எதிர்காலத்தில் சென்னை மக்களுக்கு குடிநீர் பிரச்னை வராது: கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் 760 எம்எல்டி குடிநீர் கிடைக்கும்…முதன்மை செயலாளர் தகவல்

0
55

சென்னை: எதிர்காலத்தில் சென்னை மக்களுக்கு குடிநீர் பிரச்னை வராத வகையில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் இன்னும் 3 ஆண்டுகளுக்குள் 760 எம்எல்டி அளவுக்கு குடிநீர் தயாரிக்கப்படும் என்று முதன்மை செயலாளர்  தெரிவித்துள்ளார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங் சென்னை குடிநீர் வாரிய பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்தது. அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டு முதல் 6 மாதத்தில் 193 நாட்கள் மழை பெய்யாத காரணத்தால் சென்னை மாநகர பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் கீழே சென்று விட்டது.

இதனால் சென்னை மக்கள் தண்ணீர் பிரச்னையை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சென்னை குடிநீர் வாரியம் மூலம் பல்வேறு வகையான நடவடிக்கைகள் எடுத்து இந்த பிரச்னையை எதிர்கொண்டு கிட்டத்தட்ட இந்த நேரத்தில் 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல் தெருக்களில் மட்டும் 12ஆயிரம் சின்டெக் டேங்குகள் வைக்கப்பட்டுள்ளது.

இது வரலாற்றில் அதிகமான ஒன்று. லாரிகள் மூலம் தினமும் 11,000க்கும் மேற்பட நடைகள் அடிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு பார்த்தால் 6000  நடைகள் மட்டுமே அடிக்கப்பட்டது. இந்த ஆண்டு இருமடங்கு அதிகமாக லாரி நடைகள் அடிக்கப்படுகிறது.

புதிய குடிநீர் ஆதாரங்களை எல்லாம் கண்டுபிடித்து அதற்கு அரசு மூலம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது.

சில பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் 150 எம்எல்டி அளவுக்கு குடிநீர் உற்பத்தி செய்யும் திட்டம் முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் 400 எம்எல்டி அளவுக்கு குடிநீர் உற்பத்தி செய்வதற்கான திட்டம் தொடங்கப்பட உள்ளது.

இன்னும் 3 ஆண்டுகளில் 760 மில்லியன் லிட்டர் அளவுக்கு கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் குடிநீர் உற்பத்தி செய்து சென்னை நகரத்துக்கு வழங்கும் நல்ல சூழல் உள்ளது.

பல்வேறு குடிநீர் ஆதாரங்களை உருவாக்கி, எந்த சூழலிலும் சென்னை மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மழைநீர் சேமிப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் சென்னை மக்களுக்கு இதுபோன்ற தண்ணீர் பிரச்னைகள் வரக்கூடாது என்பதற்காக இதுபோன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.