அமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்!: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154)

0
859

அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோர் கொல்லப்பட்டதை அடுத்த ஒரு கதை பரவியது.

பிரேமதாசாவும், புலிகளும் சேர்ந்து தான் அமிர்தலிங்கத்தை தீர்த்துக் கட்டினார்கள் என்றும், அமிர் கொல்லப்படப் போகிறார் என்பது பிரேமதாசாவுக்கு முன்னரே தொிந்திருந்தது எனவும் கதை அடிபட்டது.

அக் கதையில் எவ்வித உண்மையும் இருக்கவில்லை. அமிர் கொலையான செய்தி பிரேமதாசாவுக்கும் முதலில் அதிர்ச்சியாகவே இருந்தது.

எனினும் அக் கொலைக்கு புலிகள் தொிவித்த மறுப்பை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுமாறு அரச வெகுஜன தொடர்பு சாதனங்களுக்கு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து உத்தரவுகள் பறந்தன.

கொலையில் புலிகளுக்கு சம்பந்தம் இருப்பது நிரூபிக்கப்பட்டால், தன்மீதும் பழி விழும் என பிரேமதாசா நினைத்தார்.

அது மட்டுமல்லாமல், புலிகளின் உதவி பிரேமதாசாவுக்கு அவசியப்பட்ட சந்தர்ப்பம் அது.

அதனால் புலிகளுடன் அரசு நடத்தும் பேச்சுகளுக்கு அமிர் கொலைச் செய்தி குந்தகமாக அமைந்துவிடக்கூடாதே என்றும் பிரேமதாசா கவலைப்பட்டார்.

1

மேற்கண்ட காரணங்களால் அமிர் கொலைக்கு புலிகள்தான் காரணம் என்பதை வெளியே தொியாமல் பிரேமதாசாவுக்கும் அக்கறை இருந்தது மட்டும்தான் உண்மை.

அமிர், யோகேஸ் கொலையில் நேரடியாக ஈடுபட்டவர்கள் எவரும் உயிருடன் பிடிக்கப்படாமல் போனதும் அரசாங்கத்திற்கு நிம்மதியான விடயம்.

விசு, அலோசியஸ் இருவருமே உடனடியாக இறந்து போயினர். அமிர் வீட்டின் ‘கேட்’ அருகே வைத்து சுடப்பட்ட சிவகுமாருக்கு மட்டும் உயிர் இருந்தது. உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு சென்றிருந்தால் அவர் உயிர் தப்பியிருக்க வாய்ப்பும் இருந்தது.

ஆனால், அவருக்கு அருகே உடனே செல்வதற்கு யாருக்கும் துணிச்சல் இருக்கவில்லை. சம்பவம் அறிந்து முதலில் ஸ்தலத்துக்கு வந்த பொலிஸ் குழுவினருக்கு ஒரு புலி உயிருடன் இருக்கிறார் என்று யாரோ சொல்லிவிட்டனர்.

வந்தவழியே ஜீப் பின்னோக்கிச் சென்றது. புலி ஒன்று உயிருடன் இருக்கிறது என்று அந்தச் சுற்றுவட்டாரத்திலும் கிலி பரவிட்டது.

அதன்பின்னர் வந்த பொலிசார்தான் பலியான உடல்களை நெருங்கினார்கள்.

எப்படியோ கொலையில் நேரடியாக ஈடுபட்டவர்கள் எவரும் பிடிபடாமல் போனது அரசுக்கும், புலிகளுக்கும் உடனடியாகப் பயன் அளித்தது.

uma_maheswaran

Uma Maheswaran

மௌனம்

அமிர் கொலையைக் கண்டித்து பரவலான கண்டனங்கள் எழத் தொடங்கின.

அமிர்தலிங்கம் கொலையான செய்தியைக் கேள்விப்பட்டதும், புல்லர்ஸ் வீதி இல்லத்துக்கு முதலில் விரைந்து சென்றவர் புளொட் இயக்கத் தலைவர் உமா மகேஸ்வரன்

முதலில் கண்டன அறிக்கை வெளியிட்டவர் வரதராஜப்பெருமாள்.

மக்களால் நிராகரிக்கப்பட்டவர், பின்கதவு வழியாக பாராளுமன்றத்துக்குச் சென்றவர் என்றெல்லாம் பிரசாரம் செய்தவர் பெருமாள்.

கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டுக் கொண்டே அமிர்தலிங்கத்தை தோற்கடிக்க அயராது உழைத்தவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினர்.

அதே ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கமும், பெருமாளும் “அமுதரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. தமிழர்களின் மூத்தபெரும் தலைவரை பறிகொடுத்து விட்டோம்” என்று அறிக்கை விட்டிருந்தனர்.

ஒருவர் உயிருடன் உள்ளபோது இனத்தின் விமோசனத்துக்கு எதிரானவர் என்று கூறுவதும், அவர் இறந்தபின்னர் இனத்தின் தலைவர் என்று கூறுவதும் கேடு கெட்ட சம்பிரதாயம்.

அமிர் கொலையை தங்களுக்கு சாதகமான அரசியலாக்கிக் கொள்ள ஈ.பி.ஆர்.எல்.எஃப். விரும்பியது.

அமிரின் உடல் வடக்கு -கிழக்கு மாகாணசபை செயலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று பெருமாள் அறிவித்தார்.

இத்தகைய அஞசலிக் கூட்டங்களால் மக்களிடம் தோன்றும் அனுதாபம், புலிகளுக்கு எதிராகத் திரும்பும் என வரதராயப்பெருமாள் எண்ணியிருந்தார்.

1989ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்திற்காக யாழ்ப்பாணம் சென்ற அமிர்தலிங்கத்தை அசோகா ஹொட்டலைவிட்டு வெளியே செல்லவே முடியாமல் தடுத்துவைத்து, திருப்பி அனுப்பியது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.

அமிர் உயிருடன் இருந்தபோது யாழ்ப்பாண மண்ணை மிதிக்க விடாதவர்கள், உயிர் இழந்தபின்னர் உடலைக் கொண்டு செல்ல முன்வந்தனர்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். , புளொட், ஈ.பி.டி.பி, ரெலோ உட்பட பல அமைப்புக்கள் அமிர் கொலைக்கு புலிகளே காரணம் என்று அறிக்கை விட்டிருந்தன.

ஆனால், தமிழர் விடுதலைக் கூட்டணி மட்டும் கொலைக்கு யார் காரணம் என்பதைப் பற்றி மூச்சுக்காட்டவில்லை.

அதுபற்றிக் கேட்டபோது ஒரு மூத்த உறுப்பினரான பிரமுகர் கூறிய பதில்: “அமிர் போய்விட்டார். கவலைதான். அதற்காக அவர் பின்னால் எங்களையும் போகச் சொல்கிறீர்களா?

உமாவின் அறிக்கை

புலிகள் இயக்கத்துக்குள் பிரச்சனை ஏற்பட்டு உமா குழுவினர் தனியாக இயங்கியதை இத் தொடரின் ஆரம்ப அத்தியாயங்களில் விபரித்திருந்தேன்.

உமா குழுவில் முக்கிய தலைவராக இருந்தவர் சுந்தரம். புதிய பாதை பத்திரிகையின் மூலகர்த்தா. சுந்தரத்தை யாழ்ப்பாணத்தில் சித்ரா அச்சகத்தில் வைத்து புலிகள் சுட்டுக் கொன்றனர். இச் சம்பவங்களும் முன்னர் கூறப்பட்டதுதான்.

சுந்தரத்தைக் கொலை செய்யுமாறு பிரபாகரனை தூண்டிவிட்டவர் அமிர்தலிங்கம் என்று தன் வாயாலேயே கூறிவர் உமா மகேஸ்வரன்.

அக் குற்றச்சாட்டு உண்மையானால் தன் சக தோழனை கொலை செய்வித்த அமிர்மீது உமாவுக்கு அனுதாபம் ஏற்படவே வழியிருக்காதல்லவா.

உமா மகேஸ்வரன் தனது கைப்பட எழுதி அமிர் மறைவுக்காக வெளியிட்ட அறிக்கை இதுதான்:

“தமிழ் மக்களிடம் விடுதலை வேட்கையை ஏற்றிவைத்த தலைவர் அமிர்தலிங்கம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

மிக நீண்டகாலமாக தமிழ் மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் தங்களை முழுமையாக இணைத்துக் கொண்டவர்கள் அமரர்கள் அ.அமிர்தலிங்கம், வெ.யோகேஸ்வரன். இருவரது இழப்பும் தமிழினத்துக்கு ஈடு செய்ய முடியாத போிழப்பாகும்.”

