பாகிஸ்தான்: மணமகளின் பெயர் திருமண அழைப்பிதழில் இடம்பெறாத விநோதம்

0
113

பாகிஸ்தானின் கைபர் பாக்துங்க்வா மாகாணம் சார்ஷ்தா மாவட்டத்தை சேர்ந்த ரெளஃப் கான் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவருக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிவிட்டது.

வெளிநாட்டில் பணிபுரியும் அவரது மனைவி, பாகிஸ்தான் மற்றும் பணிபுரியும் நாட்டில் வசிப்பதற்கான இரு நாட்டு குடியுரிமை இருக்கிறது.

திருமணத்திற்கு பின் மனைவியுடன் வெளிநாட்டில் வசிப்பதுதான் அவர்களுடைய முடிவு. ஆனால் அதற்கான ஆவணங்களில் ஏற்பட்ட சிக்கல் கணவன் மனைவியை ஒன்று சேரவிடாமல் தடுக்கிறது.

விசா பெறுவதற்கு தேவையான ஆவணங்களில் திருமண அழைப்பிதழும் ஒன்று. ஆனால் ஆண் ஆதிக்க சமுதாயத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதில்லை.

திருமண அழைப்பிதழில் மணமகனின் பெயர் இடம்பெறும். ஆனால் மணமகளின் பெயருக்கு பதிலாக, அவரது தந்தையின் பெயர் இடம்பெறும். அதாவது குறிப்பிட்ட ஒருவரின் மகளுக்கு திருமணம் என்பதுதான் திருமண அழைப்பிதழில் இடம்பெறும்.

திருமண அழைப்பிதழை பார்ப்பவர்களுக்கு அது அந்த தந்தையின் மூத்த மகளா, இளைய மகளா இல்லை இரண்டாம் தாரத்து மகளா என்பது தெரியாது. அது அவசியமும் இல்லை என்பதே அந்த பகுதியில் சம்பிரதாயமாக தொடர்கிறது.

ரெளஃப்பின் திருமண அழைப்பிதழிலில் அவரது பெயரும், அவரது மாமனாரின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. மணப்பெண்ணின் பெயர் இடம்பெறாததால் விசா பெறுவதில் ஏற்பட்ட சிக்கல், தம்பதிகளை ஒன்றாக சேரவிடாமல் தடுக்கிறது.

சமூக கட்டுப்பாடு’

நீங்கள் படித்தவர்தானே? அதிலும் உங்கள் மனைவி வெளிநாட்டில் வேலை செய்கிறார். ஏன் மனைவியின் பெயரை திருமண அழைப்பிதழில் போடவில்லை என்று கேட்டோம்.

சற்று சிந்தித்த பிறகு பதிலளிக்கும் ரெளஃப், சமூகத்தில் இருக்கும் வழக்கத்தை எப்படி மாற்றுவது என்று கேட்கிறார். எந்த குடும்பத்தில் இருந்து பெண் எடுக்கிறோம் என்பது தெரிந்தால் போதும், பெண்ணின் பெயரோ அடையாளமோ தேவையில்லை என்பது எங்கள் சமூகத்தின் வழக்கம்.

இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படும் என்று தோன்றவேயில்லை, தெரிந்திருந்தால் என் மனைவியின் பெயரை அழைப்பிதழில் போடச் சொல்லி கட்டாயப்படுத்தியிருப்பேன் என்று சொல்கிறார்.

மணமகளின் பெயர் மட்டுமல்ல, அவரது தாயின் பெயரும் திருமண அழைப்பிதழில் இடம்பெறாது என்கிறார் ரெளஃப். அதாவது ஒரு ஆணின் மகளுக்கு திருமணம் என்ற அளவுக்கு தகவல் மட்டுமே தெரிவிக்கப்படும்.

மூத்த மகளா, இளைய மகளா, மனைவியின் பெயர் என்ன, முதல் மனைவியா, இரண்டாவது மனைவியா என்ற தகவல்கள் யாருக்கும் தேவையற்றவை.

102094084_7fa4e3ca-6bb5-4b41-934c-985ea272e89bஆணை பிரதானப்படுத்தும் மனப்போக்கு

இதுபற்றி, பெஷாவரில் பிரிண்டிங் பிரஸ் நடத்திவரும் ஜாவேத் கானிடம் இதுதொடர்பாக பேசினோம். ரெளஃபின் கருத்தை ஆமோதிக்கும் அவர், அச்சடிக்கப்படும் 80 சதவிகித திருமண அழைப்பிதழ்களில் மணமகளின் பெயர் இடம்பெறுவதில்லை என்பதை ஒப்புக்கொள்கிறார்.

