`ரூ.11 லட்சம், 75 சவரன் வரதட்சணை; போதையில் உளறிய மாமா!’ – திருமண வரவேற்பில் சிக்கிய போலி டாக்டர்

0
102

சென்னையில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது மாப்பிள்ளை டாக்டர் இல்லை என்று போதையில் அவரின் மாமா உளறியதால் புதுமாப்பிள்ளை போலீஸாரிடம் சிக்கிக் கொண்டார்.

சென்னை, புழல் ரெட்டேரி அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஆடம்பரமாக நடந்துகொண்டிருந்தது.

திடீரென பெண் வீட்டினர் மாப்பிள்ளையிடம் தகராறு செய்ததோடு அவரை சரமாரியாக மண்டபத்திலேயே அடித்து உதைத்தனர்.

வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்கள், அங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் குழப்பத்தில் இருந்தனர்.

மண்டபத்திலிருந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மாதவரம் உதவி கமிஷனர் பொறுப்பு ரவி, இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

மாப்பிள்ளை கெட்டஅப்பில் பந்தாவாக இருந்த வாலிபரை போலீஸார், தங்களுடைய வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம் கூறுகையில்,

“கோயம்புத்தூர் கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (32). இவர், வில்லிவாக்கம் வெங்கடேஸ்வரா நகர் சாஸ்திரி தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார்.

அப்போது. சொகுசு காரில் கார்த்திக், பந்தாவாக வீட்டுக்கு வருவார். அவரின் காரில் அரசு மருத்துவர் என்று எழுதப்பட்டிருக்கும். இதனால் கார்த்திக்கை அந்தப்பகுதியில் உள்ளவர்கள் மருத்துவர் என்று நம்பினர்.

இந்தச் சமயத்தில் கார்த்திக் அந்தப்பகுதியில் உள்ளவர்களிடம் பந்தா இல்லாமல் எளிமையாகப் பழகினார்.

இது அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அப்போது கார்த்திக்கும் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த இன்ஜினீயர் தாயன்பனும் நண்பர்களாகினர்.

தன்னை அநாதை என்று தாயன்பனிடம் கார்த்திக் கூறினார். இதனால் கார்த்திக்கு தாயன்பனின் குடும்பம் தீவிரமாக பெண்ணைத் தேடினர்.

sureww

அப்போது கார்த்திக், தனக்கு பெற்றோர் இல்லை. மாமா ஒருவர் இருக்கிறார். அவரும் என் நண்பனின் குடும்பத்தினரும் சேர்ந்துதான் இந்தத் திருமணத்தை நடத்துவார்கள் என்று பெண் வீட்டினரிடம் கூறியுள்ளார்.

அதன்படி கடந்த சில தினங்களுக்குமுன் சென்னை கொளத்தூர் குமரன்நகரில் உள்ள கோயிலில் திருமணம் நடந்தது.

அதன்பிறகு புழல் ரெட்டேரி சந்திப்பில் உள்ள பிரமாண்டமான தனியார் திருமண மண்டபத்தில் ஆடம்பரமாக வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டது.

புதுமாப்பிள்ளை கார்த்திக்கிற்கும் புதுபெண்ணும் வரவேற்பு நிகழ்ச்சிக்குத் தயாராகினர். கார்த்திக், மாப்பிள்ளை கோலத்தில் சிரித்த முகத்துடன் மண்டபத்துக்கு வந்தார்.

அவருடன் கார்த்திக்கின் மாமா ஜெயக்குமார், அவரின் மனைவி வசந்தி மற்றும் சிலர் வந்திருந்தனர். மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்தவர்கள் என்ற பந்தாவாக அவர்கள் மண்டபத்தில் வலம் வந்தனர்.

car

இந்தச் சமயத்தில் கார்த்திக்கின் மாமா ஜெயக்குமார், பெண் வீட்டினரிடம் வரவேற்பு நிகழ்ச்சிக்காக ஒரு லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அப்போது ஏற்கெனவே வரதட்சணையாக 11 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளோம். பெண்ணுக்கு 75 சவரன் நகை போட்டுள்ளோம்.

மேலும், திருமணப் பேச்சுவார்த்தையின்போது வரவேற்பு நிகழ்ச்சியை நீங்கள்தானே நடத்துவதாக ஒப்புக்கொண்டீர்கள்.

இதனால் பணம் தர முடியாது என்று பெண் வீட்டினர் கூறினர். இதனால் கார்த்திக்கின் மாமா ஜெயக்குமாருக்கும் பெண் வீட்டினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்தச் சமயத்தில் போதையில் இருந்த ஜெயக்குமார், நீங்கள் நினைப்பது போல கார்த்திக் அரசு மருத்துவர் இல்லை என்று உளறியுள்ளார்.

அதைக் கேட்டு பெண் வீட்டினரும் மணமகளும் அதிர்ச்சியடைந்னர். உடனடியாக புதுமாப்பிள்ளை கார்த்திக்கிடம் பெண் வீட்டினர் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார்.

CCTV
CCTV

ஒரு கட்டத்தில் கார்த்திக் அரசு டாக்டர் இல்லை என்ற தகவல் தெரிந்ததும் பெண் வீட்டினர் அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

நிலைமை விஸ்வரூபமானதைப் பார்த்தவர்கள் திருமண மண்டபத்திலிருந்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் கார்த்திக்கை கைது செய்துள்ளோம். மேலும், அவரின் மாமா என்று கூறிய ஜெயக்குமார், அவரின் மனைவி வசந்தி ஆகியோரையும் பிடித்துள்ளோம்.

விசாரணையில் கார்த்திக்கிற்கு மாமாவாக ஜெயக்குமாரும் அத்தையாக வசந்தியும் நடித்தது தெரியவந்தது. இதனால் அவர்களையும் கைது செய்துள்ளோம்.

கார்த்திக்கிடமிருந்து விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றையும், அரசு டாக்டர் என்று அச்சிடப்பட்ட அழைப்பிதழ்களையும் பறிமுதல் செய்துள்ளோம். தொடர்ந்து கார்த்திக் தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது” என்றார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.