அநாகரிகச் செயல்

மட்டக்களப்புக்கு விமானம் மூலமாக அமிரின் உடல் கொண்டு செல்லப்பட்டது. மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் கறுப்பு, வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன.

மட்டக்களப்பில் அஞ்சலி முடிந்தபின்னர் அமிர், யோகேஸ் ஆகியோரின் உடல்கள் திருமலைக்கு கொண்டு செல்லப்பட்டன. திருமலையில் உள்ள வடக்கு-கிழக்கு மாகாணசபை செயலகத்தில் பூத உடல்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தன.

திருமலை முற்றவெளி மைதானத்தில் இருந்து ஊர்வலமாக மாகாணசபை செயலகத்திற்கு உடல்கள் கொண்டு செல்லப்பட்டன

மாகாணசபை செயலக வாயிலில் மாகாணசபை தொண்டர்படை, இந்தியப்படை ஆகியன அணிவகுப்பு மரியாதை வழங்கின. பெரும் திரளான மக்கள் இறுதி அஞ்சலி தொிவிக்கத் திரண்டிருந்தனர்.

ஜனாதிபதி பிரேமதாசாவும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக திருமலைக்கு சென்றிருந்தார்.

பிரேமதாசா வரப்போகிறார் என்ற தகவல் அறிந்ததுமே, அவர்மீது தாக்குதல் நடத்த ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்க பிரேமதாசா முக்கியஸ்தர்கள் சிலர் திட்டமிட்டனர்.

அதில் முன்னின்றவர் திருமலைப் பொறுப்பாளராக இருந்த ஜோச். மக்களோடு மக்களாக நின்று பிரேமதாசாவுக்கு எதிராக கோஷம் போடுவதற்கும், கற்களையும், செருப்புக்களையும் வீசுவதற்கும் தங்கள் ஆட்களை ஏற்பாடு செய்தார் ஜோச்.

திருமலை முற்றவெளி மைதானத்தில் பிரேமதாசா வந்திறங்கியதுமே அவருக்கு எதிராக கூச்சல்கள் எழுந்தன. கற்களும், செருப்புக்களும் பிரேமதாசாவை நோக்கி வீசப்பட்டன.

இந்தியப்படையினர் பிரேமதாசாவைச் சூழ்துகொண்டு பாதுகாப்பளித்தனர்.

எனினும் இத்தகைய சலசலப்புக்கள் பிரேமதாசாவுக்கு புதியவை அல்ல. அவரே இது போன்ற எத்தனையோ வேலைகளை செய்வித்துப் பழக்கப்பட்ட, பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதி.

அஞ்சலி செலுத்தாமல் பிரேமதாசா திரும்பிச் சென்றுவிடுவார் என்றுதான் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினர் நினைத்தனர்.

piremathasaஆனால், மாகாணசபை செயலகத்திற்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்திவிட்டுத்தான் பிரேமதாசா திரும்பிச் சென்றார்.

மக்கள் உணர்ச்சிவசப்பட்டுவிட்டது போன்றும், அவர்களைச் சமாதானப் படுத்துவது போன்றும் வரதராஜப் பெருமாள் சின்னதாக ஒரு நாடகம் ஆடினார். கல் ஒன்று தன்மீது பட்டு, தனக்கும் காயம் ஏற்பட்டதாக பத்திரிகையாளர்களிடம் கூறினார் வரதராஜப் பெருமாள்.

திருமலையில் அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் பூத உடல்கள் யாழ்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

பலாலி விமான நிலையத்தில் இருந்து ஊர்வலமாக பூத உடல் தாங்கிய இரதங்கள் கொண்டு செல்லப்பட்டன.

வீதிகளின் இருமருங்கிலும் வாழைமரங்களும் தோரணங்களும், கறுப்பு வெள்ளைக் கொடிகளும் அசைந்தாடிக் கொண்டிருந்தன. சந்திகள் தோறும் ஒலிபெருக்கிகள் மூலம் சோக இசை ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.

