“எனக்கே சில படங்கள்ல கிரெடிட்ஸ் தரல!” – வடிவேலு, கவுண்டமணிக்கு காமெடி டிராக் எழுதிய ராஜகோபால்

0
123

“ஒரு சில படங்கள்ல நல்லா வேலைபார்த்திட்டு, சம்பளம்னு வரும்போது சில கசப்பான சம்பவங்கள் நடக்கும். அந்தச் சண்டை, படத்தோட டைட்டில் கார்டு வரைக்கும் எதிரொலிக்கும். மனத்தளவுலேயும் இது பெரிய பாதிப்பை உண்டாக்கும்.” – ராஜகோபால்

“1984-ல், சினிமா மேல இருக்கிற ஆசையில அப்படியே சென்னைக்குக் கிளம்பி வந்துட்டேன்.

சில வருஷ போராட்டங்களுக்குப் பிறகு, 90கள்ல நிறைய படங்களுக்கு காமெடி டிராக் எழுத ஆரம்பிச்சேன். கவனம் என் மேல விழ ஆரம்பிச்சது!” என மகிழ்ச்சி பொங்க தனது சினிமா பயணம் பற்றிச் சொல்ல ஆரம்பிக்கிறார், 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு நகைச்சுவைப் பகுதிகள் மற்றும் வசனம் எழுதிய ராஜகோபால்.

“சென்னை உங்களை எப்படி வரவேற்றது?”

“சென்னைக்கு வந்ததும் வேலை தேடினேன். வண்ணாரப்பேட்டையில ஜாக்கெட் பிட்டுகளை மொத்தமா வாங்கி, சென்னையில இருக்கிற ஒவ்வொரு மூலைக்கும் அதை விற்பனை செய்ற வேலை கிடைச்சது.

இதுக்கு நடுவுலதான் சினிமா வாய்ப்புகளும் தேடி அலைஞ்சேன். சில மாதங்கள் கழித்து பாத்திரங்களில் பெயர் பொறிக்கும் வேலை கிடைச்சது.

இதுகூட மதுரையில இருக்கும்போது விளையாட்டா பழகிப் பார்த்த வேலைதான். இது எனக்கு சென்னையில கை கொடுத்தது.

காலையில 6 மணிக்கு ஆரம்பிக்கிற வேலை, 9.30-க்கே முடிஞ்சிடும். அப்புறம் படம் பார்க்கிறது, வாய்ப்பு தேடுறதுன்னே ஒரு நாள் போயிடும். சென்னை இப்படித்தாங்க வரவேற்பு கொடுத்தது எனக்கு.

“முதல் சினிமா வாய்ப்பு எப்படி கிடைச்சது?”

index“மதுரையில என் அண்ணனுடைய நண்பர் திருஞானம்னு ஒருத்தர் இருக்கார். 1985-ல் ‘கொலுசு’னு ஒரு படம் இயக்கினார்.

அந்தப் படத்துல உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். அதுதான் எனக்கு முதல் படம். அந்தப் படத்துல நான் கிளாப் போர்டு அடிக்கிற வேலை பார்த்தேன்.

படம் வெளிவந்த பிறகு சரியா போகலை. அதுக்கப்புறம், பெருசா வாய்ப்புகளும் இல்லாத காரணத்துனால, மறுபடியும் மதுரைக்கே கிளம்பிப் போயிட்டேன்.

இப்படி சென்னைக்கும் மதுரைக்கும் அலைஞ்சிட்டே இருந்த காலம்தான் என்னுடைய வாழ்க்கையின் போராட்ட காலம். அப்புறம் ஒரு வழியா 1990-ல் மலேசியா வாசுதேவன் இயக்கிய ‘நான் சிரித்தால் தீபாவளி’ படத்துல இணை இயக்குநரா வேலை பார்க்கிற வாய்ப்பு கிடைச்சது.

அதுக்கு அடுத்த வருடமே, ‘வைதேகி கல்யாணம்’ படத்துலேயும் இணை இயக்குநரா வேலைபார்த்தேன்.

