“புலிகளிடம் பெற்றது ஒப்புதல் அல்ல… ஊக்கம்!” – திருமாவளவன் ‘பளீர்’ (பேட்டி)

0
58

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்.பி-யுமான தொல்.திருமாவளவன் எழுதிய ‘அமைப்பாய்த் திரள்வோம்’ நூலின் திறனாய்வுக் கூட்டம், லண்டனில் நடைபெற்றது.

கூட்டம் நடந்து கொண்டிருந்தபோதே இருவர் எழுந்து கோஷமிட்டதால், அங்கே சலசலப்பு ஏற்பட்டது.

மறுநாள் லண்டனில் திருமாவளவன் கலந்துகொண்ட இன்னொரு கூட்டத்திலும் ஒருவர் திருமாவளவனுக்கு எதிராக கோஷம் எழுப்பினார். குரல் எழுப்பியவர்களின் அடிப்படை கேள்வி இதுதான்… ‘காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருக்கும் திருமாவளவன் எப்படி, ஏன் இங்கு வந்தார்?’ என்பதே. இந்தப் பிரச்னை, சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதங்களைக் கிளப்பியது. திருமாவளவனை நேரில் சந்தித்தோம்.

“லண்டன் கூட்டத்தில் நடந்தது என்ன?”

“லண்டனில் செயல்படும் `விம்பம்’ என்னும் இலக்கிய அமைப்பு, நான் எழுதிய ‘அமைப்பாய்த் திரள்வோம்’ நூலை அறிமுகப்படுத்துவதற்கு என்னிடம் ஒப்புதல் பெற்றது.

ஆகஸ்ட் 24-ம் தேதி லண்டன் சென்று நிகழ்வில் கலந்துகொண்டேன். நான் பேசத் தொடங்கி 15 நிமிடம் இருக்கும்.

பார்வையாளர்கள் அரங்கிலிருந்து ஒருவர் எழுந்து, கூச்சலிட்டார். அவரின் கைகளில் ஏதோ படங்கள் இருந்தன. அவருக்குத் துணையாக இன்னொருவரும் சேர்ந்துகொண்டார்.

இரண்டு பேர் மட்டும் ஏதோ சத்தம் போட்டபோது, அவர்கள் கைகளில் இருந்த படங்களை வாங்கிக்கொண்டு அவர்களிடம் பேசி, சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டார்கள்.

நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர் என்னிடம் வந்து ‘தி.மு.க மற்றும் காங்கிரஸுக்கு எதிராக அந்த இருவரும் கோஷமிட்டார்கள். நாங்கள் சொன்னதும் வெளியேறி விட்டார்கள்’ என்றார்.”

“ஆனால், லண்டன் கூட்டத்தில் நீங்கள் நிதி கேட்டதால்தான் அவர்கள் குரல் எழுப்பியதாகச் சொல்கிறார்களே?”

“அவர்களிடம் நான் எதற்காக நிதி கேட்க வேண்டும்? அதற்கான அவசியமும் எனக்கு இல்லை. நான் என் சொந்த செலவில்தான் லண்டன் சென்றேன்; ஹோட்டலில் தங்கினேன்.

என்னுடன் இரண்டு பேர் வந்திருந்தார்கள். என்மீது வீண்பழி சுமத்த வேண்டும் என முடிவு செய்துவிட்ட பிறகு, எந்த ஓர் எல்லைக்கும் செல்வார் கள் என்பதற்கு இது ஒரு சான்று.”

“இவ்வளவு காலம் கழித்து, `விடுதலைப்புலிகள் சொன்னதால் தான் காங்கிரஸுடன் கூட்டணி வைத்தேன்’ என்பதை ஈழத்தமிழர் அதிகம் இருக்கும் கூட்டத்தில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?”

“கூச்சல் எழுப்பியவர்கள், ‘தமிழ் ஈழப் படுகொலைக்குக் காரணமான காங்கிரஸுடன் நீங்கள் ஏன் கூட்டணி வைத்தீர்கள்?’ என்று கேட்டார்கள்.

நான் இந்தியாவிலிருந்து கிளம்புவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பும் லண்டனில் உள்ள ஒரு தரப்பினர் இன்னொரு கேள்வியைக் கேட்டனர்.

