ஒரே நீச்சல் குளத்தில் 102 தேசிய இனத்தவர்கள் – அபுதாபியில் கின்னஸ் சாதனை

0
63

உலக மக்களுக்கிடையில் சகிப்புத்தன்மையை வலியுறுத்துவதற்காக அபுதாபி நகரில் 102 தேசிய இனத்தவர்கள் ஒரே நீச்சல் குளத்தில் ஒரே நேரத்தில் குளித்து புதிய கின்னஸ் சாதனை படைத்தனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் ‘யாஸ் வாட்டர்வேர்ல்ட்’ என்ற பெயரில் மிக பிரமாண்டமான நீர்சறுக்கு பூங்கா கடந்த 2013-ம் ஆண்டு திறக்கப்பட்டது. பல்வேறு நீர்சறுக்கு விளையாட்டுகள், கடலில் முத்துக்குளிக்கும் அனுபவம், விதவிதமான நீச்சல் குளங்கள் என 40 கேளிக்கை அம்சங்கள் இங்கு இடம்பெற்றுள்ளன.

குறுகிய காலத்தில் உலக சுற்றுலாவாசிகளை கவர்ந்த ‘யாஸ் வாட்டர்வேர்ல்ட்’ மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மிகச்சிறந்த நீர்சறுக்கு பூங்கா மற்றும் உலகின் மிகச்சிறந்த நீர்சறுக்கு பூங்கா உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் சமீபகாலமாக மக்களிடையே சகிப்புத்தன்மையின்மையும், வெறுப்புணர்வும் அதிகரித்து வரும் நிலையில், உலகின் பல பகுதிகளில் பல்வேறு மாறுபட்ட மொழிகள் மற்றும் கலாச்சாரங்களை பின்பற்றி வாழும் மக்கள் ஒரே நீச்சல் குளத்தில் குளித்து மகிழும் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ‘யாஸ் வாட்டர்வேர்ல்ட்’ நிர்வாகம் ஏற்பாடு செய்தது.

நேற்று காலை 10 மணியளவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உலக மக்களுக்கிடையில் சகிப்புத்தன்மையை வலியுறுத்தும் வகையில் 102 நாடுகளை சேர்ந்த தேசிய இனத்தவர்கள் ஒரே நீச்சல் குளத்தில் ஒரே நேரத்தில் குளித்து புதிய கின்னஸ் சாதனை படைத்தனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.