல்வத்தை சந்தித்துக் கேட்கவே, குழந்தை கைமாற்றிவிடப்பட்டதாம். குழந்தையை விற்ற அந்தோணியம்மாள், கமிஷன் தொகையாக ரூ. 20,000 எடுத்துக்கொண்டாராம்.

பிறந்து 27 நாள்களான அந்த ஆண் குழந்தையின் எடை ஒரு கிலோ 100 கிராம்தான் உள்ளது. மேலும், செல்வத்துக்கும், விஜயாவுக்கும் ஏற்கெனவே நோய்த் தொற்று இருப்பதால் குழந்தைக்கும் நோய் இருப்பது தெரியவந்துள்ளது. குழந்தைக்குத் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை பிறந்து 7 நாள்கள் மட்டுமே ஆன நிலையில் குழந்தை விலைபேசி விற்கப் பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.