அமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு! கொழும்புக்கு வந்தது குழு!! : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – (பகுதி 152)

0
991

யாழ் அரச அதிபராக பதவி வகித்தவர் பஞ்சலிங்கம். 1984ம் ஆண்டு முதல் யாழ் அரச அதிபராக பதவி ஏற்றார்.

மிகச் சிறந்த நிர்வாகி என்று பெயர் எடுத்தவர் பஞ்சலிங்கம். இயக்கங்களுடனும் நல்லுறவு வைத்திருந்தார்.
குறிப்பாக ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்துடன் பஞ்சலிங்கம். ஆதரவான போக்கைக் கொண்டிருந்தார்.

அப்போது ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தவர்களாக இருந்த ரமேஷ், டேவிற்சன் ஆகியோர் பஞ்சலிங்கத்தை அடிக்கடி சந்தித்து, அவர்மூலம் சில காரியங்களை செய்வித்தனர்.

யாழ் குடாநாட்டில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சிவில் நிர்வாக வேலைகள் ரமேஷ், டேவிற்சன் ஆகியேரின் பொறுப்பில் இருந்தமையால் அரச அதிபரின் ஊடாகவும் சில காரியங்களை மேற்கொண்டனர்.

புலிகள் இயக்கத்தினரும் பஞ்சலிங்கத்துடன் தொடர்பு வைத்திருந்தனர். புலிகள் இயக்க அரசியல் பிரிவு பொறுப்பாளர் திலீபன்தான் பஞ்சலிங்கத்துடன் தொடர்பாக இருந்தார்.

ஏனைய இயக்கத்தினர் பெரியளவு தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினரால் தான் முதன் முதலில் ‘ஈழமுத்திரை” வெளியிடப்பட்டது. முத்திரையை வடிவமைத்தவர் டேவிற்சன்.

முத்திரைகள், பணநோட்டுக்கள் என்பவற்றை வெளியிடுவது பாரதூரமான விடயம். அதற்கு ஒத்துழைப்பது மாபெரும் குற்றம்.

ஆனால் ஈழமுத்திரை வெளியீட்டு விழாவின் பின்னர், அரச அதிபர் பஞ்சலிங்கத்திடம் ஈழமுத்திரையை ரமேசும், டேவிற்சனும் வழங்கிய போது அவர் பணம் கொடுத்துப் பெற்றுக் கொண்டார்.

அப்போது அவர் கூறியது இந்தக்கதிரையில் இருந்து நான் இதைப் பெறக்கூடாது. ஆனாலும் நானும் ஒரு தமிழன்தானே.

எச்சரிக்கை

இந்தியப் படையினர் வந்தபின்னர் பஞ்சலிங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக புலிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டது. இந்தியப் படை அதிகாரிகளுடன் பஞ்சலிங்கத்துக்கு நெருக்கமான தொடர்புகள் இருப்பதாக புலிகள் நம்பினார்கள்.

அதேவேளை இலங்கை அரசுடனும் பஞ்சலிங்கம் நெருக்கமான உறவுகொண்டுள்ளதாகவும் புலிகளுக்கு சந்தேகம் ஏற்ப்பட்டது.

இந்தியப் படையினருக்கும், புலிகளுக்கும் இடையே சமரசம் செய்துவைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டார் பஞ்சலிங்கம்.

புலிகளின் சந்தேகத்தை இது மேலும் உறுதிப்படுத்தியது. பலதடவைகள் பஞ்சலிங்கத்தை புலிகள் இயக்கத்தினர் சந்தித்தனர்.

புலிகள் இயக்க அரசியல் பிரிவுக்கு யாழில் பொறுப்பாக இருந்த கந்தசாமியும் பஞ்சலிங்கத்தை சந்தித்து தமக்கு உதவிகள் செய்யுமாறு கேட்டிருந்தார். (கந்தசாமி பின்னர் இந்தியப் படையினரால் நல்லுரில் வைத்து கொல்வப்பட்டார்)

மாகாணசபைக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எஃப். இந்தியப்படை, இலங்கை அரசு, புலிகள் ஆகிய நான்கு துருவங்கள் மத்தியில் பஞ்சலிங்கம் பணியாற்ற வேண்டி இருந்தது.

