“தீர்வு குறித்து ஆராய தயாராகும் பெரும்பான்மை தலைமைகள் சமஷ்டியை ஆராயத் தயாராக இல்லை என்ற காரணியே தீர்வுக்கு பிரதான தடையாக உள்ளது”
இலங்கையின் அரசியல் நெருக்கடி மற்றும் தீர்வுக்கான முயற்சி என்பது இன்று நேற்று பேசப்பட்டு வரும் விடயமல்ல. கடந்த மூன்று தசாப்த கால யுத்தத்தின் பின்னர் அவசியமான ஒன்றாகவும் அதற்கு முன்னர் இருந்தும் இதற்கான தேவையும் நோக்கமும் உருப்பெற்றுவிட்டது.
இலங்கை சுதந்திரப் போராட்டத்தை மட்டுமல்ல, உள்நாட்டு யுத்தத்தையும் எதிர்கொண்டு மிகச்சிறந்த அனுபவங்களை கொண்டுள்ளது. இனப்பிரச்சினை மற்றும் ஆயுதப் போராட்டம் என்பவற்றை மிக நீண்ட காலமாக எதிர்கொண்டு அதில் இழப்புக்களை பெருவாரியாக சந்தித்து நாட்டின் சகல மக்களும் வலிகளை சந்தித்த வரலாற்று பாடம் எமக்கு உண்டு.
கடந்த கால கசப்பான அனுபவங்களை கொண்டு அதிலிருந்து விடுபட்டு தீர்வுகளை நோக்கிய பாதையில் பயணிக்க வேண்டும் என்ற தெளிவான சிந்தனை உருப்பெறத் தொடங்கியவுடன் இந்த நெருக்கடிகளின் போதும் நெருக்கடிகளின் பின்னரும் தீர்வுகளை எட்ட அரசாங்கமும் சரி தமிழர் தரப்பும் சரி பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தன. இதில் சில நேரங்களில் தீர்வுகள் கையளவில் எட்டவிருந்த சந்தர்ப்பங்கள் தமிழர் தரப்பினரால் தவறவிடப்பட்டன. அதேபோல் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிங்களத் தரப்பினர் தீர்வுகளை குழப்பியும், நிராகரித்தும் சென்றுள்ளனர்.
எனினும் நீண்ட காலமாக அரசியல் பிரச்சினைகள் குறித்து எடுத்த முயற்சிகளின் விளைவுகள் எந்தளவு வெற்றி பெற்றன என்றால் அது கேள்வியே. எனினும் அரசியல் தீர்வு என்ற விடயத்தில் புதிய அரசியலமைப்பின் தேவை மற்றும் அதற்கான முயற்சிகள் என்பதே பிரதானமானதாகும். எப்போது சிங்கள தேசமெனும் தனி சிந்தனை சிங்கள தரப்பினரால் முன்வைக்கப்பட்டு அதற்கான அரசியல் வரைவு ஒன்று உருவாக்கப்பட்டதோ அன்றிலிருந்து நெருக்கடியும் முரண்பாடுகளும் உக்கிரமடைய ஆரம்பித்துவிட்டன.
அரசியலமைப்பு நாட்டின் ஜனநாயக பாதையின் அடிப்படையாகும். இனங்களை ஒன்றிணைக்க, நாட்டினை கட்டியெழுப்ப ஆரம்பப்புள்ளி அரசியலமைப்பில் இருந்து தொடங்குகின்றது. வெற்றிபெற்ற நாடுகளின் முற்றுப்புள்ளியும் கூட அரசியல் அமைப்பேயாகும். நாம் பல்லின சமூகம், இதில் சிங்களவர்கள் பெருமளவில் வாழ்வதால் அவர்கள் பெரும்பான்மை, தமிழ் பேசும் மக்கள் குறைந்த அளவில் வாழ்வதால் நாம் சிறுபான்மையினர். இது எண்ணிக்கை அடிப்படையில் கருதப்படுகின்றதே தவிர தமிழ்ப் பேசும் மக்களுக்கு உரிமைகளை வழங்குவதிலோ சுதந்திர பாதையை உருவாக்கிக்கொடுப்பதிலோ சிறுபான்மைத் தனமாக சிந்திக்கக்கூடாது.
எனினும் இன்றுவரை இந்த நாட்டில் மூவினத்தவரையும் ஒன்றிணைக்க முடியாமல் போயுள்ளதென்றால் அதற்கு இந்த பாகுபாடே காரணமாகும் எனலாம். தொடர்ச்சியாக ஒரு இனம் தம்மை மேதாவியாகக் காட்டிக்கொண்டு ஏனையவர்களை அடிமைகளாக நினைக்க தொடங்கியதன் விளைவுகள், பாதுகாப்பு என்ற பெயரில் சிறுபான்மையினரின் உரிமையை பறித்தமை என்ற காரணிகள் மட்டுமல்லாது கல்வித்தகைமையை, ஆளுமையை திட்டமிட்டு அழித்தமை போன்ற காரணிகள் முரண்பாட்டுக்கான பலமான அடித்தளத்தை அமைத்தன.
