‘ஜீப்பில் இருந்து தவறி விழுந்த’… ‘ஒன்றரை வயது குழந்தை’… ‘நடுக்காட்டில் தவழ்ந்து திரியும்’… ‘சில்லிட வைக்கும் சிசிடிவி காட்சிகள்’

0
274

நடுக்காட்டில் நள்ளிரவில் ஜீப்பிர் இருந்து தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை ஒன்று, சாலையில் தவழ்ந்து திரியும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

கேரள மாநிலம் மூணாறு அருகே கம்பிளி கண்டம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ், இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, தனது குடும்பத்தினருடன் ஒன்றரை வயது பெண் குழந்தை கோகிலாவுக்கு, முடிகாணிக்கை செலுத்துவதற்காக பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு ஜீப்பில் சென்றுள்ளார்.

பின்னர் ஜீப்பில் வீட்டிற்கு திரும்பும் போது, குழந்தை கோகிலா பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த, தனது தாயின் மடியில் உட்கார்ந்து இருந்துள்ளார். அப்போது அவரது தாய் அசதியில் தூங்கியதாகத் தெரிககிறது.

சுமார் இரவு 10 மணி அளவில் ராஜமலை 5 மைல் பாலத்தில் ஜீப் சென்று கொண்டிருந்தபோது, தாயின் மடியில் இருந்து குழந்தை கோகிலா தவறி கீழே விழுந்தாள்.

ஜீப்பை இயக்கிக் கொண்டிருந்த சதீஷ், குழந்தை விழுந்ததை கவனிக்கவில்லை. அதே நேரத்தில் சாலையில் விழுந்த குழந்தை கோகிலா தவழ்ந்து செல்லும் காட்சி, அங்குள்ள வனத்துறையின வேட்டை தடுப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

சுற்றுலாத்தளமான ராஜமலை பகுதியில், வன விலங்குகள் நடமாட்டமும், அதனை சட்டவிரோதமாக வேட்டையாடுவோரின் நடமாட்டமும் அதிகமாக இருக்கும்.

இதனால், அவற்றை கண்காணிக்க வனத்துறையினர், பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, பிரத்யேகமாக ஊழியர்களை நியமித்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு கண்காணிப்பு பணியில், சோதனைச் சாவடியில் இருந்த வனத்துறை ஊழியர் கைலாசம் என்பவர், அங்கு ஏதோ தவழ்ந்து செல்வதுபோல் இருந்ததைக் கண்டு, அருகில் சென்று பார்த்துள்ளார். அப்போது அது குழந்தை என தெரியவந்ததை அடுத்து, வனத்துறை மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அந்த குழந்தைக்கு கைகால்களில் காயம் ஏற்பட்டதால், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார் கைலாசம்.

இதற்கிடையே குழந்தை காரில் இல்லாததை அறியாத சதீஷ் குடும்பம், சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் உள்ள தங்களது வீட்டிற்கு சென்று சேர்ந்துள்ளனர்.

வீட்டில் இறங்கும்போது கண்விழித்த தாய், தனது மடியில் இருந்த குழந்தையை காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக தனது கணவருடன் சேர்ந்து, அருகில் உள்ள வெல்லத்தூவல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அங்கு ஏற்கனவே ராஜமலாவில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை குறித்து, காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அங்குள்ள காவல் அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு இது குறித்து தகவல் கூறியுள்ளனர். மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் அந்த குழந்தை அதன் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

LEAVE A REPLY

*