40 ஆயிரம் எறும்பு தின்னிகள் கொன்று குவிக்கப்பட்ட பரிதாபம்

0
172

விலங்குகளையும், அவற்றின் உறுப்புகளையும் கடத்துவதைத் தடுக்க பல்வேறு நாடுகளில் கடுமையான சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன.

சோதனை என்பது எவ்வளவு பலமாக இருந்தாலும் அதிகாரிகளின் பார்வைக்குத் தெரியாமல் இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் தினமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

கடந்த வாரம் கொள்கலன் ஒன்றைச் சோதனையிட்ட சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது உள்ளே இருந்த எறும்புத்தின்னியின் செதில்கள். 40-அடி நீள கொள்கலனான அது நைஜீரியாவில் இருந்து வியட்நாமுக்கு அனுப்பப்பட்டிருந்தது.

அதைக் கடந்த வாரம் பாசிர் பன்ஜங் என்ற இடத்தில் வைத்து சோதனையிட்டிருக்கிறார்கள் சுங்கத் துறை அதிகாரிகள்.

`பதப்படுத்தப்பட்ட மாட்டிறைச்சி’ உள்ளே இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனுள்ளே சுமார் 13 தொன் அளவுக்கு எறும்புத்தின்னியின் செதில்கள் மூடைகளில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

230 மூடைகளில் அவை தனித்தனியாகக் கட்டப்பட்டு உள்ளே குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன.

அவற்றின் மதிப்பு 250 கோடி ரூபாவுக்கும் அதிகமாக இருக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.மேலும், அதனுடன் 180 கிலோ அளவுக்கு யானைத் தந்தங்களும் இருந்துள்ளன.

“உலக அளவில் ஒரே இடத்தில் இவ்வளவு அதிக எடையுள்ள எறும்புத்தின்னி செதில்கள் கைப்பற்றப்படுவது அண்மைக் காலத்தில் இதுவே முதல் முறை”என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

அந்தச் சம்பவம் நடந்து ஒரு வாரத்துக்குள்ளாகவே அதேபோல மற்றொரு கொள்கலன் ஒன்றையும் கடந்த வாரம் கண்டறிந்துள்ளனர் சுங்கத்துறை அதிகாரிகள்.கடந்த வாரம் பிடிபட்ட கொள்கலன் போலவே இதுவும் நைஜீரியாவிலிருந்து வியட்நாமுக்கு அனுப்பப்பட்டிருந்தது.

Cassia Seeds என்ற வித்துகள் உள்ளே இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைத் திறந்து பார்க்கையில் 474 மூடைகளில் கட்டப்பட்டிருந்த 12.7 தொன் அளவுக்கு எறும்புதின்னி செதில்கள் இருப்பது அதிகாரிகளுக்குத் தெரியவந்தது.

இவ்வளவு செதில்களுக்காக சுமார் 21,000 எறும்புதின்னிகள் கொல்லப்பட்டிருக்கக் கூடும் என்றும் இவை இரண்டு எறும்புத்தின்னி வகைகளில் இருந்து பெறப்பட்டவை என்ற அதிர்ச்சித் தகவலையும் அதிகாரிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இந்த இரண்டு சம்பவங்களிலும் இருந்து கைப்பற்றப்பட்ட செதில்களின் மொத்த எடை 25 கிலோவுக்கும் அதிகம். எனவே, அதிகாரிகள் குறிப்பிட்டுள்ள கணக்கின்படி பார்த்தால் இதற்காகக் குறைந்தபட்சம் 40,000 எறும்புத்தின்னிகளாவது கொல்லப்பட்டிருக்கக் கூடும்.

10 நாட்களுக்குள்ளாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தக் கடத்தல் பொருட்கள் உலகம் முழுவதும் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.

உலகம் முழுவதிலும் அதிகமாக வேட்டையாடப்படும் விலங்குகளில் எறும்புதின்னிகளே முதலிடத்தில் இருக்கின்றன.

இவற்றின் செதில்கள் மருத்துவத் தன்மை கொண்டவை என நம்பப்படுவதால் அவை அதிகமாக வேட்டையாடப்படுகின்றன.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.