‘விம்பம் என்பது, விடுதலைப்புலிகளுக்கு எதிரான ஓர் அமைப்பு. அவர்கள் நடத்தும் கூட்டத்தில் நீங்கள் எப்படிப் பேசலாம்?’ என்றும் கேள்வி எழுப்பினர்.

அவர்களிடம் நான், ‘எனக்கு அது வெறும் இலக்கிய அமைப்பு என்றரீதியில் மட்டும்தான் தெரியும். ஏற்கெனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சி அது. பல ஏற்பாடுகளைச் செய்திருப்பார்கள்.

அங்கே போகாமல் இருந்தால் நாகரிகமாக இருக்காது’ என்று பதில் சொன்னேன்.

ஆனாலும், நான் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இருப்பதாக அவர்கள் நினைத் தார்கள். ஆகவே, இருதரப்புக்கும் பதில் சொல்லவே விடுதலைப்புலிகள் அமைப் புக்கும் எனக்கும் இருக்கும் தொடர்பைச் சொல்ல நேரிட்டது.”

“விடுதலைப்புலிகள் சொன்னதால்தான் காங்கிரஸுடன் கூட்டணி வைத்ததாகச் சொல்கிறீர்கள்… அந்தத் தருணத்தை விளக்க முடியுமா?”

“விரிவாகவே விளக்கிவிடுகிறேன். காங்கிரஸ் அல்லது இந்திய அரசு எதிர்ப்பு என்பதை, விடுதலைப்புலிகள் வெளிப்படையாக எந்தக் காலத்திலும் எந்தச் சூழலிலுமே முன்வைத்ததில்லை.

ஒவ்வொரு வருடமும் மாவீரர் நாளில் அண்ணன் பிரபாகரன் ஆற்றிய உரைகள் புத்தகங்களாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

அந்தப் புத்தகங்களை முழுமையாகப் படித்தால் தெரியும். அதில் எங்கேயுமே காங்கிரஸ் – இந்திய அரசு எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கவே மாட்டார்கள்.

625.500.560.350.160.300.053.800.900.160.90அதேசமயம், காங்கிரஸும் இந்திய அரசும் தங்களுக்கு எதிராக இருக்கின்றன என்பதையும் அண்ணன் பிரபாகரன் அறிந்தே இருந்தார். ஆனாலும் எதிர் நிலையில் இருக்காமல் நட்புநிலையிலேயே அவர்கள் இருந்தார்கள்.

இந்த வியூகம் மிக முக்கியமானது. இந்திய அரசின் துணை இல்லாமல் சர்வதேச ஆதரவைப் பெறுவது கடினம் என்பதை அவர்கள் நன்றாகவே அறிந்திருந்தார்கள்.

ஆகவே, இந்திய அரசை வெளிப்படையாக விமர்சனம் செய்யாமல், ராஜதந்திர முறையில் நட்பான உறவைப் பேண வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் புலிகள் இருந்தார்கள்.

இதைத்தான் மிக முக்கியமான புள்ளியாகப் பார்க்கிறேன். முரண்பாடுகள் இருந்தாலும், பகைமை இருந்தாலும், வலிகள் இருந்தாலும் இந்திய அரசைப் பகைத்துக் கொள்ளாமலேயே காய்களை நகர்த்தினார் பிரபாகரன். இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

கடந்த 2009-ல் யுத்தம் நடந்துகொண்டிருந்த போது, தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தோம்.

எங்களுக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கிய போது, ‘வேண்டாம், கூட்டணி யிலிருந்து விலகிக்கொள்கிறோம்’ என்ற மனநிலையில் இருந்தோம்.

இந்தத் தகவல், எங்கள் தோழர்கள் மூலமாக புலிகளுக்குச் சென்றது. அந்த நேரத்தில் சேரலாதன் என்கிற சத்தியமூர்த்தியும், அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன் அவர்களும் என்னிடம் தொலைபேசியில் பேசினர்.

‘தி.மு.க-வுடன் கூட்டணி என்று நீங்கள் எடுத்த முடிவு சரிதான். தவறு இல்லை. பின்வாங்க வேண்டாம்.

