சட்டவிரோத குடிவாசிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது-அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர்

0
189

சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பான அவுஸ்திரேலியாவின் கொள்கைகள் முன்னரைப் போன்று தற்போதும் கடுமையானதாகவே காணப்படுவதாகவும், படகுகளின் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவை வந்தடைவதற்கு இலங்கையர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் எச்சரித்துள்ளார்.

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனின் தலைமையில் நேற்றைய தினம் கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய இல்லத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அச்சந்திப்பில் அவுஸ்திரேலிய எல்லை விவகாரங்களுக்கு பொறுப்பான கொமாண்டர் மேஜர் ஜெனரல் கிரெய்க் பியுரினியால் கடல் மார்க்க சட்டவிரோத பயணத்திற்கு எதிரான புதிய பிரசார செயற்திட்டம் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது. இப்பிரசார செயற்திட்டத்தின் ஊடாக இலங்கை உள்ளிட்ட பிராந்திய நாடுகளில் வாழ்வோருக்கு சட்டவிரோத ஆட்கடத்தல் என்பது குற்றச்செயல் என்பதைத் தெளிவுபடுத்துவதுடன், அவுஸ்திரேலியாவின் எல்லைகளைப் பாதுகாப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஊடகவியலாளர் சந்திப்பில், சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பான அவுஸ்திரேலியாவின் கொள்கைகள் முன்னரைப் போன்று தற்போதும் கடுமையானதாகவே காணப்படுவதாகவும், படகுகளின் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவை வந்தடைவதற்கு இலங்கையர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்று அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட கொமாண்டர் மேஜர் ஜெனரல் கிரெய்க் பியுரினி மேலும் கூறியதாவது :

சட்டவிரோத படகின் ஊடாக வேறு நாடுகளுக்குச் செல்வதன் மூலம் ஏற்படும் ஆபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தப் புதிய பிரசாரம் அமையும். அத்தோடு ஆட்கடத்தல் மற்றும் பிராந்திய எல்லைப் பாதுகாப்பு என்பன குறித்து இதன்கீழ் அதிக கவனம் செலுத்தப்படும்.

கடந்த மாதம் 29 ஆம் திகதி இலங்கையிலிருந்து 20 சட்டவிரோதக் குடியேற்றவாசிகளுடன் அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த ஆட்கடத்தல் படகொன்று தடுத்து நிறுத்தப்பட்டதுடன், அவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டார்கள். அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவிற்குச் செல்ல முற்பட்ட 41 பேரைக் கொண்ட படகொன்றை இலங்கைக் கடற்படை மீட்டது.

இவையனைத்தும் சட்டவிரோதமானதும், ஆபத்தானதுமான ஆட்கடத்தலை தடுத்து நிறுத்துவதற்கு அவுஸ்திரேலியா ஏனைய பிராந்திய நாடுகளுடன் மிக நெருங்கிய ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருவதையே வெளிப்படுத்துகின்றன.

எமது பிராந்தியத்தில் ஆட்கடத்தலை முற்றாக இல்லாதொழிக்கும் விடயத்தில் இலங்கை மிக நெருங்கிய ஒத்துழைப்பை வழங்கிவரும் பங்காளி நாடு என்பதுடன், அந்த ஒத்துழைப்பு மேலும் தொடர வேண்டும். இத்தகைய குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கு இரு நாடுகளுக்கிடையிலும் தொழில்நுட்ப ரீதியான உதவிகளும் பறிமாறப்படுகின்றன.

கடந்த ஐந்து வருடகாலமாக அவுஸ்திரேலியா செல்வதற்கு முயற்சித்த அனைத்து ஆட்கடத்தல் படகுகளின் நடவடிக்கைகளும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*