மேலும் தாக்குதல்களை நடத்த தயாராகவிருந்த 15 பேர் கைது! 13.4 கோடி ரூபா பணம், 100 கோடி ரூபா சொத்துக்கள் முடக்கம்

0
142

                                                                                                                           
தமது கொள்கையைப் பின்பற்றாத ஏனையோர் கொலை செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பயங்கரவாதி ஸஹ்ரான் நீண்டகாலமாக இருந்துவந்துள்ளபோதும், உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் மிக குறுகிய காலத்துக்குள்ளேயே திட்டமிடப்பட்டவை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் (சி.ஐ.டி.) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர தெரிவித்தார்.

சி.ஐ.டி. கேட்போர் கூடத்தில் இன்று (08) பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவுடன் அச்சு ஊடக ஊடகவியலாளர்களை சந்தித்த போதே சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர இதனை வெளிபப்டுத்தினார்.

உயிர்த்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுடன் நேரடி தொடர்புள்ள பிரதான சந்தேக நபர்கள் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டதாகவும், தேசிய தெளஹீத் ஜமா அத் எனும் பயங்கரவாத அமைப்பின் 90 சத வீதமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதன்போது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர சுட்டிக்காட்டினார்.

இந் நிலையில் சி.ஐ.டி. பொறுப்பில் தற்போது 63 சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களில் மேலும் குண்டுத் தாக்குதல்களை நடத்த தயாராக இருந்த 15 பேரும் ஸஹ்ரானுடன் உடன் இருந்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளியேறிய 5 பேரும் உள்ளடங்குவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணைகளில், இதுவரை குண்டை வெடிக்கச் செய்த பயங்கரவாதிகள், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அவர்கள் சார்பிலான நிறுவனங்கள் என 41 பேருக்குச் சொந்தமான 13.4 கோடி ரூபா பணம் முடக்கப்பட்டுள்ளது.

வங்கிக்கணக்குகளில் உள்ள குறித்த பணம் விசாரணைகளுக்காக மேல் நீதிமன்ற ஆணை ஊடாக முடக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களது சகாக்களுக்குச் சொந்தமான சுமார் 100 கோடிக்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவும், சி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவும் கூறினர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.