அமிர்தலிங்கத்தின் பூத உடல் மூளாயில் உள்ள அவரது இல்லத்திலும், யோகேஸ்வரனின் பூத உடல் அவரது நல்லுர் இல்லத்திலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தன.

யாழ் நகர் எங்கும் கடைகள், அலுவலகங்கள் யாவும் மூடப்பட்டு சோகமான சூழ் நிலையே எங்கும் காணப்பட்டது.

TamilNews_May30_2019__246288478374482கருணாநிதி அதிர்ச்சி

அப்போது தமிழக முதல்வராக இருந்த, தி.மு.க. தலைவர் மு.கருணாநிதிக்கும் புலிகளுக்கும் இடையே உறவுகள் பலப்பட்டிருந்தது நேரம் அது.

எம.ஜி.ஆர் பதவியில் இருந்தபோது தமிழக அரசினர் விடுதியில் அமிர் தங்க ஏற்பாடு செய்திருந்தார்.

தி.மு.க. பதவிக்கு வந்த பின்னர் அந்த விடுதியை காலி செய்யுமாறு திடீர் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதனால் அமிர் மிகவும் மனம் வருந்தினார். “என்னுடைய பொருட்களைக்கூட ஒழுங்காக கட்டி தரமாட்டார்கள் போல இருக்கிறது” என்று தன்னை சந்திக்கச் சென்றவர்களிடம் வேதனையுடன் கூறினார் அமிர்.

பின்னர் அமிர் கொலையானபோது, அக் கொலைக்கு காரணம் புலிகள் என்பது கருணாநிதிக்கு அறியமுடியாத விஷயமல்ல. ஆயினும் பட்டும் படாமல் ஒரு அறிக்கை வெளியிட்டார் கலைஞர் கருணாநிதி. அந்த அறிக்கை இதுதான்.

“தூய தமிழன் அமிர்தலிங்கமும் அவரது வலது கரமாக விளங்கிய யோகேஸ்வரனும் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது, தமிழ் மக்களின் இதயங்களில் பாய்ந்த வேல்களாகும்.

யார், எந்தக் குழுவினர் இந்தச் செயலில் ஈடுபட்டிருந்தாலும் கண்டிக்கப்படவேண்டிய செயலாகும்.

இலங்கையில் இரத்தக் களரி அடங்குவதற்கு எல்லோரும் சேர்ந்து ஒரு வழி காணவேண்டும். இதில் இந்திய அரசு தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது என்பதே எனது திடமான கருத்தாகும்.” என்று அறிக்கை விட்டிருந்தார்.

D_UfLSqUEAAHSWhபதவிச் சண்டை

அமிர் கொலையான சூட்டோடு சூடாக செய்தி அறிவதற்கு இந்தியாவில் உள்ள செய்தியாளர்கள் முயன்றனர்.

ஆனால், கொழும்புக்கான தொலைபேசி அழைப்பை அவர்கள் பெறமுடியவில்லை. இந்தியாவுக்கான தொலைபேசி இணைப்புக்களை தற்காலிகமாக துண்டித்து வைத்திருந்தது இலங்கை அரசாங்கம்.

அமிர் கொலை தொடபான தகவல்கள் உடனுக்குடன் பரவுவதை தடுப்பதற்காகவே அரசு அவ்வாறு செய்திருந்தது.

அமிர் கொலைக்கு தாம் பொறுப்பில்லை என்று புலிகள் கூறியதை அநேகமானோர் நம்பவில்லை என்பதும் உண்மை.

இதற்கிடையியே இன்னொரு சம்பவம், அமிர்தலிங்கத்தின் பூத உடல் கொழும்பு புல்லர்ஸ் வீதி வீட்டில் வைக்கப்பட்டு இருந்தபோதே, பாராளுமன்றத்தில் காலியான அமிரின் இடத்திற்கு யாரை நியமிப்பது என்ற பிரச்சனை கிளம்பிவிட்டது.

அமிரின் மறைவின் பின்னர் கூட்டணியில் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராஜா. மாவைக்கு தான் எம்.பி.யாக வேண்டும் என்று ஆசை. அவரது ஆசையிலும் நியாயம் இருக்கவே செய்தது.