இவர்களில் யார் சொல்வதைக் கேட்காவிட்டாலும் ஆபத்துத்தான். இலங்கை அரசு பதவியைத்தான் பறிக்கும். இயக்கங்கள் உயிரையே பறித்துவிடும்.

இலங்கை அரசோடும், இந்தியப் படையோடும் வைத்திருக்கும் நெருக்கத்தைக் குறைத்துக் கொள்ளவேண்டும். என்று புலிகள் கூறினர்.

முற்றும், அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் பணத்தில் கையாடல் நடைபெறுவதாகவும் புலிகள் குற்றம் சாட்டினர்.

இந்தியப் படையினருடன் தொடர்புகள் வைப்பதோ இந்தியப்படை முகாம்களுக்கு செல்வதோ தேசத்துரொகம் எனக் கருதப்படும் என்று புலிகள் ஏற்கனவே பொதுமக்களுக்கு அறிவித்திருந்தனர்.

அந்தக் கட்டுப்பாடு அதிகாரிகளுக்கும் பொருந்தும் என்று புலிகள் கூறினர். ஊத்தியோக விடயங்கள் தவிர்ந்த நெருக்கங்கள் தொடர்பாகவே அவ்வாறு அதிகாரிகள் எச்சரிக்கப்பட்டனர்.

எனினும், இந்தியப் படை உயரதிகாரிகள் பஞ்சலிங்கத்தை அடிக்கடி தொடர்பு கொண்டு வந்தனர். இந்த விடயம் யாழ் அரச செயலகத்தில் உள்ள புலிகளுக்கு ஆதரவாகன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஊடாகப் புலிகளை எட்டியது.

சந்திப்பு

பஞ்சலிங்கத்தை சந்திக்க விரும்புவதாக புலிகள் செய்தி அனுப்பினார்கள். நல்லூரில் உள்ள தனது சகோதரர் வீட்டில் சந்திக்கலாம் என்று தகவல் அனுப்பினார் பஞ்சலிங்கம்.

நல்லூர் கோவில் வீதியில்தான் அவரது சகோதரர் பெயர் யோகேஸ்வரன். காலை 9.55 மணியளவில் புலிகள் இயக்க உறுப்பினர்கள் நான்குபேர் பஞ்சலிங்கத்தைச் சந்திக்க அங்கு வந்து சேர்ந்தனர்.

அவர்களை அமரவைத்து பேசிக்கொண்டிருந்தார் பஞ்சலிங்கம். அவர் தொடர்பான தங்கள் சந்தேகங்கள், தங்களுக்கு கிடைத்த தகவல்கள் பற்றி கேள்வி எழுப்பினார்கள் புலிகள்.

அவற்றுக்கு பொறுமையாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார் பஞ்சலிங்கம். அப்போது நான்கு பேரில் இருவர் எழுந்து வெளியே நோட்டம் பார்த்தனர். அப்போது நேரம் 10.25 மணி.

அதேநேரம் உள்ளே இருந்தவர்கள் எழுந்து தங்கள் இடுப்பில் மறைத்துவைத்திருந்த பிஸ்டலை எடுத்தனர்
தனக்கு நேரப்போகும் விபரீதத்தை பஞ்சலிங்கம் உணர்ந்துகொண்டு சுதாகரிப்பதற்கு இடையே, பிஸ்டல்களில் இருந்து ரவைகள் பாயத்தொடங்கின.

கிட்டத்தட்ட 15 ரவைகள்வரை பஞ்சலிங்கத்தின் உடலில் பாய்ந்தன. இரத்த வெள்ளத்தில் சரிந்தார் அரச அதிபர்.

நான்குபேரும் தப்பிச்சென்று விட்டனர். அதன் பின்னர்தான் இந்தியப் படை வந்து தேடுதல் நடத்தியது.

புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ரகு, காண்டீபன், ஜொனி, குமார் ஆகிய நான்கு பேரே பஞ்சலிங்கம் கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்டனர்.

பலியான வை.மு. பஞ்சலிங்கம் வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் மாவட்டக் காணி அதிகாரியாகப் பணியாற்றியவர்.

