தமிழன் என்பதெல்லாம் வேஸ்ட்.. நான் தெலுங்கன்… அதிரவைக்கும் ராதாரவி

0
348

சென்னை: தெலுங்கர்கள் இல்லை என்றால் தமிழகம் வளர்ச்சியடைந்திருக்க வாய்ப்பே இல்லை என நடிகரும், அதிமுக நட்சத்திரப் பேச்சாளருமான ராதா ரவி தெரிவித்துள்ளார்.

எம்.ஆர்.ராதாரவியின் 40-வது ஆண்டு நினைவு தினத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார்.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு தெலுங்கர்களின் பங்களிப்பு அளப்பறியது எனத் தெரிவித்தார்.

மேலும், தம்மை தமிழன் எனக்கூறுவதெல்லாம் வேஸ்ட் என்றும், தாம் ஒரு தெலுங்கர் எனவும் ஆவேசமாக பேசினார்.

ராதாரவிக்கும் சர்ச்சைக்கும் அப்படி என்னதான் பந்தமோ தெரியவில்லை, மனிதர் வாயை திறந்தாலே அது அதிர வைக்கும்படியாக தான் உள்ளது.

இப்படித்தான் நயன்தாராவை பற்றி வாய்க்கு வந்ததை பேசியதால் ராதாரவிக்கு எதிராக மகளிர் அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தின. இதையடுத்து திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

திராவிட இயக்க வளர்சிக்காக பாடுபட்ட தனது தந்தை எம்.ஆர்.ராதாவை, அந்த இயக்கங்களில் இப்போது இருப்பவர் மறந்துவிட்டதாகவும், தமது இனத்தை சேர்ந்த தெலுங்கர்கள் தான் அவரை நினைவுகூர்ந்து விழாக்கள் எடுப்பதாகவும் கூறினார்.

திராவிட தெலுங்கர்கள் ஒருங்கிணைந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அங்கீகாரம் பெறும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் எனக் கூறினார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கும் போது தான் நடக்குமே தவிர, யார் தலைகீழாக நின்றாலும் முன்கூட்டியே நடைபெற வாய்ப்பில்லை என ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்தார்.

தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி மிகவும் நல்லவர் என்றும், எல்லோருக்கும் பொதுவானவர் எனவும் புகழாரம் சூடினார்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் தமிழகத்தின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாக கூறினார்.

தமிழகத்தில் மந்திரி சபை அமைக்க வேண்டும் என்றால் தெலுங்கர்களின் துணை தேவை என்றும், தெலுங்கர்கள் இல்லாமல் மந்திரி சபை அமைக்க முடியாது என்றும் பேசியுள்ளார்.

தென்மாவட்டங்களில் எந்தக் கட்சியாக இருந்தாலும் தெலுங்கர்களை தான் வேட்பாளர்களாக நிறுத்துவதாக தெரிவித்தார். அரசியலிலும், சினிமாவிலும் தெலுங்கர்கள் தான் கொடிகட்டிப்பறப்பதாக கூறினார்.

தமிழன்..கிமிழன் என்பதெல்லாம் சும்மா, அதெல்லாம் வேஸ்ட், நாம் தெலுங்கர்கள் என்பதை இளைஞர்கள் பெருமிதத்தோடு கூற வேண்டும். நாம் யார் வம்புக்கும் போகமாட்டோம், ஆனால் நம்மை வம்புக்கு இழுத்தால் அஞ்சி ஓடமாட்டோம் எனகூறினார்.

ராதாரவியின் தமிழர், தெலுங்கர் பேச்சு குறித்து விளக்கம் அளித்துள்ள முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, ராதாரவியின் பேச்சு அவரது தனிப்பட்ட கருத்து என்றும், அதற்கும் கட்சிக்கும் தொடர்பில்லை எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.