நீங்கள் நாடாளு மன்றத்துக்குப் போக வேண்டும். மறுபடியும் காங்கிரஸ் ஆட்சிதான் வருகிறது என்று சொல்கிறார்கள்.

அதனால், நீங்கள் இரண்டு இடங்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று போனால்தான் எங்களுக்காகப் பேச முடியும்’ என்று ஆலோசனை சொன்னார்கள். ஆகவே, அவர்களுடன் கூட்டணி வைத்தேன்.

எங்களுக்குள் நடந்த இதை, எல்லா நேரங்களிலும் சொல்லிக்கொண்டிருக்க முடியாதல்லவா? லண்டனில் நடைபெற்ற கூட்டத்தில் இதைச் சொல்ல வேண்டிய சூழல் உருவானதால் நான் சொன்னேன்.

அடுத்த நாள் நிகழ்ச்சியிலும் ஒருவர் கேள்வி எழுப்பினார். ஆனால், இதையெல்லாம் இவர்களாகக் கேட்கவில்லை.

தமிழகத்தில் உள்ள சாதியவாத, மதவாத சக்திகளின் தூண்டுதல்களால்தான் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனாலெல்லாம் புலிகள் அமைப்பு மீதான என் நேசத்தை, அண்ணன் பிரபாகரன்மீது நான் வைத்திருக்கும் பாசத்தைக் கொச்சைப்படுத்த முடியாது.’’

“நீங்கள் இந்தியாவில் இருக்கும் ஓர் அரசியல் கட்சித் தலைவர். ஆனால், அந்நிய நாடான இலங்கையில் இருக்கும் புலிகளின் அமைப்பு சொன்னபடி தி.மு.க – காங்கிரஸுடன் கூட்டணி வைத்தோம் என்கிறீர்கள்.

இது உங்களுக்கே சரியாகத் தோன்றுகிறதா? வெளிநாட்டில் இருக்கும் அமைப்புகள், உங்களைப் போன்ற அமைப்புகளை ஆட்டுவிக்கின்றன என்று ஏற்கெனவே இருக்கும் குற்றச்சாட்டுகள் இதன்மூலம் உறுதியாகின்றனவே?’’

“அப்படி எடுத்துக்கொள்ளக் கூடாது. 2006-லிருந்தே தி.மு.க கூட்டணியில்தான் இருந்தோம். அதைத் தொடர்ந்தோம்… அவ்வளவுதான்.

அதேசமயம் நடராஜன், நெடுமாறன் ஆகியோருடன் இணைந்து இலங்கைத் தமிழர் நலனுக்காகச் செயல்பட்டோம்.

தி.மு.க கூட்டணியில் இருந்துகொண்டேதான் இந்திய அரசை எதிர்த்து நான் உண்ணாவிரதம் இருந்தேன். பிரபாகரனையே கைதுசெய்யும் சூழல் வந்தபோது தேர்தலைச் சந்திக்க விருப்பமில்லாமல், தி.மு.க அளித்த சீட்களை திருப்பி அளிக்க முற்பட்டோம்.

அப்போது தேர்தலைச் சந்திக்க எனக்கு ஏற்பட்ட தயக்கத்தைப் போக்கும்விதமாக புலிகள் ஊக்கமளித்தார்கள். அவ்வளவுதான்.”

“இந்திய தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது, இந்தியாவில் இருக்கும் ஓர் அரசியல் கட்சியாக நீங்கள் எடுக்க வேண்டிய முடிவு. இதற்கு அந்நிய நாட்டின் அமைப்பிடம் ஒப்புதல் பெற்றது, இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் என்பதுபோல் அல்லவா இருக்கிறது?’’

“இல்லை. அவர்களிடம் நாங்கள் ஒப்புதல் எல்லாம் பெறவில்லை. ஈழ மக்களின்மீது அன்பும் அக்கறையும்கொண்ட நாங்கள் சோர்ந்து போகக் கூடாது என்றும், தமிழீழ மக்களின் உணர்வுகள் நாடாளுமன்றத்தில் ஒலிக்க உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பை விடலாகாது என்றும் ஊக்கமளித்தார்கள். அதை ஒப்புதல் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம்.’’

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.