எங்களை சித்திரவதை செய்த பின்னர் கொலை செய்யவேண்டும் என சமூக ஊடகங்களில் தெரிவிக்கின்றனர்- கோத்தபாயவிற்கு எதிராக நீதிமன்றம் சென்ற சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்

0
128

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் இலங்கை பிரஜாவுரிமையை கேள்விக்கு உட்படுத்தி நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்த இரு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் காமினி வியாங்கொட சந்திரப்குத தேனுவரவிற்கு பாதுகாப்பினை வழங்குவதற்கு பதில் பொலிஸ்மா அதிபர் சிடி விக்கிரமரட்ண முன்வந்துள்ளார்.

இருவரினதும் சட்டத்தரணிகள் கேட்டுக்கொண்டால் அவர்களிற்கு மேலதிக பாதுகாப்பை வழங்குமாறு அவர் பொலிஸ்அதிகாரிகளிற்கு உத்தரவிட்டுள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவின் இலங்கை பிரஜாவுரிமையை கேள்விக்கு உட்படுத்தும் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்ததை தொடர்ந்தும் இருவரும் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்தையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டுள்ளனர்.

மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பை வழங்கிய பின்னர் தனக்கும் தேனுவரவிற்கும் எதிரான எதிரான அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன என காமினி வியாங்கொட தெரிவித்துள்ளார்.

தொலைபேசி மூலம் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடகங்களிலும் நிந்தனைகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக பதிவொன்று எங்களை சித்திரவதை செய்த பின்னர் கொலை செய்யவேண்டும் என தெரிவித்துள்ளது,என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையின் பாதுகாப்பு அவசியமா என்பதை எதிர்வரும் நாட்களில் தீர்மானிப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் சட்டம் உரியமுறையில் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காகவே நாங்கள் இந்த நடவடிக்கையை எடுத்தோம்,என குறிப்பிட்டுள்ள வியாங்கொட  தன்னை எதிர்ப்பவர்களிற்கு ராஜபக்ச பல பாடங்களை கற்றுக்கொடுத்திருக்கின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.

லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னலிகொட போத்தல ஜயந்த கீத் நொயர் போன்றவர்கள் மூலம் அவர் தன்னை எதிர்ப்பவர்களிற்கு பாடங்களை கற்பித்தார் என குறிப்பிட்டுள்ள வியாங்கொட இதன் காரணமாக எங்களிற்கு எதிராக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் குறித்து எச்சரிக்கையாக உள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவிற்கு சாதகமாக தீர்ப்பு வெளியானதும் நான் தொலைபேசி மூலம் மிரட்டப்பட்டேன் என பேராசிரியர் சந்திரகுப்த தேனவுர  தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பு வெளியானதும் இரு தொலைபேசிகள் அழைப்புகள மூலம் நான் அச்சுறுத்தப்பட்டேன் அதற்கு முன்னர் எனக்கு எதிரான பல குரோத செய்திகள் கருத்துக்கள் வெளியாகியிருந்தன என அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமரிடம் முறையிட்டுள்ளதாகவும்,பாதுகாப்பு அவசியம் என்றால் வேண்டுகோள் விடுக்குமாறு காவல்துறையினர் தன்னை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை நீடித்தால் நான் மேலதிக நடவடிக்கைகளை எடுப்பேன் என தேனவுர தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.