சந்திரயான்-2 மீண்டும் உயிர்பெற வாய்ப்பு உண்டா?- நம்பி நாராயணன் பதில்

0
134

சந்திரயான்-2 இறுதி நிமிடங்கள் குறித்து இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். அதற்கான பதில்கள் இங்கே!

satellitegeneric_660_072419041153

இந்த வருடத்தில் இஸ்ரோ கையிலெடுத்த முதன்மையான திட்டங்களில் ஒன்று, சந்திரயான் 2.

ஏற்கெனவே, சந்திரயான் 1 வெற்றிபெற்ற நிலையில், நிலவில் கால்பதிக்கத் திட்டமிட்டது இஸ்ரோ.

அதன் பின்னர், பல தடைகளைக் கடந்து ஒருவழியாக சந்திரயான் 2, கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி வெற்றிகரமான விண்ணில் ஏவப்பட்டது.

தொடக்கம் முதலே பலத்த எதிர்பார்ப்பைக் கிளப்பியிருந்த இந்தத் திட்டம், ஒவ்வொரு படியாக முன்னேறி வந்தது. அதன் இறுதிக் கட்டம்தான் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வு.

தரையைத் தொடுவதற்கு முன்பான 15 நிமிடங்கள் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பது முன்பே தெரிந்ததுதான்.

அதேபோல தரையிலிருந்து சில கிலோமீட்டர்கள் உயரத்தில் இருக்கும்போது, லேண்டரிடம் இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

இறுதி நிமிடங்களில் என்ன நடந்தது என்பது முழுமையாக நமக்கு இன்னும் தெரியவில்லை. இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“லேண்டர் தரையிறங்க முடியாமல் போனதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என நினைக்கிறீர்கள்?”
_108658089_100241-vikram-isro

“லேண்டரில் அதற்கென தீர்மானிக்கப்பட்ட பாதை இருக்கிறது. கடைசியாக 2.1 கி.மீ உயரத்தில் இருக்கும்போது, திட்டமிட்டபடி சரிவாகச் செல்வதற்குப் பதிலாக, நேராகத் தரையை நோக்கி இறங்கியிருக்கிறது.

அதேநேரம், லேண்டரில் இருந்து வெப்பநிலை, அதிர்வுகள் போன்ற பல தகவல்கள் நமக்கு அனுப்பப்படும்.

அதுவும் திடீரென நின்றுபோயிருக்கிறது. இது மட்டும்தான் இப்போது வரைக்கும் நமக்குத் தெரிந்த விஷயம்.

இதைவைத்து அங்கே என்ன நடந்திருக்கும் என்பதை நம்மால் அனுமானிக்க மட்டுமே முடியும். தவிர, நடந்தது இதுதான் என்று உறுதியாக என்னால் சொல்ல முடியாது.

இறுதிக்கட்டத்தில் லேண்டரை கட்டுப்படுத்த முடியவில்லை என்று சொன்னால் சரியாக இருக்காது.

சாஃப்ட் லேண்டிங் செய்ய நினைத்தோம், அது நடக்கவில்லை. மேலும், இதைப் பற்றிய தகவல்கள் வேண்டுமென்றால், இஸ்ரோ சொல்லும் வரைக்கும் காத்திருக்க வேண்டும்.

இஸ்ரோ எந்த விஷயத்தையும் மறைக்கவில்லை. அவர்களுக்குத் தரவுகளை ஆராய சற்று நேரம் தேவைப்படலாம். எனவே, இன்னும் சில நாள்களில் இஸ்ரோவிடம் இருந்து அதிகாரபூர்வமான விளக்கத்தை எதிர்பார்க்கலாம். “

“தொடர்பு இல்லாமல் போனாலும் லேண்டர் பாதுகாப்பாகத் தரையிறங்கியிருக்கும் என்று சிலர் கூறுகிறார்கள்… அதற்கு வாய்ப்பு உண்டா ?”
img-0222

“ லேண்டர் நிலவின் தரையில் இறங்குவது என்பது முழுக்க முன்கூட்டியே புரோகிராம் செய்யப்பட்ட ஒன்றுதான். அதன் பெயர் ALS (ஆட்டோ லேண்டிங் சிஸ்டம்).

அனைத்தையும் தீர்மானிப்பது அந்த சிஸ்டம்தான். அதில் இருக்கும் சென்ஸார்கள்தான் லேண்டர் எப்படி இறங்க வேண்டும் என்பதை முழுக்க தீர்மானிக்கிறது.

இந்த சிஸ்டம், நிலைமைக்குத் தகுந்தவாறு லேண்டரின் பாகங்களுக்குக் கட்டளைகளை மாற்றிக் கொடுக்கும். சீரான வேகத்தில் இறங்கிக் கொண்டிருக்கும் லேண்டர், பாதை மாறி தரையில் இறங்குகிறது. எனவே, அது கீழே விழுந்து நொறுங்கியிருக்கலாம்…”

“லேண்டர் மீண்டும் உயிர்பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா? லேண்டரை மறுபடியும் நம்மால் தொடர்புகொள்ள முடியுமா?”

“லேண்டர் பாதிக்கப்படாமல் இருந்தால், அதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனால், நாம் நினைத்தபடி அது சாஃப்ட் லேண்ட் ஆகவில்லை. தரையில் சென்று மோதியிருக்கிறது.

அதன் காரணமாக லேண்டர் முற்றிலுமாக பாதிப்படைந்திருக்கலாம். நேற்று, திடீரென தொடர்பு இல்லாமல்போனதே அது செயலிழந்துவிட்டதற்கான ஒரு குறியீடுதானே… அதற்கு வேறு எந்தக் காரணமும் இருக்க முடியாது.

என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், லேண்டரை மீண்டும் நம்மால் தொடர்புகொள்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதே எனது கருத்து.”

“மீண்டும் நிலவை ஆராய இஸ்ரோ முயற்சி செய்யுமா? சந்திரயான்-3 திட்டம் தொடங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா?”
GSLV-MK-III-Image-ISRO-660“ இதுவரை சந்திரயான் 1 மற்றும் சந்திரயான் 2 ஆகிய திட்டங்கள் மட்டுமே நமக்கு அனுமதியளிக்கப்பட்ட பட்டியலில் இருக்கின்றன.

சந்திரயான்-3 என்ற திட்டம் இதுவரை நம்மிடம் கிடையாது. ஒரு வேளை, ‘இந்தத் தவற்றை நாம் சரிசெய்ய வேண்டும்.

மீண்டும் விண்கலத்தை அனுப்ப வேண்டும்’ என்று முயற்சி செய்தால், அதற்கான நிதியை அரசு அளிக்கும் என்றே நாம் நம்புகிறேன்.

ஆனால், நிலவை மீண்டும் ஆராய்வதற்கான தேவை என்ன இருக்கிறது என்பது என்னிடம் இருக்கும் முதல் கேள்வி.

இந்தத் திட்டத்தில் என்ன தவறு நடந்தது என்பதைக் கண்டறிந்தாலே அது போதுமானதாக இருக்கும். நிலவை ஆராய மேலும் திட்டம் தேவையில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து.”

மு.ராஜேஷ்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.