சிவாஜிலிங்கம் வேட்பு மனுவை தாக்கல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் ; செல்வம் எம்.பி அதிரடி

0
87

எமது கட்சியை சேர்ந்த  சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலுக்கான  வேட்பு மனுவை தாக்கல் செய்தால் அவரை கட்சியிலிருந்து நீக்குவதா இல்லையா என்று தமிழீழ விடுதலை இயக்கம் தீர்மானம் எடுக்கும் என்று ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில்  இன்று ஊடகவியலாளர்கள் சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளது தொடர்பாக கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Selvamமேலும் கருத்து தெரிவித்த அவர்,

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தவிசாளரான சிவாஜிலிங்கம் கட்சியின் தீர்மானத்திற்கு அப்பால், கட்சியுடன் எந்த கலந்துரையாடலையும் மேற்கொள்ளாது ஜனாபதி தேர்தலிலே போட்டி இடுவதற்கு தீர்மானித்துள்ளார்.

அவர் வேட்பு மனு தாக்கல் செய்யகூடாது என்று நாம் கோரி வருகிறோம். நாளைய தினம் அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தால் அவரை கட்சியிலிருந்து நீக்குவதா, இல்லையா என்று தமிழீழ விடுதலை இயக்கம் தீர்மானம் எடுக்கும்.

எமது கட்சி ஒழுக்கமான கட்டுகோப்புள்ள ஒரு கட்சி, ஜனநாயாக ரீதியாக செயற்படும் கட்சி. அதில் முக்கிய பதவியை வகிக்கும் சிவாஜிலிங்கம் தன்னிச்சையாக செயற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அது எமது கட்சிக்கு பாதகத்தை ஏற்படுத்தும்.

இதேவளை இந்த தேர்தலை பகிஸ்கரிப்பதையோ, தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுவத்துவதையோ நாம் விரும்பவில்லை.

வெற்றிபெறக்கூடியாவருக்கு வாக்கை அளிக்காமல் வேறு நபருக்கு அளித்தால் அவர்கள் வெற்றிபெற்ற பின்னர் எம்மை பழி வாங்குவார்கள் என்ற அச்சம் எமது மக்கள் மத்தியில் இருக்கிறது.

அத்துடன் கோத்தாபய தொடர்பாகவும் எமது மக்கள் அச்சமடைகின்றனர். எனவே இவ்வாறான சம்பவங்கள் எமது மக்கள் எதிர்கின்ற ஒருவரை மீண்டும் கொண்டுவந்து விடுமோ என்ற பிரச்சனை இருக்கிறது.

அத்துடன்  நாம் சரியான ஒருவரை நிறுத்தவில்லை என்றால் தமிழ் கட்சிகளுக்கு மக்கள் ஆதரவை தெரிவிக்கவில்லை, அவர்கள் அந்த கட்சிகளோடு இல்லை என்ற தோற்றபாடு ஏற்படும் அபாயகரமான நிலையும் உள்ளது.

எனவே  எம்மை பொறுத்த வரை வெற்றிபெறும் வேட்பாளரிடம் எமது கோரிக்கையினை முன்வைத்து அதை நடைமுறைபடுத்துவதற்கான செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று கருதுகிறோம்.

அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து அந்த கோரிக்கையினை முன்வைக்கவேண்டும், அப்போது அது பெறுமதியானதாக இருக்கும். இம்முறை தேர்தலில் எமது தரப்பு கோரிக்கைகளை ஏற்றுக்கொள்பவர்களை தான் நாம் ஆதரிக்க முடியும்.

எமது கட்சியும் அதில் உறுதியாக உள்ளது.எமது கோரிக்கைகளை எடுத்தெறிந்தவர்களிற்கு எமது மக்களின்  வாக்குகளை பெற்றுகொடுப்பது தவறான விடயம்.

வேட்பாளர்களுடன் பேசும் போது இதனை நாம் வலுவாக கூறுவோம். அவர்களது வெற்றிக்காக அவர்கள் எமது கோரிக்கைக்கு ஒத்து வரவேண்டும் என்பதுவே எமது கருத்து. ஒற்றுமையாக அதனை முன்வைக்கும் போது அது சாத்தியமாகும். அப்படி இல்லையாயின் என்ன செய்யலாம் என்று நாம் யோசிக்கலாம். என்றார்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.