இயக்கங்களின் அச்சுறுத்தல் காரணமாக கூட்டணித் தலைவர்களாக இருந்த பலர் தாம் உண்டு தங்கள் பாடு உண்டு என்று ஒதுங்கிப் போயினர்.

தமிழ்நாட்டில் சென்னையில் இருந்த கூட்டணி அலுவலகப் பக்கமே தலை வைத்து படுக்காதவர்கள் பட்டியலில், இன்று கூட்டணித் தலைவர்களாக உள்ள வீ.ஆனந்தசங்கரி, நீலன், இரா.சம்பந்தன் ஆகியோாரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

mavai-senathiraja-seithy-2-150-1

மாவை சேனாதிராஜா

அமிர், யோகேஸ், மாவை சேனாதிராஜா போன்றோர்தான் கூட்டணியை அழியாமல் தக்கவைத்துக் கொண்டனர்.

அது மட்டுமல்லாமல், 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் இளைஞர் பேரவையில் இருந்து காசி ஆனந்தன் தேர்தலில் நிறுத்தப்பட்டார். மாவை சேனாதிராஜா, வண்ணை ஆனந்தன் ஆகியோருக்கும் சந்தர்ப்பம் கொடுத்திருக்க வேண்டும் . கொடுக்கவில்லை.

எனவே, அமிரின் காலியான இடத்தை தான் கைப்பற்ற வேண்டும் என்று மாவை நினைத்ததில் தப்பில்லை.

எனினும், மாவை சேனாதிராஜா எம்.பிப் பதவியைப் பெறுவது கூட்டணிக்குள் சில பிரமுகர்களுக்கு பிடித்தமாக இருக்கவில்லை.

எனினும் கூட்டணியின் செயலதிபர் என்ற நிலையில், அடுத்த எம்.பி. யார் என்பதை தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கும் அதிகாரம் மாவை சேனாதிராஜாவின் கையில்தான் இருந்தது.

எனவே, தன்னைத் தானே தேர்ந்தெடுத்து தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் கொடுத்தார் மாவை சேனாதிராஜா. நாடாளுமன்ற உறுப்பினரானார்.

p20aவன்னிப் போர்

இந்தியப் படையினர் புலிகளுக்கும், அரசுக்கும் இடையிலான பேச்சுக்களையிட்டு ஆத்திரம் கொண்டிருந்தனர்.

முல்லைத்தீவில் வீடு வீடாக தேடுதல் வேட்டைகள் நடத்தப்பட்டன. புலிகள் இயக்கத்தின் தலைவர்களைத் தேடியே வேட்டை நடத்தப்பட்டது.

வன்னிக் காடுகளுக்குள் புலிகளை தேடி அழிக்கும் நடவடிக்கையின் முக்கிய தளமாக நித்திகைக்குளம் விளங்கியது. அங்குதான் இந்தியப் படையின் பாரிய முகாம் இருந்தது.

அங்கிருந்துதான் வன்னிக் காடுகளுக்குள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் வழிநடத்தப்பட்டன.

இந்த நித்திகைக்குள முகாமில் 1988 ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சம்பவம் நடை பெற்றது. ‘இந்தியா வீக்’ என்ற பத்திரிகை அதனை 1989 ஜீனில் வெளியிட்டிருந்தது.

நடந்த சம்பவம் இது தான்.

இந்தியப் படை தளபதி கல்கட் நித்திகைக்குள முகாமுக்கு ஹெலிகொப்பரில் சென்று இறங்கினார்.

கல்கட் இறங்கியதுதான் தாமதம் ஹெலி புலிகளின் ரொக்கட் தாக்குதலுக்கு உள்ளானது.

கல்கட் பாய்ந்து பதுங்கு குழிக்கு சென்றார். அவர் வந்த ஹெலி தகர்ந்தது. கல்கட் தப்பியது மாபெரும் அதிஷ்டம்.

தாக்குதல் நடத்திய புலிகள் தப்பிச் சென்றுவிட்டனர்.

(தொடர்ந்து வரும்)
அரசியல் தொடர் அற்புதன் எழுதுவது
தொகுப்பு:கி.பாஸ்கரன்-சுவிஸ்

 

அமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்!!:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் தீர்க்கப்பட்ட வேட்டுகள்!!: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 153)

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.