`அம்மாவை அப்பா கத்தியால் குத்தினார்; ரத்தம் வந்தது’ ஆனாலும் அப்பா விடவில்லை- 5 வயது மகன் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்

0
157

சென்னை நீலாங்கரையில் 5 வயது மகனின் கண்முன்னால் அவரின் அம்மா கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல் நிலையத்தில் குழந்தை அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலையாளியைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை, செஞ்சி, மேலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரின் சகோதரி அகிலா (32). இவருக்கும் சென்னையைச் சேர்ந்த தனசேகரனுக்கும் 2013-ம் ஆண்டில் திருமணம் நடந்தது.

திருமணமான 6 மாதத்திலேயே கணவன், மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் குணசேகரன் வீட்டுக்கு அகிலா வந்துவிட்டார்.

தற்போது குணசேகரனும் அகிலாவும் சென்னை பெருங்குடி பகுதியில் குடியிருந்து வந்தனர்.
asureeakila and her husband dhansekar

அகிலாவுக்கு, அகிலேஷ் (5) என்கிற மகன் உள்ளார். இந்தநிலையில் அகிலாவின் வீட்டுக்கு வரும் தனசேகரன், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், சகோதரிக்காகக் குணசேகரன் திருமணம் செய்யாமல் இருந்துள்ளார். கடந்த 25-ம் தேதி அகிலா, அகிலேஷை அழைத்துக்கொண்டு தனசேகரன் குடியிருக்கும் நீலாங்கரை திருவள்ளூர் நகருக்கு வந்துள்ளார்.

அங்கு, அகிலேஷ் படிப்பு செலவுக்குப் பணம் வேண்டும் என்றும் தன்னுடைய தங்க நகைகளைத் தரும்படியும் தனசேகரனிடம் அகிலா கேட்டுள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த தனசேகரன், அகிலாவைக் கத்தியால் தாக்கியிருக்கிறார். அப்போது அருகில் இருந்த அகிலேஷ், `அப்பா, அம்மாவை ஒன்றும் செய்யாதீங்க, அம்மா அழறாங்க’ என்று கூறியுள்ளார்.

ஆனால், அகிலாவின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தனசேகரன் தப்பி ஓடிவிட்டார். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அகிலாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மேலும், இந்தத் தகவலை நீலாங்கரை காவல் நிலையத்துக்கும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

அகிலாவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர். இதையடுத்து அகிலாவின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது கொலையை நேரில் பார்த்த 5 வயது சிறுவன் அகிலேஷிடம் போலீஸார் விசாரித்தனர்.

அப்போது அவர் மழலைமொழியில், `அம்மாவை அப்பா கத்தியால் குத்தினார். அப்போது அம்மா சத்தம் போட்டாங்க, ஆனாலும் அப்பா விடவில்லை. ரத்தம் வந்தது’ என்று கூறினார்.

இதையடுத்து மனைவியைக் கொலை செய்த குற்றத்துக்காகத் தனசேகரன் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரைத் தேடிவருகின்றனர்.

asutrew
akila

இந்தச் சம்பவம் தொடர்பாக அகிலாவின் சகோதரர் குணசேகரன், நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதில், “தன்னுடைய சகோதரி அகிலாவை அடிக்கடி சந்திக்க வரும் தனசேகரன், வரதட்சணையாகப் பணம் கேட்டு மிரட்டிவந்தார்.

சம்பவத்தன்றுகூட பீச்சுக்கு அகிலாவை தனசேகரன் அழைத்தார். அப்போது நான், `அங்கு நீ போக வேண்டாம்’ என்று கூறிவிட்டு வெளியில் சென்றேன்.

ஆனால், அகிலா, தனசேகரனைச் சந்திக்கச் சென்றுள்ளார். அப்போதுதான் ஈவு இரக்கமின்றி மகன் கண்முன்னால் அகிலாவை கொலை செய்துள்ளார் தனசேகரன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தனசேகரன் குறித்து இன்னொரு தகவல் விசாரணையின்போது போலீஸாருக்குத் தெரியவந்துள்ளது.

அதாவது, எங்கும் வேலைக்குச் செல்லாத தனசேகரன், திருமணத்தின்போது கணினி முன்பு அமர்ந்திருக்கும் புகைப்படத்தைக் காட்டி, ஐ.டி நிறுவனத்தில் வேலைபார்த்துவருகிறேன் எனக் கூறியுள்ளார்.

அதை நம்பித்தான் அகிலாவை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். ஆனால், திருமணத்துக்குப் பிறகு தனசேகரன் வேலைக்குச் செல்லவில்லை.

அதைப் பற்றி அகிலா கேட்டபோது, `நீ வேலை செய்து என்னைக் காப்பாற்று’ என்று தனசேகரன் கூறியதாக அகிலாவின் உறவினர்கள் தெரிவித்தனர்.

அம்மாவை அப்பா கத்தியால் குத்தினார். அப்போது அம்மா சத்தம் போட்டாங்க, ஆனாலும் அப்பா விடவில்லை. ரத்தம் வந்தது.

கொலை சம்பவத்தை நேரில் பார்த்த அகிலேஷ், அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை என்று உறவினர்கள் தெரிவித்தனர். நீலாங்கரையில் நடந்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.