பவானிசாகர் அருகே வெள்ளப்பெருக்கு: இறந்த பெண்ணின் உடலை மரக்கட்டையில் கிடத்தி மாயாற்றை கடந்த மலைவாழ் மக்கள்

0
94

பவானிசாகர், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மலைக்கிராமம் தெங்குமரஹடா. இந்த கிராமம் நீலகிரி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது.

எனினும் இங்குள்ளவர்கள் எந்த ஒரு பொருள் வாங்க வேண்டும் என்றாலும், வெளியூர்களுக்கு போக வேண்டும் என்றாலும் பவானிசாகர் அல்லது சத்தியமங்கலம் வந்துதான் செல்ல வேண்டும்.

அவ்வாறு அவர்கள் வரவேண்டும் என்றால் அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்லும் மாயாற்றை கடக்க வேண்டும். கோடை காலங்களில் மாயாற்றில் அந்த அளவுக்கு தண்ணீர் செல்லாது.

எனவே தெங்குமரஹடாவை சேர்ந்த மலைவாழ் மக்கள் சுலபமாக ஆற்றை நடந்தே கடந்து சென்றுவிடுவார்கள்.

ஓரளவுக்கு ஆற்றில் வெள்ளம் வந்தால் பரிசலில் சவாரி செய்து ஆற்றை கடப்பது வழக்கம்.

மழை பெய்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் ஆற்றை கடப்பது என்பது அந்த அளவுக்கு எளிதான காரியம் அல்ல. மேலும் பரிசல் சவாரியும் ரத்து செய்யப்பட்டுவிடும்.

எனவே தெங்குமரஹடா கிராமம் மற்ற பகுதிகளில் இருந்து முழுவதும் துண்டிக்கப்பட்டு தனி தீவு போல் காட்சி அளிக்கும்.

வெள்ளப்பெருக்கு குறைந்த பின்னர்தான் அவர்கள் தங்கள் தேவைக்காக கிராமத்தை விட்டு வெளியேற முடியும்.

எனவே தெங்குமரஹடா வழியாக செல்லும் மாயாற்றில் பாலம் கட்ட வேண்டும் என மலைவாழ் மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் இதுவரை பாலம் கட்டப்படவில்லை.

இந்தநிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

இதன்காரணமாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மாயாற்றில் பரிசல் சவாரி செய்ய அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி தெங்குமரஹடா கிராமத்துக்கு அருகே உள்ள அள்ளிமாயார் கிராமத்தை சேர்ந்த ஆதிவாசி பெண் நீலியம்மாள் (வயது 48) என்பவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து மலைவாழ் மக்கள் அந்த பெண்ணை சிகிச்சைக்காக தெங்குமரஹடா ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர்.

அப்போது மாயாற்றில் ஓரளவுக்கு வெள்ளம் சென்றது. இதனால் அவரை பரிசல் மூலம் மாயாற்றை கடந்து அக்கரைக்கு கொண்டு வந்து பின்னர் அங்கிருந்து சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நீலியம்மாள் பரிதாபமாக இறந்தார்.

இதைத்தொடர்ந்து நீலியம்மாளின் உடலை சொந்த ஊரான அள்ளிமாயார் கிராமத்துக்கு கொண்டு செல்ல அவருடைய உறவினர்கள் முடிவு செய்தனர்.

இதையடுத்து அவருடை உடல் ஆம்புலன்ஸ் மூலம் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள கல்லாம்பாளையம் கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டது.

ஆனால் மாயாற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அதுமட்டுமின்றி மாயாற்றில் பரிசல் இயக்க அனுமதி ரத்து செய்யப்பட்டிருந்தது.

எனினும் உடலை அள்ளிமாயார் கொண்டு சென்று அடக்கம் செய்ய வேண்டுமே? என எண்ணிய உறவினர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திணறினர்.

பின்னர் மலைவாழ் மக்களில் சிலர் மரக்கட்டைகளை வரிசையாக வைத்து அடுக்கி அதனை கயிற்றால் கட்டினர். பின்னர் அந்த உடலை கட்டையில் கிடத்தி அதையும் கட்டையோடு வைத்து கட்டினர்.

பின்னர் அவர்கள் மரக்கட்டையில் கிடத்திய உடலை, கரைபுரண்டு ஓடிய ஆற்றில் விட்டனர்.

ஆற்றில் உடலுடன் மரக்கட்டை மிதக்க தொடங்கியது. இதையடுத்து ஆற்றில் குதித்த மலைவாழ் மக்கள் மரக்கட்டையை பிடித்துக்கொண்டு உயிரை பணயம் வைத்து நீச்சல் அடித்தபடி கரைபுரண்ட வெள்ளத்தை கடந்து அக்கரை நோக்கி சென்றனர்.

அப்போது அக்கரையில் நின்று கொண்டிருந்த மலைவாழ் மக்கள் சிலரும் ஆற்றில் குதித்து அந்த மரக்கட்டையை இழுத்தனர்.

இதைத்தொடர்ந்து அள்ளிமாயார் கொண்டு செல்லப்பட்ட நீலியம்மாளின் உடல் அங்கு அடக்கம் செய்யப்பட்டது.

பாலம் இல்லாததால் உயிரை பணயம் வைத்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட மாயாற்றை கடந்து இறந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்த மலைவாழ் மக்களின் செயல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இனிமேலாவது தெங்குமரஹடா மாயாற்றில் பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதற்கிடையே மாயாற்றை யாரும் பரிசலில் கடக்க வேண்டாம் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் தண்டோரா மூலம் எச்சரிக்கை அறிவிப்பு விடப்பட்டது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.