எவ்வாறிருப்பினும், இன்றைய அரசியல் நெருக்கடிக்கு சமஷ்டி முறைமை தீர்வாக அமையும் என்பதே சிறுபான்மைக் கட்சிகளின் நிலைப்பாடாக இருந்து வருகின்றது. அதனையே அவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தியும் வருகின்றனர். தமிழர் தரப்பு தனி அடையாளமாக தனி அதிகாரங்களை கொண்டு செயற்படுவது உரிமையை பாதுகாக்கும் என்பதே அதன் அர்த்தம். ஆனால் தீர்வு குறித்து ஆராய தயாராகும் பெரும்பான்மைத் தலைமைகள் சமஷ்டியை ஆராய தயாராக இல்லை என்ற காரணியே தீர்வுக்கு பிரதான தடையாக உள்ளது.
எவ்வாறிருப்பினும் இன்று தீர்வுகள் குறித்து பேசுவதும் புதிய அரசியலமைப்பின் மூலமாக தீர்வுகளை எட்ட நினைப்பதும் நல்லாட்சி அரசாங்கத்திலேதான் முதல் முயற்சி என்றல்ல. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதிலிருந்து புதிய அரசியலமைப்பு ஒன்றின் தேவை பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்தந்த அரசாங்கங்கள் முன்வைத்த காரணியேயாகும். எனினும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிரதான இரண்டு கட்சிகளுமே அரசியலமைப்பின் இறுதி வடிவத்தை ஏதோ ஒரு காரணம் காட்டி நிராகரித்து அல்லது தீர்வை குழப்பிவிட்டன.
அரசியல் தீர்வு ஒன்றுக்கான முயற்சியானது வரலாற்றைக் கடந்த கால கசப்பம்சங்களை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கூறியே செல்கின்றன. அவ்வாறான நிலையில் நல்லாட்சி என ஆரம்பிக்கப்பட்ட அரசாங்கத்தில் மீண்டும் புதிய அரசாங்கம் என்ற முயற்சி பலமடைய ஆரம்பித்தது. ஆனால் கடந்த கால முரண்பாடுகளை போல் அல்லாது பிரதான இரண்டு கட்சிகளின் ஆதரவுடன் ஒரு ஆரோக்கியமான நம்பிக்கையை உருவாக்கக்கூடிய முயற்சியாக நடைபோட்டது.
புதிய அரசியலமைப்பு குறித்து இதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளில் தமிழர் தரப்பு கொண்டிராத அக்கறை இம்முறை அதாவது 2015 ஆம் ஆண்டிற்கு பின்னர் அவர்களால் கையாளப்பட்டது. இன்றும் தமிழர் அரசியல் தலைமைகள் அதற்கான முழு முயற்சியை முன்னெடுத்து வருகின்றனர் என்பதே உண்மையாகும். குறிப்பாக புதிய அரசியலமைப்பு குறித்த கட்சிகளின் முன்மொழிவுகள் மற்றும் சிவில் அமைப்புகள், பொதுமக்களின் கருத்துகளை திரட்டும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டு இன்று அவற்றை ஒன்றிணைத்து பாராளுமன்ற வழிநடத்தல் குழுவினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் பாராளுமன்ற தமிழ்ப் பிரதிநிதித்துவக் கட்சிகள் மிகவும் இலகுவான போக்கினை கையாண்டு தீர்வு என்ற நோக்கத்தை எட்ட முழுமையாக முயற்சித்து வருகின்றனர் என்பது அவர்களின் முன்மொழிவுகளில் தெட்டத்தெளிவாக அவதானிக்க முடிகின்றது. புதிய அரசியலமைப்பினை எந்த வழியிலேனும் உருவாக்கி அதில் தமிழர் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கம் புலப்பட்டுள்ளது.
அரசியலமைப்பே இலங்கையின் உச்ச சட்டமாக இருக்கும் என்ற முதல் அங்கீகாரத்தில் இருந்து இலங்கை அரசாங்கம் ஓர் ஐக்கிய, பிரிக்க முடியாத மற்றும் பிரிக்கப்படாத நாட்டின் கட்டமைப்பிற்கு உள்ளாக ஓர் சமஷ்டி அரசாக இருக்கும், மாகாணங்களின் மையமானது அரசியலமைப்பின் ஏற்பாடுகளின் பிரகாரம் தமக்கு தகுதி வாய்ந்த விடயங்களில் பிரத்தியேக அதிகாரத்தை செயற்படுத்தும்.
