சீனாவில் தேர்தல்களே இல்லை… ஆனால், அது ஜனநாயக நாடு- எப்படித் தெரியுமா?

0
29

‘உலகில், மாபெரும் ஜனநாயகத் திருவிழா’ – இது, இந்தியத் தேர்தலைக் குறித்து சொல்லப்படும் வாக்கியம். மக்கள் தொகையில் உலக அளவில் இரண்டாமிடத்தில் இருக்கும் இந்தியாவில், வாக்களிக்கச் செல்லும் மக்களின் எண்ணிக்கை உலகின் எந்த நாட்டைவிடவும் அதிகம்.

ஆனால், இந்தியாவைவிட அதிகமான மக்கள்தொகை உள்ள நாடான சீனாவைப் பற்றி ஏன் அப்படிச் சொல்வதில்லை? ஏனெனில், சீனாவில் தேர்தலும் இல்லை, ஜனநாயகமும் இல்லை.

ஆனால், 70 ஆண்டுகளாக ஒரே கட்சி ஆட்சியில் இருக்கும் சீனாவில், சோஷியலிச ஜனநாயகம் நிலவுவதாக சீனா சொல்லிக்கொள்கிறது.

1949-ம் ஆண்டு, சீனாவில் மாவோ தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் அமர்ந்தது. அன்றிலிருந்து இன்று வரை, ‘ஒரே நாடு ஒரே கட்சி’ எனப் பயணித்துக்கொண்டிருக்கிறது சீனா.

சீனாவின் கம்யூனிச அரசியலை மாவோவிற்கு முன், மாவோவிற்குப் பின் என இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். 1976-ம் ஆண்டு மாவோ இறந்த பிறகுதான், 1982 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 -ம் தேதி, சீனா அதன் தற்போதைய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது.

தன்னுடைய பொருளாதார கொள்கைகளைத் தளர்த்திக்கொண்ட சீனா, அதன்பிறகு ‘Open Market System’ என்ற கொள்கையோடு, தன்னுடைய வர்த்தகச் சந்தையைச் சர்வதேச அளவில் விரிவுபடுத்தியது.

அரசியல் ரீதியாக, சீன கம்யூனிஸ்ட் கட்சி மொத்த அரசியல் அதிகாரத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது. ஒரே கட்சி ஆட்சி என்பதால், சீனாவில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் இல்லை, சீன அரசால் அங்கீகரிக்கப்பட்ட எட்டு கட்சிகள் அங்கு எதிர்க்கட்சிகளாகப் பதியப்பட்டிருக்கின்றன. அந்தக் கட்சிகளுக்கு, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சனம் செய்யவோ கேள்வி கேட்கவோ, எதிர்க்கவோ அதிகாரம் இல்லை. எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க மட்டுமே தவிர, போட்டிபோட அனுமதி இல்லை என்பதே சீன அரசின் கட்டளை.

சீனாவின் வரலாறு என்பது, பல லட்சம் வருடங்கள் முந்தையது. ஒரு லட்சத்து இருபது ஐந்தாண்டுகள் முன்னிருந்தே சீனாவில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான படிம ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. சீயா வம்சத்தினர், சீனாவை கி.மு 2100-ம் ஆண்டு முதல் ஆண்டதாக நம்பப்படுகிறது. கி.மு 17-வது நூற்றாண்டு முதல் 11-வது நூற்றாண்டு வரை சீனாவில் ஷாங் வம்சத்தினர் ஆண்டதற்கான வரலாறு இருக்கிறது. இவர்களைத் தொடர்ந்து ஜூ, பின், ஹான், வெய், ஜின், சோங், மங்கோலியர்கள் என்று பல்வேறு வம்சத்தினர் பல நூற்றாண்டுகளுக்கு சீனாவை ஆண்டிருக்கின்றனர். இறுதியாக, கி.பி 1644-ம் ஆண்டு முதல் 1912 வரை சீனாவை ஆண்டது குயிங் வம்சத்தினர்.

vikatan_2019-05_e2a56f6b-6160-4d21-9c03-3bca45141fa5_75962_thumbஅவர்களிடமிருந்து ஜின்ஹை (Xinhai) புரட்சியின் மூலம் சீனாவைக் கைப்பற்றியது, க்யோமிண்டாங் எனப்படும் சீனாவின் தேசியக் கட்சி, அதன்பிறகு Republic of China எனப்படும் சோஷியலிச ஆட்சி சீனாவில் அமைந்தது. 1912 முதல் 1915 வரை நீடித்த இந்த ஆட்சி வலுவிழந்து, சீனா சிதறியது. பின்னர், 1949-ம் ஆண்டு, மாவோ தலைமையிலிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் வசம் வந்த சீனா, People’s Republic of China என்ற தற்போதைய அடையாளத்தைப் பெற்றது.