அதன் உதவி அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் என்று பல பதவிகளை வகித்தவர். யுhழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர். இரண்டு மகன்கள் இருந்தனர்.

பஞ்சலிங்கம் கொலை தொடர்பாக பரவலான கண்டனங்கள் எழுந்தன. கண்ணீர் அஞ்சலிகளும் தெரிவிக்கப்பட்டன.

புலிகளின் குற்றச்சாட்டுக்களில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, பஞ்சலிங்கம் போன்ற ஒரு சிறந்த நிர்வாகிக்கு புலிகள் கொடுத்த தண்டனை நியாயமல்ல என்பதே பொதுவான அபிப்பிராயம்.

girlsமுழக்கங்கள்

ஈழப் போராட்டத்தில் தங்களை அர்ப்பணிக்கும் உறுதியுடன்தான் ஏராளமானோர் முன்வந்தனர். தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்தனர்.

ஆயினும் புலிகள் இயக்கத்தினர் போன்று ஏனைய இயக்கங்களால் வளரமுடியாமல் போனதற்கு முக்கிய காரணம், இயக்கங்களின் தலைமைகள்தான்.

இயக்கத் தலைவர்கள் என்று எடுத்துக் கொண்டால் பிரபாகரன், குட்டிமணி, தங்கத்துரை, சிறீபாரத்னம், உமாமகேஸ்வரன் ஆகியோர்தான் நேரடியாவே வெற்றிகரமான இராணுவ நடவடிக்கைகளில் பங்குகொண்ட அனுபவம் பெற்றிருந்தனர்.

தங்கள் இயக்கத்துக்கு திருப்பம் ஏற்படுத்திக் கொடுத்த நடவடிக்கைகளில் அவர்கள் நேரடியாக பங்கு கொண்டனர்.

image_f0434facc2குறிப்பாக ஆனைக்கோட்டை பொலிஸ் நிலைய தாக்குதல்களில் உமாமகேஸ்வரன், திருநெல்வேலியில் இராணுவத்தினர் மீதான தாக்குதலில் பிரபாகரன் சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் சிறீ, நீர்வேலி வங்கிக் கொள்ளையில் குட்டிமணி, தங்கத்துரை இவ்வாறு பல நடவடிக்கைகளைக் கூறலாம்.

ஆனால் ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கங்களின் தலைவர்கள் தங்கள் இயக்கங்களின் வெற்றிகரமான இராணுவ நடவடிக்கைகளில் மட்டுமல்ல, அரசியல் பிரச்சார நடவடிக்கைகளில் கூட பங்கெடுத்தது கிடையாது.

இரண்டாம் கட்ட தலைமையில் இருந்தவர்கள்தான் இந்த இரண்டு இயக்கங்களுக்கும் உருக்கொடுத்தனர்.

பின்னர் ஒரு கட்டத்தில் இரண்டாம் கட்ட தலைமைளை பின்தள்ளிவிட்டு, இயக்க வளர்ச்சிக்கு உரிமை பாராட்டிய தலைவர்களுக்கு தங்கள் இயக்கங்கள் வளர்ந்து வந்த பாதைகூட தெரியாமல் போனது.

விரலுக்கு மிஞ்சிய வீக்கம்

இயக்கத்தை கட்டுக்கோப்பாக உருவாக்குதல், திட்டமிட்ட செயற்பாடு, சிறந்த தளபதிகளை வளர்த்தல் என்பவை ஒரு கலையாகும்.

ஈரோஸ் அமைப்பினர் கொழும்பில் குண்டுவெடிப்புக்களை நடத்தினர். ஆனால் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தால் இந்தியா ஆயுதம் கொடுத்த பின்னர்கூட வெற்றிகரமான இராணுவ நடவடிக்கை எதிலும் ஈடுபட முடியவில்லை.

காரணம் என்ன?

கிடைத்த ஆயுதங்களை வைத்து எப்படியான தாக்குதல் நடத்தலாம் என்று திட்டமிடுவதைவிட, மேலும் ஆட்களை சேர்த்து பெரிய இயக்கமாக எப்படி பந்தா காட்டலாம் என்பதுதான் சிந்தனை.

