யாழ்ப்பாணத்தில் பணியாற்ற ஆர்வம் – உலகின் சிறந்த ஆசிரியை யசோதை!

0
92

அறிவார்ந்த சமுதாயத்தை நோக்கி மாணவர்களை அழைத்துச் செல்லும் பெருங்கனவோடு ஆசிரியப் பணியைத் தேர்ந்தெடுத்த யசோதை செல்வகுமரன், அவுஸ்ரேலியாவின் ‘நியூ சவுத் வேல்ஸ்’ மாநிலத்திலுள்ள ரூட்டி ஹில் உயர்நிலைக் கல்லூரியில் வரலாறு மற்றும் சமூகக் கலாசார ஆசிரியையாகக் கடமையாற்றுகின்றார்.

இவர் சர்வதேச ஆசிரியர்களுக்கான விருதுக்கு (Global Teacher Prize) தேர்ந்தெடுக்கப்பட்டு உலகத்தின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களில் ஒருவராக இடம்பிடித்துள்ளார்.

யசோதையின் தந்தை யாழ்ப்பாணம் உரும்பிராயையும் தாய் வல்வெட்டித்துறையையும் பூர்வீமாகக் கொண்டவர்கள். நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தால் யசோதையின் குடும்பம் கொழும்புக்கு இடம்பெயர்ந்தது. கொழும்பில் பிறந்த யசோதை, 10 மாதக் குழந்தையாக இருக்கும் போது அவுஸ்ரேலியாவுக்குப் புலபெயர்ந்தார்.

தன் கல்வியை அங்கேயே தொடர்ந்தார். ஆரம்ப நாட்களில் பல்வேறு சவால்களைச் சந்தித்த யசோதை, பின்தங்கி வாழும் சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தைக் கல்வியினூடாகவே உயர்த்த முடியும் எனக் கருதி, ஆசிரியத் தொழிலைத் தேர்ந்தெடுத்தார்.

யசோதை என்ற பெயருக்கேற்றாற் போலவே பல மாணவர்களை வளர்த்தெடுத்த பெருமைக்குரிய அவர், கல்வியை முற்று முழுவதும் வணிகமாகப் பார்க்கும் இந்தக் காலத்தில் அவுஸ்ரேலியாவில் உள்ள ஓர் அரச பாடசாலையை தன் கனவை நனவாக்கும் களமாகத் தேர்ந்தெடுத்துள்ளார்.

ஆசிரியர் – மாணவர் உறவு வெறும் பாடப் புத்தகம் சார்ந்ததாக மட்டுமே இருக்கக் கூடாது என்பதிலும், அதனைக் கடந்த ஆத்மார்த்தமான உறவு ஆசிரிய – மாணவர்களுக்கு இடையில் இருக்க வேண்டும் என வலியுறுத்தும் யசோதை அகதிகள், புலம்பெயர்வாளர்கள் மற்றும் அவுஸ்ரேலிய பழங்குடியின மாணவர்களின் சமத்துவமான கல்விக்காகப் போராடுகின்றார்.

இத்தனை மகத்தான விடயங்களைச் சத்தமில்லாமல் சாதித்திருக்கும் யசோதையை லண்டனைத் தலைமையகமாகக் கொண்ட ‘The Varkey Foundation” எனும் அமைப்பே அடையாளம் கண்டுள்ளது.

பத்து இறுதிப் போட்டியாளர்களில் முதலாவது இடத்தைப் பெறும் ஆசிரியர் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பரிசாகப் பெறுவார். எதிர்வரும் 24 ஆம் திகதி இந்தச் சாதனைக்கான பரிசுத்தொகை டுபாயில் வைத்து வழங்கப்பட உள்ளது.

இதில் யசோதையே வெற்றிபெற வேண்டும் என்ற ஈழத்தமிழர்களின் பெருவிருப்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டு, மகளிர் தின சிறப்பிதழுக்காக அவரை நேர்கண்டோம்.

கேள்வி: இந்தப் போட்டியான வாழ்க்கைச் சூழலில் அதிகம் லாபமீட்டும் துறைகளை நோக்கி எல்லோரும் ஓடிக்கொண்டிருக்க, ஆசிரியத்துறையை நீங்கள் எதற்காகத் தேர்ந்தெடுத்தீர்கள்?

பதில்: ஆரம்பத்தில் வரலாற்றைக் கற்பதே எனக்கு விருப்பமாக இருந்தது. அப்போது நான் ஆசிரியத்துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சரியானதொரு தீர்மானம் இல்லாமல் தான் இருந்தேன்.

