“என் மகன் ஜல ஜீவசமாதிதான் அடைந்தான்!” – தி.மலை சிறுவன் மரணத்தில் தீவிர விசாரணை

0
102

`என் மகன், கடவுளின் முழு அருளோடுதான் கிணற்றில் விழுந்து  ஜல ஜீவசமாதி அடைந்திருக்கிறான்” என 16 வயது சிறுவனின் குடும்பத்தினர் கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசலை அடுத்த படைவேடு அருகே, ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்.

அரசுப் பள்ளி ஆசிரியர். இவரது மகன் தனநாராயணன் (16), பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார்.

பத்தாம் வகுப்பில் 465  மதிப்பெண் எடுத்துள்ளார். தனநாராயணனுக்கு வலிப்பு நோய் பிரச்னை இருப்பதால், மேற்கொண்டு படிப்பைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

jala3_06162மேலும், அவர் ஆன்மிகத்தில் அதிக அளவு ஈடுபாடு உள்ளவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த மார்ச் 24-ம் தேதி  கிணற்றில் குதித்து இறந்துள்ளார்.

ஆனால், ‘தனநாராயணன் மக்களின் பார்வைக்குத்தான் இறந்திருக்கிறார். உண்மையில் அவர் மரணமில்லாப் பெருவாழ்வான ஜலசமாதி அடைந்திருக்கிறார்’ என ஒரு சாமியார் கூறியதை ஏற்றுக்கொண்டு அவருடைய பெற்றோர் சிறுவனின் சடலத்தைப் பத்மாசன  நிலையில் அடக்கம்செய்துள்ளார்கள்.

இந்தச் சம்பவம், வீடியோவாக சமூக வலைதளத்தில் பரவவே, தனநாரயணன் இறப்பில் சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால், மாவட்ட ஆட்சியர் கந்தசாமியின் உத்தரவின் பேரில், ஒரு மாதத்திற்குப் பிறகு தனநாராயணனின் உடலைத் தோண்டி பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து தனநாரயணனின் அப்பா ஹரிகிருஷ்ணன் கூறுகையில், “என் மகன் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடுகொண்டவர். அவர் படிப்பதற்கு விருப்பம் இல்லை என்றும், தன்னை சிவானந்த பரமாம்சர் பழனியிடம் சிஷ்யனாகச் சேர்க்கும்படியும் என்னிடம் கூறினார்.

அதனால், அவரை சாமியார் பழனியிடம் அழைத்துச்சென்று உபதேசம் வாங்கிக்கொடுத்தோம். அன்றிலிருந்து தனநாரயணன் முழுமையாக ஆன்மிகத்தில் ஈடுபட்டு சாமியார் ஆவதற்கான பயிற்சியைச் செய்துவந்தார்.

அப்படிச் செய்துவரும் நிலையில், கடவுள் தனக்கு தீட்ஷிதை அளித்துவிட்டார், அதனால் நான் கடவுளிடம் செல்கிறேன் என்று  எனக்கு போனில் மெசேஜ் அனுப்பினார்.

அதன்பிறகு அவர், கிருஷ்ணரிடம் தீட்ஷிதை பெறுவதுபோன்று ஒரு ஓவியத்தை வரைந்து வைத்துவிட்டு, வீட்டுக்கு அருகில் இருக்கும் கிணற்றில் விழுந்துவிட்டார்.

உடனே நாங்கள் தீயணைப்புத் துறைக்கும் 108 ஆம்புலன்ஸுக்கும் தகவல் கொடுத்தோம். அவர்கள் வந்து மீட்டபோது, அவர் இறந்துவிட்டதாகச் சொன்னார்கள்.

உடனே நான் சிவானந்த பரமாம்சர் பழனியிடம் தகவல் சொன்னேன். அவர் வந்து என் மகன் உடலை சோதனை செய்து பார்த்துவிட்டு, ‘இவர் மக்களின் பார்வைக்குத்தான் இறந்துவிட்டார்.

ஆனால், இவர் உண்மையில்  இறக்கவில்லை. மரணமில்லாப் பெருவாழ்வு அடைந்துவிட்டார். ஜீவ சமாதியாகிவிட்டார்’ என்று கூறினார்.

எனவே, என் மகனுக்கு என் நிலத்திலேயே ஜீவசமாதி கட்டினோம்.  என் மகன் ஜலசமாதி ஆனது உண்மைதான்” என்று கூறினார்.

jala2_06591இதுகுறித்து, அந்தப் பகுதி மக்களிடம் பேச்சுக்கொடுத்தோம். “ தனநாரயணனுக்கு அப்பப்போ வலிப்பு வரும். அதற்காக, அவர்கள் பல டாக்டரிடம் கூட்டிக்கொண்டுபோய் ட்ரீட்மென்ட் எடுத்தார்கள்.

ஆனால், அவனுக்கு அது சரியாகவில்லை. அந்த வேதனையில்கூட அவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம். ஆனால், அவரது குடும்பத்தினர் இப்படிச் சொல்வது ஏன் என்று புரியவில்லை.

பழனி என்ற சாமியார் இவர்களது குடும்பத்திற்கு நெருக்கமானவர். அவர்தான் இவர்களை ‘மிஸ்மெரிஸம்’ செய்துள்ளார்” என்றனர்.

இதுகுறித்து ஆட்சியர் கந்தசாமியிடம் கேட்டோம். “ தனநாரயணனுக்கு வலிப்பு வரும் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர் கிணற்றுக்குப் பக்கத்தில் போகும்போது வலிப்பு வந்து விழுந்திருக்கலாம் அல்லது தற்கொலைகூட செய்துகொண்டிருக்கலாம்.

விசாரணை நடத்திவருகிறோம். பிரேதப் பரிசோதனை இன்றுதான் செய்துள்ளோம். ரிப்போர்ட் வந்தவுடன் உண்மை நிலை தெரிய வரும். பழனி சாமியாரைக் கைதுசெய்துள்ளார்கள். அவரிடமும் விசாரணை நடத்திவருகிறோம்” என்றார்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.