கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல!

0
271

அரசியல் ஆதாயம் தேடுவதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எந்தளவுக்கும் இறங்குவார் என்பதையே, அவரின் சமீபகால அவசர நடவடிக்கைகள் காட்டுகின்றன.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. மீண்டும் ஆட்சிக்கு வரத் துடிக்கும் ட்ரம்பின் மற்றுமொரு சொதப்பலான முயற்சிதான் கிரீன்லாந்தை விலைக்கு வாங்க நினைத்தது.

அமெரிக்காவின் பிரபலமான அதிபர்கள் பட்டியலில் இடம்பெற நினைக்கும் அவரின் பேராசையை, சுக்குநூறாக உடைத்தெறிந்துவிட்டனர் கிரீன்லாந்து மக்கள்.

டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிரீன்லாந்தை விலைக்கு வாங்கும் விருப்பத்தை, ஆகஸ்ட் 15-ம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளிப்படுத்தினார்.

`இந்த ரியல் எஸ்டேட் டீல், டென்மார்க்கின் நிதிச்சுமையைக் குறைக்கும்; கிரீன்லாந்தின் பாதுகாப்பைப் பலப்படுத்தும்’ என்றெல்லாம் அறிவுரை வழங்கினார்.

ஆனால் டென்மார்க், ‘நீங்கள் நாடுகளையும் மக்களையும் விலைக்கு வாங்கிய காலம் மலையேறிவிட்டது.

கிரீன்லாந்தை விற்பதாக எவரும் சொல்லவில்லை. இது அபத்தமான ஆசை’ என்று பதிலடி கொடுத்தது.

ஆத்திரத்தில் கொந்தளித்த ட்ரம்ப், ‘‘இந்தப் பதில், விரும்பத்தகாதது; மோசமானது’’ என்றார்.

greenland

ட்ரம்பின் முரட்டுத்தனமான இந்தச் செயலுக்காக, அமெரிக்கர்கள் பலரும் மன்னிப்பு கேட்டார்கள்.

‘இத்துடன் நிறுத்துங்கள் ட்ரம்ப்’ என்ற குரல், அமெரிக்க நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது.

ட்ரம்ப்பின் சுடுசொற்கள், இரு நாடுகளின் உறவில் விரிசலை ஏற்படுத்திவிட்டன.

இது ட்ரம்ப்பின் பேராசையாக விமர்சிக்கப் பட்டாலும் உண்மையில் இது அமெரிக்க நிர்வாகத்தின் நீண்டகாலக் கனவு.

ராஜதந்திரம், பாதுகாப்பு என்ற போர்வையில், தேசத்தை விஸ்தரிக்கும் அமெரிக்காவின் முயற்சி, 1800-களிலேயே தொடங்கிவிட்டது.

1803-ல் நெப்போலியனுக்கு 15 மில்லியன் டாலர் கொடுத்து, பிரான்ஸிடமிருந்து லூசியானாவை விலைக்கு வாங்கினார் முன்னாள் அமெரிக்க அதிபர் தாமஸ் ஜெஃபர்சன். 1848-ல், மெக்ஸிகோவை மிரட்டி அந்த நாட்டின் பகுதிகளை வளைத்துப்போட்டது அமெரிக்கா.

அவைதான் இன்றைய கலிஃபோர்னியா, நெவாடா, உடா, அரிசோனா, கொலராடோ, புதிய மெக்ஸிகோ மற்றும் வயமிங் மாகாணங்கள்.

முன்னாள் அதிபர் ஆன்ட்ரூ ஜான்சன், ரஷ்யாவிடமிருந்து அலாஸ்காவை 1867-ல் வாங்கி அமெரிக்காவுடன் இணைத்தார்.

kotha

அடுத்து க்யூபா, பனாமா தீவுகளையும் கபளீகரம் செய்ய அமெரிக்கா முயற்சிசெய்தது. அமெரிக்காவுக்கு மரண அடி கொடுத்தது க்யூபா.

