பாகிஸ்தான் இஸ்ரேலுடன் நட்பாக இருக்க விரும்புவது ஏன்? – காஷ்மீர் விவகாரம்

0
174

காஷ்மீர் தொடர்பான நரேந்திர மோதி அரசாங்கத்தின் கொள்கை குறித்து பாகிஸ்தானில், இஸ்ரேலை சம்பந்தப்படுத்தி விவாதங்கள் எழுந்துள்ளன.

காஷ்மீரில் இந்தியாவின் ஆக்கிரமிப்பு மற்றும் உறுதிக்குப் பின்னால் இஸ்ரேலுக்கு பெரிய பங்கு இருப்பதாக பாகிஸ்தானில் பேசப்படுகிறது.

பாகிஸ்தானுக்கும் இஸ்ரேலுக்கும் ராஜீய உறவுகள் இல்லை. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக முஸ்லீம் நாடுகளின் ஆதரவை பெறவில்லை என்ற ஆதங்கம் பாகிஸ்தானுக்கு இருக்கும் நிலையில், இஸ்ரேலுடனான இராஜீய உறவுகளை பாகிஸ்தான் ஏன் மீட்டெடுக்கக்கூடாது என்று விவாதிக்கப்படுகிறது.

மறுபுறம், இந்தியாவுக்கு அரபு நாடுகளுடன் நல்ல உறவு இருப்பதோடு, இஸ்ரேலுடன் ஆழமான நட்பும் உள்ளது.

வியாழக்கிழமை இந்த விவாதத்தை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெளிவுபடுத்தியது. “இஸ்ரேலுடனான எங்கள் கொள்கை மிகவும் தெளிவாக உள்ளது, அதில் எந்த மாற்றமும் இருக்காது” என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் டாக்டர் முகமது ஃபைசல் தெரிவித்தார்.

பாகிஸ்தான் இன்றுவரை இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லை. முஷரப்பின் ஆட்சியில், பாகிஸ்தான் இஸ்ரேலுடன் ராஜீய உறவுகளை உருவாக்க முயன்றது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மெஹ்மூத் குரேஷி, இஸ்ரேல் வெளியுறவு அமைச்சரை துருக்கியில் சந்தித்தார்.

இருப்பினும், இந்த முயற்சிக்கு பாகிஸ்தானில் பரவலான எதிர்ப்பு இருந்ததால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.

ஆனால், இஸ்ரேலுடனான உறவுகளைப் பற்றி மீண்டும் பாகிஸ்தான் சிந்திக்க வேண்டிய அவசியம் இருப்பதாக தற்போது பேசப்படுகிறது.

காஷ்மீரில் அண்மையில் ஏற்பட்ட நெருக்கடியில் அடுத்து என்ன என்று விவாதங்கள் எழுந்த நிலையில், இந்த யோசனையும் முன்வைக்கப்படுகிறது.

பாகிஸ்தானின் முன்னணி செய்தித்தாளான, தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் வியாழக்கிழமையன்று எழுதிய தலையங்கத்தில், ’இஸ்ரேல் செய்வது போன்றே இந்தியாவும் ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறது’ என்று குறிப்பிட்டிருந்தது.

“இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பாகவும், பாதுகாப்பு தொடர்பாகவும் பல ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன.

உளவுத்துறை தகவல்களைப் பகிர்ந்துக் கொள்வது மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக இரு நாடுகளிலும் கூட்டு பயிற்சி மேற்கொள்வது குறித்து இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. இஸ்ரேல் அதிநவீன தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு கொடுத்துள்ளது.

_108576451_5abcba9b-d08e-4408-b637-fca0653b62d3

“இந்திய உளவு அமைப்பான ரா மற்றும் இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாட் இடையே பல தசாப்தங்களாக நல்லுறவு நிலவுகிறது.

இது முஸ்லீம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திவிடக்கூடாது என்று இந்தியா நினைப்பதால் இரு நாடுகளின் பரஸ்பர உறவுகள் எப்போதும் ரகசியமாகவே இருந்தன.

ஆனால் பாஜக அரசு வந்ததிலிருந்து நிலைமை மாறிவிட்டது. பிரதமர் மோதியும் நெதன்யாகுவும் நெருக்கமாக இருக்கின்றனர்,

ஒருவருக்கொருவர் நண்பர்கள் என்று பரஸ்பரம் அழைத்துக் கொள்கின்றனர். அதோடு, இந்திய கமாண்டோக்களுக்கும் இஸ்ரேலில் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.

_108576453_bc6a2d68-0bd5-45c7-9606-947ee6bf8ecc2017 அக்டோபர் 31ஆம் தேதியன்று, ஜம்மு-காஷ்மீரில் உள்ள உத்தம்பூர் ராணுவ தளத்திற்குச் சென்றார் இஸ்ரேல் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் யாகோவ் பராக். இங்கு, ஜெனரல் யாகோவ் இந்திய ராணுவ அதிகாரிகளிடம் பேசினார்.

