சந்திரயான் 2: நிலவில் தரையிறங்கும் வரலாற்றுத் தருணத்தை நோக்கி | LIVE

0
106

இந்தியாவின் நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான்-2 விண்கலத் தொகுப்பின் பயணம் இதோ முக்கியக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது.

நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இயங்கிக்கொண்டிருக்கும் சந்திரயான் விண்கலத் தொகுப்பில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் என்ற தரையிறங்கு கலன் நிலவின் மேற்பரப்பில் சனிக்கிழமை அதிகாலை 1.30 முதல் 2.30 மணிக்குள் மெதுவாகத் தரையிறங்குவதே அந்த வரலாற்றுத் தருணம்.

இந்தத் தருணத்தை எதிர்நோக்கி இஸ்ரோ விஞ்ஞானிகள் உள்ளிட்ட, இந்தியாவின் விண்வெளி ஆய்வு சமூகம் ஆர்வத்தோடு காத்திருக்கிறது.

சந்திரயான் 2-வின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நேரலை காட்சிகளை பிபிசி தமிழ் பேஸ்புக் மற்றும் யூ டியூப் பக்கங்களில் நேயர்கள் காணலாம்.

பெங்களூருவில் பிரதமர் நரேந்திர மோதி

சந்திரயான் 2-வின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் வரலாற்று தருணத்தை காண பெங்களூருவில் உள்ள இஸ்ரோ அமைப்புக்கு பிரதமர் மோதி சென்றுள்ளார் அவருடன் சேர்ந்து 60 குழந்தைகளும் இந்த நிகழ்வை காண உள்ளனர்.

நிலவில் இந்தியாவின் முத்திரை நிலவில் தரையிறங்க உள்ள ரோவர் ஊர்தியில் அசோக சக்ரம் மற்றும் இஸ்ரோவின் முத்திரைகள் இடம் பெற்றுள்ளன. அதனால் அங்கு பயணிக்கும்போது, இந்தியாவின் தடத்தை ரோவர் விட்டுச் செல்லும்.

 

12:05 AM உலகின் முக்கிய பிரபலங்கள் இந்தியாவுக்கு வாழ்த்து

சந்திரயான் 2 திட்டத்தின் விக்ரம் லாண்டர் நிலவில் தரையிறங்க உள்ள நிலையில், உலகின் முக்கிய பிரபலங்கள் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் ஆகியோரும் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

12:00 AM இந்திய அளவில் ட்ரெண்டாகும் #Chandrayaan2

சந்திரயான் 2 விண்கலம் ஒரு சில மணி நேரங்களில் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக்காண பலரும் ஆவலாக உள்ள நிலையில் #Chandrayaan2 என்ற ஹேஷ் டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது

‘சாஃப்ட் லேண்டிங்’ – கடைசி 15 நிமிடங்கள் ஏன் முக்கியமானது?

சந்திரயான் நிலவு திட்டத்தில், விக்ரம் தரையிறங்கும் கலன் நிலவின் மேற்பரப்பில், தானே நிலைநிறுத்திக் கொள்ளும் தருணம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

தரையில் இருந்து எந்த கட்டுப்பாடும் இல்லாமல், விக்ரம் கலன் அதுவாகவே வழிநடத்திக் கொள்ளும் அந்தத் தருணம், “படபடப்பான 15 நிமிடங்கள்” என அவர் விவரிக்கிறார்.

நிலவில் தரையிறங்குவது என்பது கடினமானதாக இருக்கலாம்.

நிலவில் வளிமண்டலம் கிடையாது. இதனால் லேண்டரை மெதுவாக தரையிறக்க பாராசூட்டை பயன்படுத்த முடியாது.

அதனால் இந்த எரிபொருளை பயன்படுத்தி சமநிலையில் தரையிறங்குவதுதான் ஒரே வழி.

அதாவது, லேண்டர் அதனுடைய சொந்த ராகெட் இன்ஜின்களை பயன்படுத்தி அதன் வேகத்தை சீராக குறைக்கும்.

நிலவின் மேற்பரப்பை நெருங்க நெருங்க, கிடைமட்டமாக லேண்டர் நகர்ந்து கொண்டே இருக்கும்.

நிலவின் லேண்டர் தரையிறங்கும் அந்த தருணத்தில், ராக்கெட் இன்ஜின்கள் நகர்வை நிறுத்தி, அதே சமயத்தில், இறக்கத்தின் வேகத்தையும் கட்டுப்படுத்த வேண்டும்.

இதற்கு பெயர்தான் “சாஃப்ட் லேண்டிங்”.

இந்தியாவின் சந்திரயான் 2 திட்டம்

ஜூலை 22ம் தேதி சென்னை அருகே உள்ள ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் சந்திரயான் வின்கலத் தொகுப்பு ஏவப்பட்டது.

முதலில் புவி சுற்றுவட்டப் பாதையை அடைந்து அதில் சுற்றிக் கொண்டிருந்த சந்திரயான் 2, பிறகு அதில் இருந்து விடுபட்டு நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு மாறிச் செல்லும் பயணத்தைத் தொடங்கியது. பிறகு அது நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது.

நேரடியாக நிலவை நோக்கிப் பயணிக்காமல் இப்படி சுற்றுவட்டப் பாதையில் பல வாரங்கள் எடுத்துக் கொண்டு பயணிக்கும் தொழில்நுட்பம், எரிபொருளை மிச்சப்படுத்தும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது என்பது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ-வின் கருத்து.

சந்திரயான் விண்கலத் தொகுப்பு, ஒன்றுக்குள் ஒன்று அடங்கிய மூன்று பாகங்களை உடையது. எல்லாவற்றையும் உள்ளடக்கிய சுற்றுவட்டக் கலனில் இருந்து பிரிந்த விக்ரம் என்று பெயர் சூட்டப்பட்ட தரையிறங்கு கலன் ‘மென் தரையிறக்கம்’ மூலம் நிலவைத் தொடும்.

அதன் பிறகு, விக்ரம் கலனில் இருந்து பிரக்யான் என்று பெயர் சூட்டப்பட்ட ஆய்வு ஊர்தி வெளியேறி நிலவின் தரைப் பரப்பை ஆராயும்.

_108647780_094522f2-2c22-4734-ad94-bba8fea3bc8dவிக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கும் கடைசி 15 நிமிடங்கள் தொழில்நுட்பரீதியாக மிக முக்கியமான கட்டம் என்று கூறப்படுகிறது.

சந்திரயான் 2: இந்தியாவுக்கு இதனால் என்ன பயன்?

இந்தியாவின் கொடியை சந்திரயான் கொண்டு சென்று நிலவில் இறங்குவதால் சிறப்பு பெறுகிறது. இந்தியாவின் பெருமையாகவும் இது கருதப்படுகிறது.

செவ்வாய் கிரகம், சிறு கிரகங்களில் விண்கலனை தரையிறங்க செய்கின்ற மற்றும் நிலவுக்கு மனிதனை அனுப்புகிற தொழில்நுட்ப வாய்ப்புகளை இது வழங்குவதாக அமையும்.

இந்தியா நிபுணத்துவம் பெற விரும்புகிற முக்கிய தொழில்நுட்பம் இதுவாகும்.

-பிபிசி தமிழ் செய்தி-

LEAVE A REPLY

*