சபலத்தால் சரிந்து போன சரவண பவன்!

0
119

சரவணபவன் ஹோட்டல் கிளைகளையும், அதன் உரிமையாளர் ராஜகோபாலையும் அறிந்திருக்காதவர்கள் தமிழ்நாட்டில் இல்லை.

பெண் ஒருத்தி மீது கொண்ட தீராத ஆசையினால், அப்பெண்ணின் கணவரைக் கொலை செய்த குற்றத்துக்காக சிறைக்குச் சென்றுள்ளார் ராஜகோபால். அவரின் ஆயுள் சிறைக்குள்ளேயே முடிவடையப் போகிறது

‘ஐயோ வலிக்குதே, முதுகு வலிக்குதே’ என ஸ்டெச்சரில் படுத்துக் கொண்டு நீதிபதி முன்பு குரல் எழுப்பினார் சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால்.

எனினும் அதெல்லாம் பலிக்கவில்லை. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சரவணபவன் ராஜகோபாலைத் தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது.

தமிழகத்தில் மட்டுமன்றி உலகின் பல இடங்களிலும் வாழும் தமிழர்கள் மத்தியில் அறிமுகமான பெயர் அது. உணவகம் நடத்தியதன் மூலம் எங்கும் பிரபலமானவர் அவர்.

வியாபாரத்தில் ஜாம்பவான். ஆனால் பலம் மிக்க மனிதர்களிடம் பலவீனமும் இருப்பதுண்டு. ஜாதகம், சோதிடத்தில் அதீத நம்பிக்கையுடையவர் சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால்.

இவரது தொழிலில் சில சறுக்கல்கள் ஏற்பட்டதை அடுத்து சோதிடரை அணுகி ஆலோசனை கேட்டார்.

அப்போது “சிறிய வயதுப் பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டால் உங்கள் வாழ்வில் வளம் பெறுவீர்கள்” என சோதிடர் தெரிவித்தார்.

இதையடுத்து தனது ஹோட்டலில் பணிபுரிந்தவரின் மகள் ஜீவஜோதியின் மீது ஆசைப்பட்டார் ராஜகோபால். எனினும் ஜீவஜோதியோ பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

எனினும் விடாத ராஜகோபால் சில நாட்கள் கழித்து சாந்தகுமாரை கடத்திச் சென்று கொலை செய்தார். கடந்த 2001-ஆம் ஆண்டு கடத்தி சென்று கொடைக்கானலில் கொலை செய்தார்.

இது தொடர்பான வழக்கில் ராஜகோபால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். இந்த தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் அவர்.

அப்போது உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதையும் எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தை நாடினார். அப்போது ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

இந்த நிலையில் ராஜகோபால் கடந்த 7-ஆம் திகதிக்குள் சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் ராஜகோபாலோ தனக்கு நரம்புத் தளர்ச்சி நோய் உள்ளதாகக் கூறி சரணடைவதிலிருந்து விலக்கு கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

உச்சநீதிமன்ற நீதிபதியோ ராஜகோபாலுக்கு கடும் தொனியில் கேள்விகளைக் கேட்டு அவர் உடனடியாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்றுமுன்தினம் மாலை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையிலிருந்து அம்புலன்ஸ் வாகனம் மூலம் சென்னை குற்றவியல் நீதிமன்றத்துக்கு வந்தார் ராஜகோபால்.

அப்போது ஸ்டெச்சரில் படுத்துக் கொண்டிருந்த ராஜகோபாலை நீதிபதி முன்பு ஆஜர்படுத்த அழைத்து சென்றனர்.

அச்சமயம் ராஜகோபால், “ஐயோ வலிக்குதே… ஐயோ வலிக்குதே… முதுகு வலிக்குதே எனக் கூறி அனுதாபம் தேட முயற்சி செய்தார்.

எனினும் அவரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.அதனையடுத்து புழல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் அவர்.

வியாபாரத்திலும், பணத்திலும் உச்சத்தில் இருந்தவர் அவர். இன்று அவர் வாழ்க்கையே சூன்யமாகி விட்டது. தற்போது அவருக்கு வயது 71.

அவருக்கான ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளதால் அத்தீர்ப்பை இனிமேல் எங்குமே மேன்முறையீடு செய்ய அவரால் முடியாது.

அவருடைய முதுமையை வைத்துப் பார்க்கின்ற போது ராஜகோபால் ஆயுள் தண்டனைக் காலத்தைப் பூர்த்தி செய்வதற்கிடையில் அவரது இறுதி நாளும் சிறைக்குள்ளேயே வந்து விடும் என்பதுதான் பரிதாபமான உண்மை.

சபலத்தினால் சரவணபவன் ஹோட்டல் சரிந்து விட்டது மட்டுமன்றி அதன் உரிமையாளரின் எதிர்காலமும் இருண்டு விட்டது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.