நொவம்பரில் நாட்டின் அதிபராவேன் – பதுளையில் சஜித் சூளுரை!! -(வீடியோ)

0
117

ஐதேக பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக, பதுளையில் நேற்று பாரிய கூட்டம் நடத்தப்பட்டது.

இங்கு உரையாற்றிய சஜித் பிரேமதாச, நாட்டுக்காக தனது உயிரை அர்ப்பணிக்கத் தயாராக இருப்பதாகவும், வரும் அதிபர் தேர்தலில் தான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும் கூறினார்.

ஐதேகவின் அதிபர் வேட்பாளர் தொடர்பாக முடிவெடுப்பதில் இழுபறிகள் நீடிக்கின்ற நிலையில், கட்சியின் பிரதித் தலைர் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்த அழுத்தம் கொடுக்கும் வகையிலும், அவருக்கான ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலும் பதுளையில் நேற்று பாரிய பேரணி நடத்தப்பட்டது.

அமைச்சர் ஹரின் பெர்னான்டோவின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்தப் பேரணியில் சஜித் பிரேமதாச மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மைதானம் நிரம்பிய கூட்டத்தில் சஜித் பிரேமதாச உரையாற்றிய போது, தான் அதிபராகத்தெரிவு செய்யப்பட்டால், தச ராஜ தர்மத்தின் அடிப்படையில், நாட்டை ஆட்சி செய்வேன் என்றும், சிறிலங்காவின் மதிப்பை உயர்த்துவதற்கான திட்டம் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

sajith-suport-ralley-3பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்கமாட்டேன் என்றும், நாட்டை அச்சுறுத்துவதற்கு யார் முயன்றாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறிய அவர், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னால் உண்மையில் யார் உள்ளனர் என்பதைக் கண்டுபிடிப்பது அவசியம் என்றும் கூறினார்.

நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதே தனது முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்கும் எனவும் கூறிய சஜித் பிரேமதாச, நாட்டை பல கூறுகளாகப் பிரிக்க அனுமதிக்கப் போவதில்லை என்றும், தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிறிலங்காவின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு உடன்பாடும், வேறு எந்த நாட்டுடனும், கையெழுத்திடப்படமாட்டாது என்றும் அவர் உறுதியளித்தார்.

தனது தந்தை நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்தது போல, தானும் நாட்டுக்காக உயிரை அர்ப்பணிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மக்களின் ஆதரவுடன் வரும் நொவம்பர் மாதம் தான் நாட்டின் அதிபராக இருப்பேன் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்தப் பேரணில் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, ஏரான் விக்ரமரத்ன, ரஞ்சித் மத்தும பண்டார, ரவீந்திர சமரவீர, சந்திராணி பண்டார, அசோக் அபேசிங்க, திலிப் வேதாராச்சி, ஹேஷா விதானகே, அஜித் பெரேரா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

எனினும், ஐதேகவின் முன்னணித் தலைவர்கள் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.