தற்போது, கிரீன்லாந்தை தன் பணபலத்தால் வளைத்துப்போடப் பார்க்கிறது அமெரிக்கா.

அட்லாண்டிக் கடல் பகுதியில் ரஷ்யாவின் ஆதிக்கத்தைத் தடுக்கவும், சீனாவின் வர்த்தக ஆக்கிரமிப்பைக் கட்டுப்படுத்தவும் அமெரிக்காவுக்கு கிரீன்லாந்து தேவை.

மற்றொரு காரணம், அங்கே கொட்டிக் கிடக்கும் கனிமவளங்கள். அதிலும் எலெக்ட்ரானிக் உதிரிபாகங்கள் தயாரிப் புக்கு முக்கியமாகத் தேவைப்படும் `ரேர் எர்த்’ (rare earth) கனிமங்கள்.

தற்போது, அமெரிக்காவுக்கு இந்தச் சிறப்பு உலோகங்களை சீனாதான் சப்ளை செய்கிறது.

ஆஸ்திரேலியாவும் கிரீன்லாந்தின் சுரங்கங்களில் முதலீடு செய்ய முன்வந்ததால், அமெரிக்கா உஷாரானது.

எனவே, `கிரீன்லாந்தைத் துண்டுதுண்டாகக் குத்தகைக்கு எடுப்பதை விட, ஒட்டுமொத்தமாக விலைக்கு வாங்கினால் என்ன?’ என்ற எண்ணம்தான் ட்ரம்ப்பின் திட்டம்.

ஏற்கெனவே, 1946-ல் 100 மில்லியன் டாலருக்கு கிரீன்லாந்தை டென்மார்க்கிடம் விலைபேசினார் அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமன். அதற்குப் பதிலாக அலாஸ்காவின் ஒரு பகுதியை விட்டுத்தருவதாகவும் ஆசை காட்டினார்.

அன்று முதல் டென்மார்க்கின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.

முதலில் ட்ரம்ப்பின் விருப்பத்தைக் கேள்விப்பட்டபோது, டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து மக்கள் யாரும் கோபப் படவில்லை.

முட்டாள்கள் தினத் தகவலாகவே பார்த்தார்கள். ‘கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல’ என்று மட்டும் கூறி ஒதுங்கியது டென்மார்க். கோபத்தில் கொந்தளித்த ட்ரம்ப், தனது டென்மார்க் விஜயத்தை ரத்துசெய்தார்.

‘‘ட்ரம்பின் பயண ரத்து, எங்களுக்கு ஆச்சர்யம். அதைத் தவிர பேச ஒன்றுமில்லை’’ என்று பெருந்தன்மை யுடன் கூறினார் டென்மார்க் ராணி இரண்டாம் மார்கிரெட்.

‘‘கிரீன்லாந்து, டென்மார்க்குக்கு உடையதல்ல; அந்நாட்டு மக்களுடையது.

வேடிக்கையைத் தவிர்த்துப் பேசவேண்டுமென்றால், நாங்கள் அமெரிக்காவுடன் நெருங்கிய உறவை வைத்துக்கொள்ளவே விரும்புகிறோம்’’ என்றார் டென்மார்க் பிரதமர் மேட் ஃப்ரெட்ரிக்சன். ‘‘அமெரிக்காவில் எந்தப் பகுதியாவது விற்பனைக்கு இருக்கிறதா?’’ என்று கிண்டலடித்தார் டென்மார்க் எம்.பி-யான ராஸ்மஸ் ஜர்லோவ்.

அமெரிக்காவின் பாதுகாப்புவாதமும், ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ என்ற ட்ரம்பின் கோட்பாடும் இன்னும் எத்தனை நேசநாடுகளின் உறவைக் குலைக்கப் போகின்றனவோ தெரியவில்லை.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.