பத்து முகாம் இருக்கும் என்று வையுங்கள், முகாமுக்கு ஒரு துப்பாக்கி, அல்லது கிரனேட் வழங்கப்படும். அதற்கு இயக்க இராணுவ முகாம் என்று பெயர்.

சக்திக்கு மீறி ஆட்களைச் சேர்த்தால் சாப்பாடு போடுவது எப்படி?

தனியார் வீடுகளில் கொள்ளை அடிப்பார்கள். அது எப்படிப் போதம்? மேலும் கொள்ளை.

முகாம் போட்டு ஆட்களைப் பராமரிப்பது சாப்பாடு போடுவது சும்மா இருப்பதால் உறுப்பினர்களுக்கிடையே பிரச்சனைகள் தோன்றும். அவற்றை தீர்ப்பது. இவற்றுக்கே நேரம் போய்விடும். இதுதான் இயக்க வேலை என்று ஈ.பி.ஆர்.எல்.எஃப். தலைவர்கள் தப்பாக நினைத்துக் கொண்டிருந்தனர்.

பத்து முகாமில் இருந்த நூறுபேருக்கு பதிலாக ஒரே முகாமில் ஒழுங்கான பத்துப்பேரை வைத்து பல தாக்குதல்களை திட்டமிட்டு நடத்யிருக்கலாம். அது ஆயுதம் சேர்க்கும்முறை. இவர்கள் செய்தது ஆயுதம் பிரிக்கும் முறை.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். பாணி என்பது விரலுக்கு மிஞ்சிய வீக்கம். அதனால்தான் கிடைத்த வாய்ப்புகளை விரயமாக்கிக்கொண்டிருந்தனர். முகாம்கள் நிரம்பி வழிவதை வைத்து தாங்கள் பெரிய இயக்கம் என்றநினைப்பில் இருந்தனர்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்க இரண்டாம் கட்ட தலைமை ஒரு புரட்சிகர அமைப்பை உருவாக்க முனைந்தது. ஆனால் அதன் தலைவர்களோ தங்களைச் சுற்றி ஒரு பொிய கோஷ்டி இருந்தால்போதும் என்ற ரீதியில் செயற்பட்டனர்.

இந்தியப் படை காலத்திலும் அதுதான் நடந்தது. மாகாண சபை பதவிகள் எம்.பி. பதவிகள் கையில் இருந்தமையால் முகஸ்துதிப் பேர்வழிகள் திடீர் மரியாதைகள் என்று ஏகப்பட்ட அமர்களம்.

இயக்கப் பெயர் கெட்டுக் கொண்டிருந்தது. ஒரு சிறு ஊசியால் குத்த உடைபடும் பலூனைப்போல இயக்கம் இருந்தது.

varathar-680x365-e1512242088311வரதராஜப் பெருமாள்

வரதராஜப் பெருமாள் முழங்கிக் கொண்டிருந்தார். “மாகாணசபைக்கு அதிகாரம் கொடுக்காவிட்டால் நாம் தமிழீழத்துக்காக போராடுவது தவிர வேறு வழியில்லை” என்றார். பெருமாளை விட ஒருபடி மேலே போய்விட்டார் பத்மநாபா.

1989 மேதினக் கூட்டம் மட்டக்களப்பில் நடைபெற்றது. பத்மநாபா அங்கு உரையாற்றினார்.

உரையைக் கேட்டவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப். ஏதோ பொிய திட்டத்துடன்தான் இருக்கிறது என்று நினைத்தனர். அப்படி என்ன பேசினார் தொியுமா??

″சீறிலங்காவின் அரச மாகாண அரசைக் கலைக்க முனைந்தால் நாம் கையை கட்டிக்கொண்டு இருக்கமாட்டோம். ஆயுதம் ஏந்தி நாம் போராட ஆரம்பித்தால் பெரும் ஆபத்தாக முடியும் என்பதை சிறிலங்கா அரசு உணர்ந்துகொள்ளவேண்டும்.″

எதத்தனை பொிய வாய்வீச்சை வீசியிருக்கிறார் பார்த்தீர்களா? சாதாரண உறுப்பினர் ஒருவர் அவற்றை பேசியிருந்தால் இயக்க உள்நிலை தொியாமல் பேசியிருக்கிறார் என்று நினைக்கலாம்.

