சந்திராயன்-2 இன்று கிளம்புகிறது: நிலவுக்கு எப்போது போகும்? என்ன செய்யும்?

0
145

கடந்த வாரம் ஏவப்படுவதாக இருந்து கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட இந்தியாவின் இரண்டாவது நிலவுப்பயணத் திட்டமான சந்திராயன்-2 இன்று திங்கள் கிழமை பிற்பகல் இந்திய நேரப்படி 2.43 மணிக்கு ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ அறிவித்துள்ளது.

ஜூலை 15 அன்று அதிகாலை ஏவப்படுவதாக இருந்த சந்திராயன்-2 திட்டமிட்ட நேரத்துக்கு 56 நிமிடம் முன்பாக நிறுத்தப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணாக இந்தப் பயணம் நிறுத்தப்படுவதாகவும், வேறொரு தேதியில் மீண்டும் சந்திராயன்-2 ஏவப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்திருந்தது.

“100 கோடி கனவுகளை நிலவுக்கு சுமந்து செல்ல சந்திராயன்-2 தயாராக இருக்கிறது” என்று இஸ்ரோ தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 செலுத்துவாகனத்தில் திரவ எரிபொருள் நிரப்பும் பணி நடந்துவருவதாக இஸ்ரோ ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

இந்தப் பயணத்தின் சிறப்பு

சந்திராயன்-2 என்பது மூன்று பகுதிகளை உடைய ஒரு விண்கலத் தொகுப்பு.

இதில், நிலவை சுற்றி வரும் கலன் ஒன்றும், நிலவில் தரையிறங்கும் கலன் ஒன்றும், நிலவின் தரைப்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வுகள் செய்யும் உலாவி (ரோவர்) ஒன்றும் இருக்கும்.

சுற்றுவட்டக் கலனில் இருந்து, தரையிறங்கும் கலன் பிரியும். தரையிறங்கும் கலனில் இருந்து பிறகு உலாவி பிரியும்.

இந்த வின்கலத் தொகுப்பு இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 செலுத்து வாகனம் (ராக்கெட்) மூலம் விண்ணுக்கு ஏவப்படும்.

இந்தியா உருவாக்கியதிலேயே மிகவும் சக்திவாய்ந்த இந்த செலுத்துவாகனம் 640 டன் எடையுள்ளது.

44 மீட்டர் அல்லது 144 அடி உயரமுடையது. ஏறத்தாழ 14 மாடி கட்டடத்தின் உயரத்துக்கு சமமானது இதன் உயரம்.

2008-ம் ஆண்டு இந்தியா தமது முதல் நிலவுப் பயணத் திட்டமான சந்திராயன்-1 ஐ ஏவியது. இந்த விண்கலன் நிலவில் தரையிறங்கவில்லை.

நிலவைச் சுற்றிவந்து நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்பது பற்றி முதல் விரிவான ஆராய்ச்சியை தமது ரேடார்கள் உதவியோடு நடத்தியது.

107967620_2a6859c8-0081-4b3a-89d1-943a365ad7f4 சந்திராயனை விண்வெளியில் பிரசவிக்கப் போகும் ஜி.எஸ்.எல்.வி. மார்க் III செலுத்துவாகனம். 150

மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள தற்போதைய சந்திராயன்-2 திட்டம் தண்ணீர் மற்றும் தாதுப் பொருட்கள் நிலவில் இருப்பது பற்றியும், ‘நிலவு’நடுக்கம் (புவியில் நடந்தால் ‘நில நடுக்கம்’. நிலவில் நடந்தால் ‘நிலவு நடுக்கம்’) தொடர்பாகவும் ஆய்வுகள் செய்யும்.

 

இந்த முயற்சி வெற்றி பெற்றால் நிலவின் தென் துருவப் பகுதியில் கால்பதிக்கும் முதல் நாடாக இந்தியா ஆகும்.

 

 

சந்திராயன்-2 எப்போது போய்ச்சேரும்?

நேற்று ஞாயிறு மாலை 6.43 மணிக்கு சந்திராயனை சுமந்துள்ள ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 செலுத்துவாகனத்தை ஏவுவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கியது.

திங்கள் பிற்பகல் இந்த செலுத்துவாகனம், சென்னை அருகே உள்ள ஸ்ரீஹரிக்கோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து புகையும், நெருப்பும் கக்கியபடி கிளம்பும். ஆனால், 3.84 லட்சம் கி.மீ. பயணம் ஒரே மூச்சில் முடிந்துவிடாது.

உண்மையில் சந்திராயன் விண்கலத் தொகுப்பின் மூன்று பாகங்களில் ஒன்று நிலவில் தரையிறங்குவது செப்டம்பர் 6 அல்லது 7-ம் தேதி தான் நடக்கும்.

ஏனென்றால் சந்திராயன்-2 நேர்க்கோட்டுப் பாதையில் நிலவை நோக்கிப் பயணிக்காமல் புவியைச் சுற்றி சுற்றி அடுத்தடுத்து பெரிய வட்டப் பாதையில் பயணித்து ஒரு கட்டத்தில் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழையும்.

நிலவின் சுற்றுப் பாதையில் பயணிக்கும் கலனில் இருந்து நிலவில் தரையிறங்கும் கலன் பிரிவதில் இருந்து தரையிறங்குவது வரையிலான 15 நிமிடங்கள்தான் விஞ்ஞானிகளுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சிவன்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.