பல்கலைகழகம் சென்ற பின்னர் மாணவர்களோடு இணைந்து நிறைய வேலை செய்யும் வாய்ப்புகள் கிடைத்தன. 3 உயர் கல்லூரிகளில் பணியாற்றினேன். படிக்கும் காலத்திலேயே மாணவர்களோடு இணைந்து பணியாற்றிய அந்த அனுபவம் தான் ஆசிரியத்துறை மீதான என்னுடைய ஆர்வத்துக்கான அடித்தளம் என்று நினைக்கின்றேன்.

பின்னர் பயற்சி ஆசிரியராக செல்லும் போதே இது தான் என்னுடைய துறை என முடிவு செய்துவிட்டேன். கல்வியால் மட்டுமே மிகப்பெரிய சமூக மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்ற இந்த நம்பிக்கை தான் இந்தத் துறையை நான் தேர்ந்தெடுக்க மிகப் பிரதான காரணம் .

கேள்வி- உலகின் தலைசிறந்த பத்து ஆசியர்களுள் ஒருவர் என்ற மிகப்பெரிய அங்கீகாரம் உங்களுக்குக் கிடைத்துள்ளது. நீங்கள் கற்பிக்கும் பாடசாலையில் உங்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவு எவ்வாறு உள்ளது?

பதில்: பாடசாலைகளைப் பொறுத்தவரை மாணவர்களின் மதிப்பெண்களையும் கீழ்ப்படிதலையும் மட்டுமே முதன்மைப்படுத்துகின்ற நிலைமை உள்ளது. எங்கள் பாடசாலை இதிலிருந்து மாறுபட்டுச் செயற்படுகின்றது. வெறுமனே புத்தகக் கல்வியோடு நின்றுவிடாமல், வாழ்வியலைக் கற்றுக் கொடுக்கின்றோம்.

ஒவ்வொரு மாணவர்களினதும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அறிந்து வைத்திருக்கின்றோம். அப்போது தான் ஒரு சிறந்த மாணவனை உருவாக்க முடியும். படிக்கவில்லை, பரீட்சையில் மதிப்பெண் குறைவு என்றால் அதற்கான காரணத்தைக் கேட்டறிவேன்.

பின்னர் அதை எவ்வாறு சரி செய்வது என்று யோசனை கூறுவேன். இவ்வாறு மாணவர்களோடு தோழமை உணர்வுடன் இருப்பதால், அவர்கள் தங்கள் பிரச்சினைகளைத் தயக்கமின்றிப் பகிர்ந்து கொள்கின்றனர். மாணவர்களின் பெற்றோரை அடிக்கடி சந்தித்து உரையாடுவேன்.

54361781_1514632435338328_9157253776996827136_nகேள்வி- 10 மாதக் குழந்தையாக அவுஸ்ரேலியாவுக்குப் புலம்பெயர்ந்து, தமிழ் மக்கள் அதிகமில்லாத பகுதியில் வாழ்ந்தும் படித்தும் உள்ளீர்கள். ஆனால், இவ்வளவு அழகாகத் தமிழைப் பேசுகின்றீர்களே. இந்தத் தமிழார்வம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

பதில்: என்னுடைய தமிழார்வத்துக்குப் பிரதான காரணம் அப்பம்மா தான். எனக்கு 4 வயதாக இருக்கும்போது இலங்கையில் இருந்து என்னுடைய அப்பம்மா அவுஸ்ரேலியாவுக்கு வந்தார். அவர் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்வார். ஆனால், பேசமாட்டார். அவரோடு தமிழில் தான் பேச வேண்டும் என்ற தேவை இருந்தது. அதைவிட நாங்கள் வீட்டில் இருக்கும்போது தமிழில் தான் பேச வேண்டும் என அம்மா, அப்பா இருவரும் கண்டிப்போடு கூறியிருந்தார்கள். இவை மட்டுமல்ல, தமிழ்த் திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்தவர்கள் நாங்கள் .

கேள்வி: உங்களுடைய பாடசாலை மாணவர்களைப் பற்றி, அவர்களின் பின்னணி பற்றிக் கூறமுடியுமா?

பதில்: இந்தக் கல்லூரியில் கல்வி கற்கும் 80 வீதமான மாணவர்கள் அகதிகளாகவும் பல்வேறு நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்தவர்களாகவுமே உள்ளனர். குறிப்பாக அவுஸ்ரேலிய பழங்குடியினர் கல்வியின் மீது மிகவும் நாட்டம் குறைந்தவர்கள் . அவர்கள் மிகவும் பின்னிலையில் உள்ள ஒரு சமூகம். ஆனால், ரூட்டி ஹில் கல்லூரியில் சுமார் 65 வரையான பழங்குடியின மாணவர்கள் கல்வியை விரும் பிக் கற்கின்றனர்.