ஆனால் இயக்கத் தலைவரை தன் இயக்க பலத்திற்கு முற்றிலும், மாறான எச்சரிக்கையை வெளியிடுவது, மக்களை ஏமாற்றும் முயற்சிதானே.

கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போவது எப்படி?

இந்தியப் படையை திருப்பி அழைக்கக் கூடாது என்பதை வலியுறத்த இந்தியா சென்றார் பத்மநாபா.

தற்போதைக்கு இந்தியப் படை வாபஸ் பெறப்படமாட்டாது என்று இந்திய அரசு அதிகாரிகள் பத்மநாபாவிடம் உறுதியளித்தனர்.

அதனை நம்பிவிட்டார் பத்மநாபா. அதனால் சென்னையில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் பின்வருமாறு பேட்டியளித்தார்.

“இந்தியப்படை திரும்ப நேர்ந்தால் ஈழத்தை தனியரசாகப் பிரகடனம் செய்வோம். சிறீலங்கா படைகளை எதிர்த்து போராடவும் தயங்கமாட்டோம்”

amirthalingam21-e1560725909325அமிர்தலிங்கம்

புலிகளின் திட்டம்

இந்த முழக்கங்கள் மத்தியில் இந்தியப் படையினரை வெளியேற்றும் இராஜதந்திர நகர்வுகளை மட்டுமன்றி, தாக்குதல்களையும் தீவிரப்படுத்தினார்கள் புலிகள்.

“இக் கட்டத்தில் அமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்டும் உத்தரவோடு விசு தலமையில் ஒரு அணி கொழும்பு வந்து சேர்ந்தது.”

கடைசியாக ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்க்கலாம் என்று பிரபாகரன் நினைத்தார்.

“இந்தியப.படை வெளியேறவேண்டும் என்று அமுர்தலிங்கம் கோரிக்கைவிட வேண்டும்” என்று யோகேஸ்வரன் ஊடாக அமுதருக்கு தெரிவிக்கபட்டது.

“இந்தியப.படை வெளியேறவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் உடனடியாக வெளியேறுமாறு கோரமுடியாது” என்று தன்முடிவை அறிவித்தார் அமுதர்.

“அமுதரை எங்கள் தலைவர் சந்திக்க விரும்புகிறார். வன்னிக்கு வரத் தயாராக இருக்கிறாரோ?” இது அடுத்த கேள்வி.

“அங்கு அவர் வருவது நல்லதல்ல. இங்கேயே நீங்கள் சந்திக்கலாம். நான் ஏற்பாடு செய்கிறேன்” என்றார் யோகேஸ்வரன்.

யோகேஸ்வரன் ஒருமுறை சுகவீனமாக இருந்தபோதும் அவரைச் சென்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார் விசு.

புலிகளின் உளவுப்பிரிவுக்கு பொறுப்பாளர் விசுதான் என்பது யோகேஸ்வரனுக்கு தொியும். அதனால் விசு மூலமாக பிரபாகரனுக்கும், அமுதருக்கும் இடையே தொடர்பையும், மீண்டும் உறவையும் ஏற்படுத்திவிடலாம் என நம்பினார் யோகேஸ்வரன்.

இந்தியப்படையை வெளியேறுமாறு கோராதது மட்டுமல்லாமல், பாராளுமன்றத்திலும் இந்தியப் படைக்கு ஆதரவாக உரையாற்றினார் அமுர்தலிங்கம்.

இந்தியப் படையை வெளியேறக்கோரும் அரசின் முயற்சியை கண்டித்து அமுதர் உரையாற்றினார்.

விசுவுக்கு உறுதியான இறுதிக் கட்டளை வந்து சேர்ந்தது. “போட்டுவிடு”

“அமுதரை சந்திக்கத் தயாராக இருக்கிறோம். ஏற்பாடு செய்யுங்கள்” என்றார் யோகேஸ்வரனிடம் விசு.

யோகேஸ்வரன் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார்.

(தொடரும்)

விறுவிறுப்பு அரசியல் தொடர்
எழுதுவது அற்புதன்.
தொகுப்பு:கி.பாஸ்கரன் (சுவிஸ்)

alp

இந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற் தாக்குதலும் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 151)

அமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன்!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150)

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.