பரவாயில்லையே, மீதி 20 சதவிகித அழைப்பிதழ்களில் பெண்களின் பெயர் இடம் பெறும் அளவுக்கு மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா என்று விசாரித்தோம்.

ஆனால் மிஞ்சியது ஏமாற்றமே. ஆங்கிலத்தில் அச்சடிக்கும் திருமண அழைப்பிதழ்களில்தான் மணமகளின் பெயர் இடம்பெறும் என்று சொல்லும் அவர், அதுபோன்ற குடும்பங்கள் மெத்த படித்த குடும்பங்களாகவோ அல்லது நவீனமான, பணக்கார குடும்பங்களாகவோ இருக்கும் என்கிறார்.

ரெளஃப் பட்டப்படிப்பு படித்தவர், அவரது குடும்பத்தில் பலர் படித்தவர்கள். ஆனால், பெண்ணின் பெயர் அழைப்பிதழில் இடம்பெறுவது தரக்குறைவான செயல் என்ற எண்ணம் இருப்பதை மாற்றமுடியவில்லை. சமூகத்தில் புதிய பழக்கத்தை அறிமுகப்படுத்துவதற்கு தயக்கம் இருப்பதை அவர் ஒப்புக்கொள்கிறார்.

இந்த மனநிலை குறித்து பெஷாவரில் தொலைகாட்சி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஜீவத் பீப் என்ற பெண்ணிடம் பேசினோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனக்கு திருமணம் நடைபெற்றதாக கூறும் அவர், தனது திருமண அழைப்பிதழில் தனது பெயர் இடம்பெற்றதாக சொல்கிறார்.

தந்தை அல்லது கணவரின் சொத்தாகவே ஒரு பெண் பார்க்கப்படுவதாகவும், பெண்ணின் அடையாளம் ஆணைச் சார்ந்தே இருக்கவேண்டும் என்ற ஆணாதிக்க சமுதாயத்தின் வெளிப்பாடுதான் இது என்று கூறுகிறார் ஜீவத்.

இதைவிட கொடுமையான விஷயம் என்னவென்றால், சில இடங்களில் ஒரு பெண்ணின் அடையாள அட்டையில்கூட அவளது பெயர் இடம்பெறாது, தந்தை அல்லது கணவரின் பெயர்தான் இடம்பெறும் என்று அவர் சொல்வதை கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறது.

“சமுதாயத்தின் கட்டமைப்பே ஆணை அடிப்படையாக கொண்டிருக்கிறது. இதனால்தான் பெண்கள் அடையாளமற்று இருக்கிறார்கள். ஒரு ஆணின் சொத்துதான் பெண் என்ற மனோபாவம் காலம்காலமாக தொடர்கிறது.”

பெஷாவரில் பெண்களின் உரிமைகளுக்காக பணியாற்றும் சிஸ்டர்ஸ் ஹவுஸ் என்ற அமைப்புடன் இணைந்து பணியாற்றும் லீலி ஷா நவாஸ் இவ்வாறு கூறுகிறார், “எங்கள் சமுதாயத்தில், குடும்ப கௌரவத்திற்குதான் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது,

அதுமட்டுமல்ல, ஒரு பெண்ணுக்கு அடையாளம் கொடுப்பதோ, அவரது பெயர் வெளிவட்டாரத்தில் உச்சரிக்கப்படுவதோ, குடும்பத்தின் மரியாதையை குறைக்கும் செயல் என்று நினைக்கிறார்கள். குடும்பம் என்றால் ஆண் மட்டுமே. பெண் அவர்களுக்கு அடங்கி நடக்கும் ஒரு உரிமைக்குரிய பொருளாகவே கருதப்படுகிறார்.”

இந்த மனப்பாங்கை மாற்றுவது அவசியம் என்று கூறுகிறார் லீலி ஷா நவாஸ். “பெண் என்பவர் ரத்தமும், சதையும் கொண்ட ஒரு ஜடப்பொருள் அல்ல; மனமும், உணர்வும், உணர்ச்சிகளும் கொண்ட, சக உயிர் என்பதை ஆண்களுக்கு உணர்த்த வேண்டும். அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டியது காலத்தின் கட்டாயம்” என்கிறார் அவர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.