கேள்வி: ‘ Varkey Foundation”அமைப்பினால் வழங்கப்படும் சர்வதேச ஆசிரியர்களுக்கான விருது (Global Teacher Prize) பற்றி?

பதில்: லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ‘The Varkey Foundation” எனும் அமைப்பே இந்த விருது நிகழ்வை வருடா வருடம் நடாத்தி வருகின்றது. முன்னதாக உலகின் தலைசிறந்த ஐம்பது ஆசிரியர் தேர்வு இடம்பெற்றது.

அதில் 179 நாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற பத்தாயிரத்துக்கும் அதிகமான பரிந்துரைகளிலிருந்தே பத்துப் பேர் தெரிவு இடம்பெற்றது. இதில் முதலாவது இடத்தைப் பெறும் ஆசிரியர் ஒரு மில்லியன் அமெரிக்க டொலரைப் பரிசாகப் பெறுவார். எதிர்வரும் 24 ஆம் திகதி இந்தச் சாதனைக்கான பரிசுத்தொகை டுபாயில் வைத்து வழங்கப்படவுள்ளது.

கேள்வி: இந்த ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை நீங்கள் வென்றால் அந்தப் பணத்தை வைத்து என்ன செய்வதாகத் திட்டமிட்டுள்ளீர்கள்?

பதில்: மாணவர்களின் கல்வியில் வளர்ச்சியை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு அந்தப் பணத்தின் மூலம் பங்களிப்புச் செய்யலாம் என எண்ணியிருக்கின்றேன். முதல் பரிசு கிடைக்காவிட்டாலும் அதையிட்டு வருத்தப்பட மாட்டேன். சிறந்த ஆசிரியர் என்ற இந்த மிகப்பெரிய அங்கீகாரமே எனக்குப் போதுமானது. நான் கற்பிக்கும் மாண வர்கள் சமூகத்தில் நல்ல நிலையில் இருப்பதையே எனக்கான மிகப்பெரிய விருதாக என்ணுகின்றேன்.

கேள்வி: ஒரு நல்ல ஆசிரியரால் தான் நற்சமூகத்தை உருவாக்க முடியும். அத்தகைய உன்னதமான தொழிலைச் செய்யும் ஆசிரியர்கள் மற்றும் கல்விச் சமூகத்துக்குக் கூறவிரும்புவது?

பதில்: எமது சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரினதும் செயல்களிலும் ஒட்டுமொத்த ஆளுமையிலும் அவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களும், பாடசாலைகளும் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றனர். இந்த மகோன்னதமான இடத்தில் இருக்கும் ஒவ்வொரு ஆசிரியர்களும் தம் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும்.

கல்வியை முற்றுமுழுவதும் வணிகமாகப் பார்க்கும் நிலைமை மாறவேண்டும். வெறும் பாடப்புத்தகத்தைக் கற்பித்து சிறந்த மதிப்பெண் பெற வைப்பதோடு ஓர் ஆசிரியரின் கடமை முடிந்து விடுவதில்லை. மாணவர்களின் ஆளுமையை வடிவமைப்பதுதான் சிறந்த கல்வி . அதனை ஒவ்வொரு ஆசிரியர்களும் உணர்ந்து செயற்படவேண்டும்.

நாட்டுக்கு நல்ல பிரஜைகளை உருவாக்கிக் கொடுக்கும் பொறுப்பான இடத்தில் இருப்பவர்கள் ஆசிரியர்கள். பாடப்புத்தகத்தைத் தாண்டி பல விடயங்களை மாணவர்களுடன் உரையாட வேண்டும். ஆனால், இப்போது கல்வி சார்ந்த மதிப்பீடுகள், விழுமியங்கள் எல்லாம் மாறிவிட்டன. இந்த நிலைமை மாறவேண்டும்.

கேள்வி: நீங்கள் ஈழத்தைச் சேர்ந்தவர். யுத்தத்துக்குப் பின்னரான ஈழத்துக் கல்விச் சூழல் பற்றி அறிந்திருப்பீர்கள். சந்தர்ப்பம் கிடைத்தால் இங்கு பணியாற்றுவீர்களா?

பதில்: உண்மை தான். என்னுடைய உறவுகள் எல்லோரும் இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத் தில் தான் வாழ்கின்றார்கள். அங்கு பணியாற்ற நான் ஆர்வமாக உள்ளேன். எதிர்காலத்தில் இங்கு வருவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தால் ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்குவது தொடர்பில் யோசித்து வைத்திருக்கின்றேன். பார்க்கலாம்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.