ஒற்றைக் கட்சி ஆட்சியின் கீழ் இருக்கும் சீனாவின் அதிபராக, பத்தாண்டுகளுக்கு ஒருமுறை சீனா கம்யூனிஸ்ட் கட்சி ஒருவரைத் தேர்ந்தெடுக்கும். அவர், சீனாவைத் தலைமைப் பொறுப்பிலிருந்து வழிநடத்துவார். இது, முழுக்க முழுக்க சீனா கம்யூனிஸ்ட் கட்சி எடுக்கும் முடிவே தவிர, இதில் மக்கள்

சரி, அப்படியானால் சீனா எப்படி சோஷியலிச ஜனநாயக நாடு ஆகும் என்ற கேள்வி எழுவது இயல்பே. அதற்குத்தான் இப்படியொரு விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சீன அரசு, தன்னை ஒரு மக்கள் பிரதிநிதியாகவே கருதுவதால், அரசு எடுக்கும் எந்த முடிவும் மக்கள் எடுக்கும் முடிவைப் போலத்தான் எடுத்துக்கொள்ளப்படும். ஆகவே, சீனா ஜனநாயகத்தைப் பின்பற்றுகிறது என்பதில் சந்தேகமில்லை என்பதே அது.

சீனா, தம் மக்களுக்கு ஜனநாயக உரிமைகள் எனச் சொல்லப்படும் எந்தவிதமான உரிமைகளையும் தருவதில்லை. சீன மக்களுக்குத் தங்களுடைய தலைவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமையில்லை; பேச்சுரிமை, கருத்துரிமை என்பதெல்லாம் இல்லை; குழந்தை பெற்றுக்கொள்வதில் தொடங்கி அனைத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. ஊடகங்கள் சுதந்திரமாகச் செயல்பட உரிமையில்லை. சீனாவில் எல்லாமே அரசு ஊடகங்கள்தான். அவர்கள் எந்தச் செய்தியை எப்படி ஒளிபரப்ப வேண்டும் என்பதையும் அரசுதான் தீர்மானிக்கிறது.

vikatan_2019-05_3cf762af-0366-418a-bc97-a6b04a3b9c6c_94534_thumbசீனாவில், இணையப் பயன்பாட்டிற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. Facebook, Whats App போன்ற சமூக வலைதளங்களுக்கு அங்கு அனுமதி இல்லை. குறிப்பிட்ட அளவில் மட்டுமே அங்கு வெளிநாட்டுத் திரைப்படங்கள் வெளியிடப்படும். குழந்தை இலக்கியப் புத்தகங்களைக்கூட வெளிநாட்டு எழுத்தாளர்கள் எழுதினால், சீனாவில் அதை வெளியிடத் தடை இருக்கிறது. இப்படி நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் பல்வேறு விஷயங்களை சீனர்கள் நினைத்துப்பார்க்கக்கூட முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

“சீனாவில் ஜனநாயகம் மலர்வதற்கு 90 சதவிகிதம் மக்கள் ஆதரவு தருகிறார்கள். ஆனால், அவர்கள் யாரும் அதற்காக ஒரு சிறு முயற்சியைக்கூட மேற்கொள்வதற்குத் தயாராக இல்லை. ஏனெனில், அவர்களுக்குத் தங்கள் ஜனநாயக உரிமைகளைவிட, சீனாவின் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியும், நிலையான வாழ்நிலையும் முக்கியமாக இருக்கிறது!”

வாங், சீன ஆராய்ச்சியாளர்

இப்படி சீனாவின் மக்கள், அவர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியடைந்து, ஒரு பாதுகாப்பான சூழல் அவர்களுக்கு இருப்பதால், இந்த ஒற்றைக் கட்சி ஆட்சியை எதிர்க்க தற்போதைக்குத் தயாராக இல்லை. அதே சமயம், சீனாவில் வாழும் அனைவரும் இப்படியான மனநிலையில் இருப்பதாகவும் தெரியவில்லை. சீனாவில் வாழும் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர், தங்கள் மதமும் கலாசாரமும், நம்பிக்கையும், மொழியும் சீன அரசால் அச்சுறுத்தப்படுவதை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு நாட்டின் ஜனநாயகத் தன்மையை அளவிடும் பிரிட்டனின் ஒரு நிறுவனம், தன்னுடைய Democracy Index-ல், சீனா பத்திற்கு 3.1 புள்ளிகள் பெற்றிருப்பதாக அறிவித்திருக்கிறது. அதாவது, சீனா ஒரு சர்வாதிகார ஆட்சியைச் செலுத்துவதாகவே இந்த அளவீடு சொல்கிறது. பல உலக நாடுகளும், அரசியல் அறிஞர்களும் சீனாவைப் பற்றி கொண்டிருக்கும் அபிப்பிராயமும் அதுவே.

அன்று இந்தியாவுக்கு நிகரான வளர்ச்சி… இன்று எங்கோ போய்விட்ட சீனா… எப்படி?

எப்படியாயினும், சீனாவின் ஒற்றைக் கட்சி கம்யூனிச ஆட்சிக்கு வயது எழுபது மட்டுமே, பல நூற்றாண்டுகள் கடந்த ஆட்சியெல்லாம் மாறிப் போன வரலாறு சீனாவினுடையது என்பதே நினைவில்கொள்ளவேண்டியது. மாற்றம் ஒன்றுதானே மாறாதது!

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.