அவிசாவளை குண்டு தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது

0
119

கொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும், 3 இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செப்பு வயர் தொழிற்சாலை என்ற பெயரில், இந்த தொழிற்சாலையிலேயே குண்டுகள் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது,

சிறப்பு அதிரடிப்படையினர் நேற்று பிற்பகல் 2.45 மணியளவில், அதனைச் சுற்றிவளைத்து அங்கிருந்த 12 பேரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில், 9 பேர் பாகிஸ்தானியர்கள் என்றும், 3 பேர் இந்தியர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் அவிசாவளையில் உள்ள இலத்திரனியல் கடையொன்றில் பணியாற்றுவதாக விசாரணையின் போது தெரிவித்தனர். எனினும், அவர்கள் கூறியது பொய் என்று காவல்துறையின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

9 பேருக்கு விளக்கமறியல்

நேற்றுமுன்தினம் நடந்த குண்டுவெடிப்புகளை அடுத்து கைது செய்யப்பட்ட 24 சந்தேக நபர்களில், 9 பேர் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் சாலிய அபேரத்ன முன்னிலையில் நிறுத்தப்பட்டனர்.

அவர்களை எதிர்வரும் மே 6ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

வெல்லம்பிட்டிய காவல்துறையினர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போது, ஷங்ரி- லா விடுதியில் தாக்குதல் நடத்திய தற்கொலைக் குண்டுதாரிக்குச் சொந்தமான தொழிற்சாலை தமது பகுதிக்குள்ளேயே இருப்பதாகவும், தெமட்டகொடவில் தற்கொலைக் குண்டுதாரி வெடித்த இடமும் தமது பிரிவுக்குள்ளேயே இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் குண்டுதாரியின் தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள். அவர்களுக்கு தற்கொலைக் குண்டுதாரிகளுடன் தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடத்தப்படுகிறது.

குண்டுதாரியின் மனைவி, சகோதரியும் பலி

ஷங்ரி-லா விடுதியில் தாக்குதல் நடத்திய தற்கொலைக் குண்டுதாரியின் மனைவியும், சகோதரியுமே, தெமட்டகொட வீட்டில் உயிரிழந்த இரண்டு பெண்களாவர் என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

நேற்று நீதிமன்றில் நிறுத்தப்பட்ட 9 சந்தேக நபர்களில் 7 பேர் முஸ்லிம்கள், ஒருவர் சிங்களவர், மற்றவர் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.