அப்போது அவருடன், அவரது மனைவியும் புதுடெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரக அதிகாரிகளும் அங்கு இருந்தனர். இந்தப் பயணம், இரு நாடுகளின் ராணுவ நலன்களுடன் தொடர்புடையது என்று பின்னர் கூறப்பட்டது.

இந்த சுற்றுப்பயணம் பாகிஸ்தானின் கவனத்தை ஈர்த்தது. பாகிஸ்தான் ஊடகங்களும், இதற்கு அதிக கவனம் அளித்தன.

காஷ்மீரில் இந்தியா சமீபத்தில் எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் பாகிஸ்தான் தொடர்பான மோதி அரசாங்கத்தின் அணுகுமுறையும், கொள்கையும் மாறியதில் இஸ்ரேலின் பங்கு ஏதும் இருக்கிறதா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இந்த கேள்விக்கு பதிலளிக்கும் பாதுகாப்பு நிபுணர் ராகுல் பேடி, “இந்தியா மற்றும் இஸ்ரேலின் உறவு மிகவும் பழமையானது, ஆனால் இப்போது இரு நாடுகளும் வெளிப்படையாக அதை வெளிகாட்டுகின்றன.

இஸ்ரேல் இந்தியாவுக்கு தொழில்நுட்பங்களை கொடுக்கிறது. காஷ்மீரில் வேலி அமைப்பதில் இஸ்ரேலின் தொழில்நுட்ப உதவிகள் கணிசமானது.

இந்தியா இஸ்ரேலைப் பின்பற்றுகிறது என்று கூற முடியாது, ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு நன்றாகவே இருக்கிறது. இந்தியாவுக்கு இஸ்ரேலில் இருந்து முக்கியமான உளவுத்துறை தகவல்கள் கிடைக்கின்றன”.

“வாஜ்பேயி ஆட்சிக் காலத்தில் கார்கில் போர் நடைபெற்ற போது இஸ்ரேலின் உதவி கிடைத்தது. பாஜக அரசு ஆட்சிக்கு வரும்போது, இஸ்ரேலுடனான இந்தியாவின் ஒத்துழைப்பு அதிகரிக்கிறது.

மோதி ஆட்சியில் இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.

இஸ்ரேல் போர் விமானங்களை தயாரிப்பதில்லை, பீரங்கிகளை தயாரிக்கிறது, ஆனால் ஏற்றுமதி செய்யாது. இஸ்ரேலில் இருந்து ஏவுகணை மற்றும் ரேடார் அமைப்புகளை இந்தியா பெற்றுக்கொள்கிறது.

பாலகோட்டில் இந்தியா பயன்படுத்திய குண்டுகள் இஸ்ரேலிய தயாரிப்புகளே. இஸ்ரேலிய உபகரணங்கள் இன்னும் வரவில்லை. அடுத்த சில வாரங்களில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீண்டும் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். எதிர்காலத்தில் இரு நாடுகளும் மேலும் நெருங்கும்.

மத்திய கிழக்கில் நடந்த போர்களின்போது அங்கு பணியாற்றிய பிரபல அமெரிக்க பத்திரிகையாளர் ராபர்ட் ஃபிஸ்க், தி இன்டிபென்டன்ட் பத்திரிகையில் பிப்ரவரி 2019 இல் எழுதிய கட்டுரையில், பாகிஸ்தான் மற்றும் காஷ்மீருக்கு எதிராக இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவுகள் காணப்பட்டுள்ளன என்று எழுதியிருந்தார்.

ராபர்ட் ஃபிஸ்க் இவ்வாறு எழுதியிருக்கிறார்: “இதை முதலில் கேட்டபோது, காசாவில் அல்லது சிரியாவில் இஸ்ரேல் நடவடிக்கை எடுத்தது போல உணர்ந்தேன்.

பயங்கரவாத முகாம்களின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி, பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் அழிக்கப்பட்டு பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

அப்போது தான் பாலகோட் என்ற இடத்தின் பெயரைக் கேட்டேன். இந்த இடம் காசாவிலோ, சிரியாவிலோ அல்லது லெபனானிலோ இல்லை என்றும், அது பாகிஸ்தானில் இருக்கிறது என்பதும் புரிந்தவுடன்தான் எனக்கு உண்மை நிலை தெரிந்தது” என்கிறார் அவர்.

“புதுடெல்லி பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து இரண்டாயிரத்து ஐநூறு மைல் தூரத்தில் டெல் அவிவ்வில் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகம் இருக்கிறது.