மத்திய அரசாங்கத்தை நிராகரிக்காத அதேநேரம் மாகாணங்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கம் அவர்களின் முன்மொழிவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேபோல் இலங்கையின் மதம் என்ற விடயத்தில் இலங்கை ஒரு மதச் சார்பற்ற நாடாக இருத்தல் வேண்டும் என்பதாகும். எனினும் பௌத்த மதம் பிரதான மதமாக பெரும்பான்மை தரப்பு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் நிபந்தனை மற்றும் விதிமுறைகளுக்கு அமைய அதனை கையாள முடியும் என கூறுகின்றனர்.
மாகாண சபைகளை பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது என்பதே உண்மையாகும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒரு மாகாணமாக அரசாக உருவாக்கப்பட வேண்டும். அதுவும் சகல மக்களும் சமமாக நடத்தப்படுவதை உறுதி செய்யக்கூடிய போதியளவு பாதுகாப்புகள் இருத்தல் வேண்டும் என உறுதியான நிலைப்பாட்டில் அவர்கள் உள்ளனர்.
எனினும் இந்த நிலைப்பாட்டிற்கு எந்தவொரு முஸ்லிம் அரசியல் தரப்பும் தயாரில்லை என்ற காரணியும் சுட்டிக்காட்டப்படவேண்டியதாகும். அரசியலமைப்பு குறித்த முஸ்லிம் தரப்பின் முன்மொழிவுகளில் இலங்கையின் மாகாணங்கள் ஒன்பதாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் உறுதியான நிலைப்பாடாகும். அத்துடன் அவ்வாறு இணைக்கும் முயற்சியை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அமைப்போ முயற்சிக்க இடமளிக்கக் கூடாது என்பதை அவர்களின் முன்மொழிவுகளாக முன்வைத்துள்ளனர்.
அதேபோல் ஆளுநர் விவகாரத்திலும் மத்திய அரசாங்கத்திற்கும் மாகாணங்களுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான சீரான தொழில்முறை உறவொன்றை உறுதிசெய்வதற்காக முயற்சிக்க வேண்டும் என்பதுடன் மாகாணங்களின் நிறைவேற்று அதிகார பிரயோகத்தில் தலையிடுவதற்கான எந்தத் தத்துவத்தையும் கொண்டிருத்தலாகாது. ஆளுநரின் தத்துவங்கள் அரசியலமைப்பில் தெளிவாக வரையறுக்கப்பட்ட வேண்டும் என்ற காரணிகளை தமிழர் தரப்பு தெட்டத்தெளிவாக உயரிய சபையில் முன்மொழிந்துள்ளது.
இந்த காரணிகள் ஒன்றும் நாட்டினை பங்குபோடும் கோட்பாடுகள் அல்ல. தமிழர் தரப்பு இவற்றை முன்வைக்க முன்னரே சிங்கள தலைமைகள் சர்வதேசத்திடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் உயரிய அதிகார பகிர்வுகள் குறித்து வாக்குறுதிகளை கொடுத்துள்ளனர். யுத்தத்தின் பின்னர் அதியுச்ச அதிகாரப் பகிர்வு பற்றி கூறியவர்கள்தான் இவர்கள். ஆனால் நிறைவேறாத வாக்குறுதியாகவே அனைத்தும் நீடிக்கின்றமையே வருத்தமளிக்கிறது.
தீர்வு என்ற விடயத்தில் இன்னமும் தமிழர் தரப்பின் வலிகளை, அவர்களின் உணர்வுகளை சிங்களப் பெரும்பான்மை சமூகமோ தலைமைகளோ முழுமையாக உணர்ந்துகொள்ளவில்லை என்பதே உண்மையாகும். ஒரு நாட்டுக்குள் தமிழர் தரப்புடன் வாழ சிங்கள மக்களே அச்சம் கொள்கின்றனர். காரணம் கேட்டால் ஆயுத வரலாற்றை கூறுகின்றனர். இன்று ஜனநாயகம் பேசும் சிங்கள தலைமைகள், சுதந்திர தின கொண்டாட்டங்களில் ஈடுபடும் சிங்கள தரப்பினர் அவற்றை உணர்வுபூர்வமாகத்தான் கொண்டாடுகின்றனரா என்றால் இல்லை என்றே கூற வேண்டும்.