அதுலதான் கவுண்டமணி சாரும், செந்தில் சாரும் பழக்கமானாங்க. அந்தப் படத்தோட நகைச்சுவைப் பகுதியை எழுத உதவினேன்.

டைட்டில் கார்டில் ‘உதவி மற்றும் இணை இயக்குநர்’னு என்னுடைய பெயர் வந்தது. அங்கிருந்துதான் படங்களுக்கான நகைச்சுவைப் பகுதியை எழுத ஆரம்பிச்சேன்.”

“அப்புறம் என்னென்ன படங்களில் வேலைபார்த்தீங்க?”

rew

” ‘கட்டபொம்மன்’, ‘ராக்காயி கோயில்’, ‘பட்டத்து ராணி’ போன்ற படங்கள்ல வேலைபார்த்தேன். 1994-ல் வெளியான ‘ஜெய் ஹிந்த்’ படம்தான் என்னுடைய வாழ்க்கையில முக்கியமான படமாக அமைந்தது.

வணிக ரீதியா படம் மாபெரும் ஹிட்டாகி என்னுடைய சினிமா வாழ்க்கையில எனக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது.

‘இணை இயக்குநர் மற்றும் நகைச்சுவை பகுதி’ ரெண்டுலேயும் என்னுடைய பெயர் வந்திருந்தது.

எனக்குத் தெரிஞ்சு தமிழ் சினிமா வரலாற்றிலே எனக்கு மட்டும்தான் இப்படி வந்திருக்கும்னு நினைக்கிறேன்.

‘லக்கி மேன்’, ‘கட்ட பஞ்சாயத்து’, ‘மனதை திருடிவிட்டாய்’, ‘மகனே என் மருமகனே’, ‘பட்ஜெட் பத்மநாபன்’, ‘மிடில் கிளாஸ் மாதவன்’, ‘சீனா தானா 001’, ‘பெரியதம்பி’, ‘பாலக்காட்டு மாதவன்’ இப்போ வரைக்கும் 100 படங்களுக்கும் மேல வேலைபார்த்திருக்கேன்.

சிங்கமுத்துவோட மகன் வாசன் கார்த்திக்கை வெச்சு ஒரு படம் இயக்குறேன். அதுக்கான வேலைகள்தான் இப்போ போயிட்டிருக்கு.”

நடிகர்கள் செந்தில் மற்றும் கவுண்டமணிகூட பல படங்கள் வேலைபார்த்திருக்கீங்க? அவங்களைப் பத்தி…

இப்போது வரை இரண்டு பேரோடும் நெருங்கிய தொடர்பில்தான் இருக்கிறேன். சென்னை வந்தாலே செந்தில் சார் கூடவே இருப்பேன். கவுண்டமணி சார் ரெண்டு நாளைக்கு ஒரு முறை பேசுவார். இரண்டு பேருமே என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான மனிதர்கள்.

“சினிமாவுல உள்ள சவால்னு எதைச் சொல்வீங்க?”

“சினிமா துறையில இருக்கிற கலைஞர்களுக்கு முக்கியமான சில பிரச்னைகள்லாம் இருக்கு. கனவுகளையும் மேடைகளையும் துரத்தி ஓடுறவங்களுக்கு சம்பளமும் முக்கியம், பெயரும் முக்கியம்.

ஒரு சில படங்கள்ல நல்லா வேலைபார்த்திட்டு சம்பளம்னு வரும்போது சில கசப்பான சம்பவங்கள் நடக்கும்.

அந்தச் சண்டை, படத்தோட டைட்டில் கார்டு வரைக்கும் எதிரொலிக்கும். மனத்தளவுலேயும் இது பெரிய பாதிப்பை உண்டாக்கும்.

என்னோட பெயர்களே சில படங்கள்ல தவிர்க்கப்பட்டிருக்கு. இருந்தாலும் பரவாயில்லை சினிமா பிடிக்கும். சினிமாதானங்க நமக்கு எல்லாம்’ என சிரித்தபடி முடிக்கிறார் ராஜகோபால்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.