ஆனால் இரு நாடுகளின் நெருக்கத்துக்கும் பல காரணங்கள் உள்ளன. இந்தியாவின் ஆளும் கட்சியான பாஜக அரசுடன், இஸ்ரேல் நெருக்கமாக உள்ளது.

இது அரசியல் ரீதியாக ஆபத்தானது. இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களுக்கான மிகப்பெரிய சந்தையாக இந்தியா மாறிவிட்டது.

பாகிஸ்தான் மீது, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கு எதிரான தாக்குதலில், இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ரஃபேல் ஸ்பைஸ் -2000 ஸ்மார்ட் குண்டை இந்திய விமானப்படை பயன்படுத்தியது என்று இந்திய பத்திரிகைகளில் செய்தி வெளியானது தற்செயல் நிகழ்வு அல்ல என்று ஃபிஸ்க் குறிப்பிடுகிறார்.

2017 இல் இந்தியா இஸ்ரேலின் மிகப்பெரிய ஆயுத வாடிக்கையாளராக இருந்தது என்று ராபர்ட் ஃபிஸ்க் தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.

இந்த ஆண்டு வான் பாதுகாப்பு, ரேடார் அமைப்புகள் மற்றும் வான் முதல் தரை வரை இலக்கு வைத்து ஏவும் ஏவுகணைகள் ஆகியவற்றிற்காக இந்தியா சுமார் 64.54 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

_108576585_1bd84463-9dd8-4f7c-a20a-e7a2f9923de1

இந்த ஆயுதங்கள் அனைத்தையும் பாலத்தீனியர்களுக்கு எதிராகவும் சிரியாவிலும் இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது. இஸ்ரேல் இந்திய கமாண்டோக்களுக்கு யுத்த வலயத்தில் போராடுவது பற்றியும் பயிற்சி அளித்துள்ளது.

2008 ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாதத் தாக்குதலை நரேந்திர மோதி முன்னிலையில் குறிப்பிட்டுள்ள நெத்தன்யாகு, இந்தியாவும் இஸ்ரேலும் பயங்கரவாதத்தின் வலியை அனுபவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நட்பில் இஸ்லாம் என்பது முக்கியமான மையப்புள்ளியாக இருப்பதாக நம்பப்படுகிறது. ராபர்ட் ஃபிஸ்க் இதை முஸ்லிம் எதிர்ப்பு நட்பு என்றும் கூறுகிறார்.

டெல் அவிவில் இருக்கும் பத்திரிகையாளர் ஹரேந்திர மிஸ்ரா, இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்பு பரஸ்பர நலன்கள் சார்ந்தது.

இஸ்லாமிய எதிர்ப்பின் அடிப்படையிலானது அல்ல என்று நம்புகிறார். “இந்தியா, இஸ்லாமிய நாடுகளுடன் ஆழமான நட்பு கொண்டுள்ளது” என்று அவர் கூறுகிறார்.

இஸ்ரேலுடனும் நல்ல நட்பும் உள்ளது. இது மதப் பிரச்சனையாக இருந்திருந்தால், இந்தியாவின் நட்பு ஏதாவது ஒரு தரப்புடன் மட்டுமே இருந்திருக்கும்.

இஸ்ரேலின் நட்பு கூட இரானைத் தவிர மற்ற முஸ்லிம் நாடுகளுடன் அதிகரித்து வருகிறது என்பதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

இஸ்ரேலுடன் உறவுகளை கட்டியெழுப்பலாமா வேண்டாமா என்பது குறித்து பாகிஸ்தான் இன்னும் முடிவு செய்யவில்லை.

இஸ்ரேலுடன் நெருங்கி, அதன் மூலம் இஸ்ரேலுடனான இந்தியாவின் நட்பைக் குறைக்க பாகிஸ்தான் விரும்புகிறது என்றும் ஹரேந்திர மிஸ்ரா நம்புகிறார், ஆனால் பாகிஸ்தான் மக்கள் இதை நடக்க விடவில்லை.

இஸ்லாமிய நாடுகள் தன்னை அதிக அளவில் அங்கீகரிக்க வேண்டும் என்று இஸ்ரேல் விரும்புகிறது, அது பாகிஸ்தானுக்கும் நெருக்கமாக வர விரும்புகிறது. ”

எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நெதன்யாகு இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகவும், அப்போது அவர் காஷ்மீர் குறித்தும் பேசுவார் என்றும் மிஸ்ரா கூறுகிறார்.

370 வது பிரிவை ரத்து செய்தது தொடர்பாக இஸ்ரேல் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ கருத்தையும் வெளியிடவில்லை, ஆனால் அங்குள்ள ஊடக செய்திகளில், இது இந்தியாவின் துணிச்சலான நடவடிக்கை என்று விவரிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

*