தேசியவாதிகள் என்ற போர்வையில் இனவாதத்தை கக்குவது ஜனநாயகமாம். எது ஜனநாயகம்? எமது உணர்வுகளுக்கு எமது உரிமைகளுக்கு இடம்கொடுக்காது ஒட்டுமொத்த இனத்தையும் அடக்கிவைத்து ஆள நினைப்பதன் பெயர் ஜனநாயகமா? எனது பசிக்கு சோறு வேண்டும் என கேட்கக் கூட எமது இனத்துக்கு உரிமை இல்லையா? நான், எனது மண்ணின் உற்பத்தியை சுயேச்சையாக கையாள உரிமை இல்லையா? இதுவா 70 ஆண்டுகால சுதந்திர இலங்கையின் ஜனநாயக போக்கு என்ற காத்திரமான கேள்வி தமிழர் தரப்பில் எழுந்துவிட்டது.
தமிழர்கள் உரிமையை கேட்டால் தனி நாடு கேட்கின்றனர் என விமர்சனம் முன்வைக்கின்றனர். நாங்கள் இலங்கையர்கள் எனக் கூறிக்கொண்டுதான் இருக்கின்றோம். அவர்கள்தான் எம்மை இலங்கையர்களாக ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. பிரிவினைவாதிகள் பிரிவினைவாதிகள் என அவர்கள்தான் எங்களைப்பார்த்து கூறிக்கொண்டுள்ளனர்.
குறிப்பாக பெளத்த வாதம், அறம், விட்டுகொடுப்பு, அமைதி என போதித்த கௌதம புத்தரின் சிந்தனையை மீறிய அடிப்படை வாதமும் அடக்குமுறையும் இன்று விதைக்கப்பட்டு அதுவே ஆட்சியையும் தீர்மானிக்கும் நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. தீர்வுகளை சிந்திக்கும் அதனை முன்வைக்க முனையும் சகல சந்தர்ப்பங்களையும் தனிநாட்டு கோரிக்கை என சிறுபான்மையினரின் வாய்களை மூடிவிடுகின்றனர்.
தனி நாட்டு ஆசையை காட்டியதும் சிங்களவர், வடக்கு கிழக்கு தனி அழகாக பார்ப்பதும் அவர்களே. நீங்களே எங்களை ஒதுக்கிவிட்டு, ஓரங்கட்டிவிட்டு விட்டால், அப்போது நாம் எவ்வாறு இணைய முயற்சிப்பது? நினைக்கக்கூட முடியாதே என்ற கேள்வி நியாயமானது தானே. நீங்கள் எங்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளவில்லையே. பின்னர் எப்படி நாங்கள் நேசிப்பது என்ற கேள்வி தமிழர் மத்தியில் எழுவது ஒன்றும் புதியதல்லவே?
நீங்கள் எங்களை ஈழத்தவர் என கூறுவதும் தமிழர் என கூறுவதும் தேசிய வாதம் என்றால் நாங்கள் எங்களை தமிழர், ஈழத்தவர் என கூறினால் பிரிவினைவாதிகளா? அடிவாங்கி அழும் பிள்ளைக்கும் ஆசையில் அழும் பிள்ளைக்கும் இடையில் வித்தியாசம் உண்டு. நாம் அடிவாங்கி அழும் பிள்ளைகள் எமக்குத்தான் வலிகளினதும் சுமைகளினதும் அர்த்தம் விளங்கும். அதனை உணர வேண்டியது பேரினவாத தலைமைகளின் கடமை. உணர்த்திக்கொண்டுதான் இருக்கின்றோம். உணர்ந்தும் ஒரு சுயநல நோக்கத்துக்காக பேரினவாதம் காதுகளை மூடிக்கொண்டுள்ளது. நாம் பயங்கரமானவர்கள் அல்ல என்பது தெரிந்தும் எம்மை பயங்கரவாதிகளாக உருவகப்படுத்திவிட்டீர்கள்.
தமிழ்த் தலைமைகளின் நோக்கம் ஒன்றுதான். அரசியல் நெருக்கடிக்கு தீர்வு வேண்டும். அதற்கு புதிய அரசியலமைப்பு ஒரு வாய்ப்பாக அமையும் என்பதே நிலைப்பாடு. அந்த நோக்கம் இருப்பவன் கையில் ஒருநாள் ஆட்சி கிடைக்க வேண்டும். நோக்கம் இல்லாத தலைமைகளின் கைகளில் ஆட்சி அதிகாரங்கள் தொடர்ச்சியாக சென்றடைகின்றது. தீர்வுகள் நோக்கிய பயணத்தை முன்னெடுக்கும் போதே ஏதோ ஒரு சக்தி அதனை தடுக்கின்றது. அதனை தாண்டி எந்தவொரு அரசியல் தலைமையினாலும் செயற்பட முடியாது போகின்றமையே இன்றுவரை சாபக்கேடாக அமைந்து வருகின்றது. அவ்வாறு இருக்கையில் புதிய அரசியலமைப்பு எப்போது உருவாவது?