நவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்

0
297

செல்வமும், மகிழ்ச்சியும் அளிக்கும் விதத்தில் ஜாதக ரீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட யோகங்கள் இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது.

செல்வமும், மகிழ்ச்சியும் அளிக்கும் விதத்தில் ஜாதக ரீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட யோகங்கள் இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது.

ஒரு மனிதன் பிறக்கும்போது வான மண்டலத்தில் சுழலும் ஒன்பது கோள்களும், வெவ்வேறு நிலைகளில் அமைகின்றன.

சில குறிப்பிட்ட நிலைகளில் அமர்ந்த கிரகங்கள் அளிக்கும் பலன்களை யோகம் என்று ஜோதிடம் குறிப்பிடுகிறது.

அத்தகைய நிலையில் கிரகங்களால் உருவாகும் சுப யோகங்கள் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம்.

ஜோதிட மேதை வராகமிகிரர் தந்த பிருஹத் ஜாதகம் என்ற நூல் இன்றைய நவீன ஜோதிட நூல்களுக்கெல்லாம் அடிப்படையாக உள்ளது.

அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள நாபஸ யோகங்களில் உள்ள 20 ஆகிருதி யோகங்களில் கத, சகடம், விஹக, சிருங்காடகம், ஹலம் ஆகிய ஐந்து யோகங்கள் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். நாபஸ யோகங்களில் ராகு, கேது ஆகியவை கணக்கிடப்படவில்லை.

1) கத யோகம்

எல்லாக் கிரகங்களும் அடுத்தடுத்த இரண்டு கேந்திர வீடுகளில் இருப்பது கத யோகம் ஆகும். அதாவது, லக்னம், நான்கு என்ற இரு கேந்திர வீடுகளிலோ, நான்கு, ஏழு என்ற இரு கேந்திர வீடுகளிலோ, ஏழு, பத்து என்ற இரு கேந்திர வீடுகளிலோ அல்லது பத்து, லக்னம் என்ற இரு கேந்திர வீடுகளிலோ எல்லாக் கிரகங்களும் இருப்பதாகும்.

இந்த யோகத்தில் பிறந்தவர்கள் பொதுத்தொண்டுகளில் ஆர்வம் கொண்டவராகவும், செல்வம் படைத்தவராகவும், உழைப்பாளியாகவும் இருப்பார்கள்.

சிறந்த ஆன்மிக ஈடுபாடு கொண்டவராகவும் வாழ்ந்து வருவார். கிரகங்கள் அமர்ந்த கேந்திர வீடுகளுக்கேற்ப நடைமுறை பலன்கள் அமையும்.

2) சகடம் யோகம்

எல்லாக் கிரகங்களும் லக்னம், ஏழாமிடம் என்ற இந்த இரண்டு கேந்திரங்களில் மட்டும் இருந்தால் சகடம் என்ற யோகம் உருவாகிறது.

இந்த யோகத்தில் பிறந்தவர்களில் பெரும்பாலானோர், வாகனங்களை வைத்து செய்யக்கூடிய ‘டிரான்ஸ்போர்ட்’ தொழில் மூலம் வாழ்க்கை நடத்தி வருவார்கள்.

அவர்களது மன விருப்பத்தின்படியே வாழ்க்கையை நடத்திச்செல்வது இந்த யோகம் அமைந்தவர்களது இயல்பாகும்.

தமது வாழ்க்கை துணையை பல விஷயங்களில் அனுசரித்து செல்ல வேண்டிய கட்டாயமும் இந்த யோகம் அமைந்தவர்களுக்கு உருவாகலாம்.

3) விஹக யோகம்

அனைத்துக் கிரகங்களும் நான்காம் இடம் மற்றும் பத்தாவது இடம் ஆகிய இரண்டு கேந்திரங்களில் அமர்ந்திருப்பது விஹகம் என்ற யோகத்தை தருகிறது.

இந்த யோகத்தில் பிறந்தவர்கள், தனி மனிதர்கள் அல்லது அரசு சார்பாக தூது செல்பவர்களாக இருப்பார்கள். நிறைய பயணங்களை மேற்கொண்டு பல ஊர்களைச் சுற்றி வருவதில் விருப்பம் கொண்டவர்கள்.

ஒரு செய்தி நல்லதாக இருந்தாலும், பாதிப்பை தருவதாக இருந்தாலும் அதை பலரிடத்திலும் கொண்டு சேர்ப்பவராக செயல்படுவார்.

4) சிருங்காடக யோகம்

சூரியன் முதல் சனி வரை உள்ள எல்லாக் கிரகங்களும் லக்னம், ஐந்தாமிடம், ஒன்பதாமிடம் ஆகிய மூன்று ராசிகளுக்குள் அமர்ந்திருப்பது சிருங்காடகம் என்று யோகமாக அழைக்கப்படுகிறது.

இந்த யோகத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையின் ஆரம்ப காலகட்டங்களில் பல்வேறு துன்பங்களை அடைந்தாலும், தமது பிற்கால வாழ்க்கையில் அமைதியான வாழ்க்கையை பெறுபவர்களாக இருப்பார்கள்.

ஜோதிட ரீதியாக இந்த யோகம் வயதான காலத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் கொண்ட வாழ்க்கையை தரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

5) ஹல யோகம்

ஒருவரது சுய ஜாதகத்தில் அனைத்துக் கிரகங்களும் லக்ன வீட்டுக்கான திரிகோணங்களைத் தவிர்த்து மற்ற வீடுகளுக்கான திரிகோணங்களில் அமர்வது ஹலம் யோகம் ஆகும்.

அதாவது, இரண்டு, ஆறு, பத்து ஆகிய இடங்களிலோ, மூன்று, ஏழு, பதினொன்று ஆகிய இடங்களிலோ அல்லது நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய இடங்களிலோ எல்லா கிரகங்களும் அமர்ந்திருப்பது ஹலம் என்ற யோகத்தை அளிக்கிறது.

இந்த யோகத்தில் பிறந்தவர்கள் பெரிய அளவில் விவசாயம் சார்ந்த தொழிலை மேற்கொள்வார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களது வாழ்வின் பெரும்பகுதியை விளை நிலங்களில் செலவழிப்பார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

*